20 April 2024

“என்னடே! மாமனார் வூட்டுல பணம் கிடைச்சாப்ல தெரியுது. முகம் எல்லாம் பன்னிர்ப்பூவா மலர்ந்துருக்கு.” என பொட்டிக்கடை முருகேசன் சிநேகமாக சிரித்து கொண்டே முறுக்கு பாக்கெட்டை எடுத்துக் கொடுத்தான். பல்லுக்கு இடையில் பக்குவமாக கடித்துக் கொண்டே,” இருடே! முடி வெட்டிட்டு வந்து மிச்சத்தை சொல்றன்” என்றபடி சலூனுக்குள் நுழைந்தான் செல்வம்.

தாடியை எடுக்க சொல்லிவிட்டு, தலை சாய்ந்தான். குத்தகை பணத்தை கொடுக்கவே நீட்டி முழக்கிய மாமனாரையும், ஜாடை பேசிய மாமியாரின் வார்த்தைகளும் பஸ்ஸில் தூங்க விடவில்லை. இப்போது கொஞ்சம் தூங்கினால் தேவலை என்று இருந்தது. திடீரென வெளியே முருகேசன் கடையருகே சலசலப்பு கேட்டது. பெரும் குரலெடுத்து மருதுக்குட்டியின் அழுகையின் ஊடே வார்த்தைகளை கோர்க்க வேண்டி இருந்தது.

“எண்ணே மீனாக்கா நம்மள விட்டு போயிடுச்சீண்ணே” என்று கேவலும் அழுகையும் பொங்கிக் கொண்டே சொல்லி முடித்தான்.

எதிரே ரசம் போன கண்ணாடியில் தன் முகத்தை மறுபடி ஒருமுறை தீர்க்கமாக பார்த்தான் செல்வம். காதோரமாய் கிருதாவை செதுக்கிக் கொண்டிருந்த மாரியின் கவனக்குறைவா இல்லை செல்வம் வேகமாக தலை ஆட்டினானா என்று தெரியவில்லை. அவன் கிருதா கையேடு வந்திருந்தது.

“அண்ணே” என பதட்டப்பட்டான் மாரி.

“என்னடா கவனமா செய்ய மாட்டியா?  இப்போ என்ன பண்ணலாம்?” என ஈனமாக கேட்டான் செல்வம். அந்தக்குரலில் தெரிந்தது கோபமில்லை என்பதால் சங்கடமாக நெளிந்தான் மாரி.

“கண்ணாடியில் திரும்பிப் பார்த்து காது பக்கம் முடியில்லாம நல்லா இருக்காது முழுசா செரச்சிடு” என்று செல்வம் சொல்ல குழப்பமும் பயமுமாக பார்த்த மாரி, வேறு வழியில்லாமல் முழுதாக மொட்டை போட்டு விட்டான்.

துக்க செய்தி கேட்டு வேகவேகமாக கடை அடைத்துக் கொண்டிருந்த முருகேசனுக்கு செல்வத்தின் அந்த தோற்றம் முதலில் அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஒருசேர  ஏற்படுத்தியது. இப்போதோ அப்போதோ எனும்படியான சூல்நிறைந்த கருமேகமாய் முகம் இருண்டு கிடந்தது செல்வத்தின் முகம்.

“என்னடே! வீட்டில் என்ன சொல்வியாம்?” தயங்கிய முருகேசனிடம் நிறைய கேள்வி இருந்தது. சலனமற்ற பார்வையை நண்பன் மேல் ஓட்டியபடி, “அதெல்லாம் பார்த்துக்கிடலாம். இதுல 30 ஆயிரம் இருக்கு நல்லா பேன்ட் வாத்தியம் வச்சி சிறப்பா அடக்கம் பண்ணிடு” என்ற செல்வத்தை குழப்பமாக பார்த்தான் முருகேசன்.

“இது நாளைக்கு உனக்கு தேவைப்படும்டே தொழில் முதலீட்டுக்கு தானே வாங்கின?” என்றவனை மேலும் பேச விடாமல் “எனக்கும் கடமை இருக்குல்லா! அந்த வீட்டில் இருக்கும் அந்தக் கண்ணாடியை எடுத்து போட்டுடு” என்றபடியே நடந்தான் செல்வம்.

புரிந்ததற்கு அடையாளமாய், மாலைக்கும், மீனாவுடன் வேலை பார்த்தவர்களுக்கும் சொல்லி வேகமாக நடையைக் கட்டினான் முருகேசன்.

மருதுக்குட்டிக்கு தான் அழுகை ஓயவே இல்லை. “அண்ணே அக்கா, இந்த பத்தாயிரத்தை உன்கிட்ட கொடுக்க சொல்லிச்சு, தனக்கு ஏதாவதுன்னா. உன்கிட்டகொடுத்து ஆக வேண்டிய காரியத்தை பார்க்க சொன்னிச்சு” என்றவனை தேற்ற முடியாமல் இவனுக்கும் அழுகை முட்டியது.

“மருது இதை எல்லாம் வெளில் சொல்லிட்டு இருக்க வேண்டா. சங்க ஆளுங்க புடிங்கிட்டு போயிடுவாங்க’ என காசை மருதுவின் கையில் வைத்து அழுத்தினான். அதற்குள் பெண்கள் வர தொடங்கி இருந்தனர்.


க்கா! நீ இல்லாம இவனுங்களுக்கு துளிர் விட்டு போயிடுமே! காளி மாதிரி காவல் தெய்வமா இருந்து எங்களை காப்பாத்திட்டு இருந்தியே!” என ஒப்பாரி வைத்தாள் சுகந்தா. அவள் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்தது. கொலை, கொள்ளையை மையமாக வைத்து எடுக்கும் அந்த படத்தின் மேக் அப் மேன் கண்ணன் என்றதும் யாருமே போக மறுத்து விட்டனர். மேனேஜர் மோகன் தான் “ஒன்னும் ஆகாது பிள்ளைகளா! நான் சொல்லி வைக்கிறேன். ஒரே ஒரு ஐட்டம் டான்ஸ் தானே” என்று அழைத்து சென்றான். எவ்வளவோ கவனமாக இருந்தும் சுகந்தாவிடம் கைவரிசை காட்டி விட்டான் கண்ணன். தெரு முக்கில் நின்று அழுதழுது மூஞ்சி விங்கி இருந்தவளை, மீனா தான் ஆட்டோ பிடித்து சூட்டிங் இடத்துக்கு அழைத்து போனாள். கண்ணை சட்டையை இழுத்துக் கொண்டு வெளியே வந்தபோது, ” யாராவது கிட்ட வந்தீங்க ஆஞ்சிபுடுவேன்” என கண்களை உருட்ட எல்லாரும் ஒதுங்கி கொண்டனர். கண்ணனின் முகத்தில் அவள் அறைந்த விதத்தை பார்த்து நாலு அடி எல்லோரும் பின்னால் நகர்ந்து விட்டனர். ஆத்திரம் தீராமல் முதுகில் நாலு வைத்தாள்.

“ஏன்டா நாறப்பயலே! டான்ஸ் ஆடுற பொண்ணுன்னா மேல கை வப்பியோ? நீ எப்படி உன் குடும்பத்தை காப்பாத்த வேஷம் போட்டு விட வந்தியோ அதே மாதிரி அவ குடும்பத்தை காப்பாற்ற வேஷம் போடுறா. இனிமே எவனாச்சும் சைட் ஆர்டிஸ்ட் மேல கை வச்ச, சங்கம் அப்புறம் தான். எனக்கு தான் முதலில் பதில் சொல்லணும்” என சீறி விட்டு நடந்தாள்.

அரசல் புரசலாக மீனாவின் செயல்களை கேட்டிருந்தாலும் இந்த பிரச்னை பெரிதாக வெடித்தது. அன்றிலிருந்து அவளை படத்துக்காக அழைப்பது குறைந்து போனது மெல்ல, மெல்ல துணை நடிகர்கள் சங்கமும் அவளை கண்டு கொள்ளாமல் விட, ஒரு கட்டத்தில் மொத்தமாக சினிமாவை விட்டு விலகினாள்.

“அண்ணே வீட்டுல இருந்தே மாவு அரைச்சு தாரேன் வித்துக்குடுண்ணே” என்றவள் 3 மாதம் முன்பு தான் முருகேசனின் கடனை அடைத்து முடித்தாள்.

“ஏம்புள்ள அந்த கண்ணாடிய வித்தா கடன் கொஞ்சம் குறையுமில்ல?” என்றவனிடம், “அத மட்டும் சொல்லாத அண்ணே என் திறமைக்கு கிடைத்த பரிசு. அந்த நடிகை பானுசித்ராக்கு டூப் போட்ட போது, மேல் இருந்து குதிச்சு ஆட வேண்டிய ஷாட். நான் தான் பண்ணேன். பாதி பாட்டு லாங் ஷாட் தான். ஆடும்போது தெரியல அன்னிக்கு கணுக்கால் வீங்கி மூணு மாசம் படுத்த படுக்கையா கிடந்தேன். அந்த டான்ஸ் பாட்டுக்காகவே அடுத்தடுத்து 3 படம் அவங்களுக்கு புக் ஆச்சு. மனசு கேக்காம, உனக்கு என்ன வேணும்னு என்னை நேரில் வந்து பார்த்து கேட்டுச்சு. அப்போ தான் நீங்க மேக்கப் போடுறப்போ பெரிய கண்ணாடி முன்னாடி உட்காருவீங்கள்ல அந்த லைட் போட்டக்கண்ணாடி தாரியளானு கேட்டேன். அடுத்த நாளே வீட்டுக்கு அனுப்பி வச்சுது” என சந்திரமுகி ஜோதிகா போல் அந்த சம்பவத்தை மீனா விளக்கியது ஏதோ நேற்று நடந்தது போல் இருந்தது. திடீரென போன் அடிக்க தலையை சிலுப்பி நடப்புக்கு வந்தான் முருகேசன்.


ப்ப எந்த பொண்டாட்டி செத்து போயிட்டான்னு, இப்படி மழிச்சுட்டு வந்து நிக்க? இது அந்த ஒண்டிக் கருப்புக்கு அடுக்குமா? பணம் குறைச்சு கொடுத்தாங்கன்னு. வேண்டுதலுக்கு வச்சிருந்த முடிய மொட்டை அடிச்சுக்குவியா? இதுக்கு இன்னிக்கு நியாயம் கிடைச்சே ஆகணும்” என தாண்டவமாடினாள் முத்துலட்சுமி,

“அட! அந்த சலூன் பையன் தெரியாம கத்தி போட்டுட்டான். அரைகுறையா இருக்குமேன்னு தான் மொட்டை போட சொன்னேன்.” விட்டேத்தியாக பதில் சொல்லிவிட்டு குளிக்க போனான் செல்வம்.

உடைந்து போன அலுமினிய சட்டியில் தண்ணீரை எடுத்து முகத்தில் ஊற்றப் போனபோது அந்த நமுட்டு சிரிப்பு முகம் நிழலாடியது. அந்த பட ஷூட்டிங்கில் தன் மேல் மட்டும் நிறைய மஞ்சள் தண்ணீரை ஊற்றிய மீனாவை பார்க்க தினமும் ஸ்டூடியோ போக தொடங்கினான்.

“ஏ புள்ள பங்காரு! இங்க பாரு”

“யோவ்! சத்தமா சொல்லாத! இங்கன யாருக்கும் என் நெசப்பேர் தெரியாது” “அதனால் தான் நான் சொல்லி கூப்பிடுறேன்”

“ம்கும்! பேரு மட்டும் தான் கூப்பிட முடியும். வேற ஒன்னும் பண்ண முடியாதாக்கும்” என முகத்தை நொடித்தபோது, நுனி மூக்கு மச்சம் வரை சிவந்திருந்தது.

“டே செல்வம் அந்தப்புள்ள மீனாவ பார்த்தியா? மாஸ்டரு மஞ்சத்தண்ணி ஊத்த சொன்னா அம்புட்டு பேரு நிக்கோம். ஒன்ன தான் தேடி வந்து ஊத்துது. அந்தானவாக்குல ஏதாவது இருக்குமோ” என கதிர் காதில் கிசுகிசுத்தபோது, செல்வம் வானத்தில் பறந்து கொண்டிருந்தான். பெருநகரின் ஓரத்தில் சினிமா கனவோடு வருபவர்களின் புகலிடமாய் இருக்கும் அந்த காலனிக்கு செல்வம் வரும்முன்னே மீனாகுமாரி குடியிருந்தாள். பதின்பருவத்தின் திரட்சியும், கண்ணை உறுத்தாத அழகும், நீதான் என் படத்தில் ஹிரோயின் என எல்லா அசிஸ்டெண்ட் டைரக்டர்களையும் சொல்ல வைத்தது. என்ன காரணமோ திடீரென டூப், குரூப் டான்சராக மாறி போனாள் மீனா. “ஹமம் இந்தியில் அம்புட்டு பெரிய நடிகை பேரு வச்சு என்ன பிரயோசனம்? இவ எதுக்கும் ஒத்து வர மாட்டா என்னையும் வாழ விட மாட்டா” என பர்வதம்மா போவோர் வருவோரிடம் புலம்பிக் கொட்டினாள்.

ஒரு நாள் நண்பனுடன் ஷூட்டிங் பார்க்க போனவன், அதன்பின் மீனாவை பார்க்க சென்று அதையே வழக்கமாக மாற்றிக் கொண்டான்.

“என்னய்யா துண்டு துக்கடா ரோல் கிடைச்சா கூட நடிப்ப போல? இங்கேயே சுத்திக்கிட்டு இருக்க. போய் வேலை வெட்டிப் பார்க்கலாம்ல?” என யூனிட் சாப்பாட்டை வாங்கிக் கொண்டு செல்வத்தின் அருகே அமர்ந்தாள் மீனா முதலில் திகைத்தவன் சமாளித்துக் கொண்டு  “இதை விடசம்பளம் எங்க கொடுக்கான்” என அருகே தெரிந்த உதடுகளை ரசித்தவாறு ஏதோ சொல்ல வேண்டும் என சொன்னான்.

“உன்ன நம்பி வரவ, சைட் ஆர்டிஸ்ட்னு சொன்னா கட்டிப்பாளா? ஒழுங்கா சோறு போடுவியோ என்னமோன்னு பயப்பட மாட்டா?”.

“இங்கயும் வரக்கூடாதுன்னா, உன்ன எப்படி பாக்குறதாம்?”

“நினைச்சேன். என்னடா, வடக்கப் போற காத்து தெக்க வீசுதேன்னு. போ! போ! இதெல்லாம் சரிபட்டு வராது” என்றபடி கை கழுவ சென்றாள். நம்பிக்கையை வார்த்தைகள் கொடுக்கவில்லை என்றாலும் உதட்டோர புன்முறுவல் அவளின் மனதை சொன்னது.

அன்று மாலை முருகேசன் வந்தான்.” ஏம்டே அந்தப்புள்ள மீனாக்கிட்ட என்ன சொன்னியோ?”

“அந்த மினுக்கி உன்கிட்ட வந்து வத்தி வச்சிட்டாளா”.

“எடே அந்த பிள்ளைய தப்பா பேசாதேயும். ஆறு வயசுல அவங்க அம்மா பர்வதம்மா ஆந்திரால இருந்து சினிமால நடிக்க கூட்டி வந்தப்போ எங்கப்பா கிட்ட தான் வந்து நின்னாங்க. வாங்கின மளிகைய அடைக்க, அந்தப் புள்ள வீடு துடைச்சு கொடுத்துச்சு. ஒரு நா மேக்கப் டெஸ்டுக்கு போறேண்ணேனு சந்தோஷமா சொல்லிட்டு போச்சு. ஆனா அங்க டைரக்டரு தயாரிப்பாளரு இன்னும் ரெண்டு பேர் இருக்கவும் பயந்துட்டு வந்திடுச்சி. அம்மா கூட பரவால்லனு சொல்றாங்கண்ணே. சொல்லிட்டு கண்னு கலங்கி நின்னப்போ, பரிதாபமா போச்சு. அன்னிலிருந்து அம்மாக்கும் பொண்ணுக்கும் ஆகாது. தனியாக சோறு பொங்கி சாப்பிடுது அது நினைச்சிருந்தா இன்னிக்கு பெரிய ஆளா வந்திருக்கும்டே அது மனசுல ஆசைய வளர்த்துட்டு கை விட்ராதலே. அது பாவம்” என குலதெய்வத்தின் மீது சத்தியம் வாங்கி சென்றான்.

சீக்கிரம் அம்மாவிடம் சொல்லி திருமணம் வைக்க வேண்டும். அதற்காகவே நிரந்தர வருமானம் ஈட்டிக்கொள்ள இரவு நேர டிபன் கடை திறந்தான் செல்வம். ஷூட்டிங் வேன் கடந்து செல்லும் போதெல்லாம் கண்கள் மீனாவை தேடும். ஒருவேளை அவளும் உள்ளே இருந்து அவனை பார்க்கிறாளோ? நினைக்கும்போதே சிரிப்பு முகத்தில் தொற்றிக் கொள்ளும். ஒருநாள் தூரத்து சொந்தம் என மீனா வீட்டுக்கு மருதுக்குட்டி வந்து சேர்ந்தான் அடிக்கடி டிபன் வாங்க வந்தான். அவனிடம் மீனா குறித்து விசாரிக்க முடியாமல் அம்மா கூடவே இருப்பாள். அன்று மீனாவே வந்தாள்.

“என்னவாம், வசதியானவாக எல்லாம் ரோட்டுக்கடைக்கு வந்திருக்காக?” என யாரோ போல கேட்க கண்களில் நீர் பொங்க பார்சல் வாங்கி வேகமாக ஓடி விட்டாள். மீனாவின் அம்மா இவளிடம் சண்டை போட்டு, அவளின் சொந்த ஊருக்கே சென்று விட்ட விவரம் அதன்பின் தான் செல்வத்துக்கு தெரிந்தது.

அந்த ஞாயிற்றுக்கிழமை மீனாவுக்கு லீவ் என்பதை தெரிந்து கொண்டு எப்படியோ துணிச்சலை வரவழைத்துக் கொண்டு அவள் வீட்டுக்கு சென்றான். கீரைக்கட்டாய் வதங்கி போன மீனா சோர்வாக, அவனை வரவேற்றாள். “பங்காரு எதையும் மனசுல வச்சிக்காத புள்ள!. நான் ஏதோ ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததனால் சந்தோஷத்துல பேசிட்டேன்”.

“விடுய்யா! உம்மேல என்ன தப்பு? அன்னிக்கு அம்மா சண்டை ரொம்ப போட்டுச்சு, சம்பாதிக்கணும்னு. மருதுவ இப்பதான் அனுப்பி விட்டேன்.

“இந்தா புள்ள எனக்கு இப்பவுட்டா தைரியம் வராது நாம கல்யாணம் செஞ்சுக்கலாமா?”.

திகில், குழப்பம், பயம் எல்லாம் சேர. ‘இங்க வாயா! என அந்த கண்ணாடி முன் அழைத்து சென்றாள் மீனா. அந்தக் கண்ணாடியின் பின்னணியை சொல்லி விட்டு, ” என்னால ஹீரோயின் தான் ஆக முடியல. ஒரு நல்ல சீன்ல பேர் வராப்ல நடிக்கணும்யா. இந்தி நடிகை மாதிரி இல்லாட்டியும், நல்ல நடிகையாகனும்கிற என் கனவை நிறைவேத்தனும். ரெண்டு படத்தில நல்ல சீன் சொல்லி இருக்காங்க. ஒரு ஆறு மாசம் மட்டும் போகட்டும். கொஞ்சம் பொறுத்துக்கய்யா” என கண்கள் விரிய அவள் அவனை கெஞ்சியபடியே சொல்ல, அதன் ஆழத்தை ரசித்து தனக்குள் அவள் வாசனையை உள்வாங்கிக் கொண்டே தலையாட்டினான் செல்வம். மனம் கசிந்து போனவளுக்கு இறுக்கமாக கட்டிக் கொள்ள தோன்றியிருக்க வேண்டும். அவளின் கை அவனை வளைத்தபோது அவனும் தன்னிலை மறந்து இருந்தான். அந்த முன்இரவிலும் முத்தமும், அவள் கதகதப்பும் இன்னும் எத்தனை நாளும் காத்திருக்கலாம் என தோன்றியது செல்வத்துக்கு. பின்னர் அவ்வப்போது காதோர கிசுகிசுப்பும், முத்தமும் அவன் வாழ்கையில் வசந்த காலமாகக் கழிந்தது அவனுக்கு.

அன்று கடையை திறந்த சில நிமிடத்தில் கூட்டம் கூட தோசை ஊற்றிக் கொண்டு இருந்தவனை “மாமா, மாமா ஓடியா! அக்கா கூப்புடுது” என கையை பிடித்து இழுத்தான் மருதுக்குட்டி. சட்னியை தாளித்துக் கொண்டிருந்த அம்மா வெளியில் வந்து, “யாருடா நீ பொடிப்பயலே? வேலை நேரத்துல கூப்பிட்டு இருக்க?” என விரட்டி விட்டாள். விடியற்காலை 3 மணிக்கு எழுந்து செல்வம் வெளியில் போனபோது அம்மாவும் விழித்துக் கொண்டாள்.

கிழிந்த நாராய் சுட்டிலில் கிடந்தவளை பார்க்க முடியாமல் அழுகை வர, ”என்னய்யா? சாவுக்கு கூப்பிட்டா காரியத்துக்கு வந்து நிப்பியா?” அவள் கேள்விக்கு பதில் சொல்ல கூசியபடி மேலே மெதுவாக சுத்தும் பேனை நோக்கினான்.

“அப்பப்போ இடது பக்கம் வயித்துல வலி வரும். ஏதாவது மருந்து சாப்பிட்டு சரி பண்ணிக்குவேன். சின்ன வயசுல மாடி வீட்டுல வேலை பார்க்கும் போது, அவங்க பையன் தள்ளி விட்டான் அப்போ பக்கத்துல இருந்த டேபிள்ல மோதிக்கிட்டேன். ஒருவாரம் ஜுரம், வலி. அதை அப்படியே விட்டுட்டேன். இன்னிக்கு போனா ஸ்கேன் அது, இதுன்னு சொல்லி, கணையத்திலும், குடலிலும் பிரச்னை இருக்கு. ஆபரேசன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. என்ன பண்ணலாம்னு சொல்லு” என அவனை காக்க வைக்காமல் சொல்லி முடித்தாள் மீனா,

இவ்ளோ பெரிய விஷயத்த சொல்லிட்டு என்ன பண்ணலாம்னு கேட்டா யோசிக்கிறேன் இரு”

“ஆமா சங்கடம் என்ன சொல்லிக்கிட்டா வருது?. அவ்வளவு நோவிலும் அவள் முகம் அவனுக்கு உன்மத்தத்தை வர வைத்தது.

“சங்கத்துல கொஞ்சம் சேமிப்பு இருக்கு கடன் கேட்டா தருவாங்க”. “அது இல்ல பங்காரு. அம்மா கிட்ட கல்யாணத்த பத்தி பேசலாம்னு நினைச்சேன். இப்போ சேமிச்ச பணம் ஆபரேசன் பண்ணா அடுத்த வருசம் தான் கல்யாணம் செய்ய முடியும்னு யோசிக்கிறேன்”. அவன் தயங்கிய காரணம் புரிய முகம் செவ்வரளியாய் சிவந்தது.

”அப்படினா அம்மா கிட்ட சொல்லி அனுமதி வாங்கிக்க. ஒரு மாசம் கழிச்சி ஆபரேசன் பண்ணிக்கிறேன்” என்றவளின் முகத்தில் நிம்மதி கொஞ்சம் தெரிந்தது. அப்படியே கையை பிடித்து அழைத்து சென்று அந்தக் கண்ணாடி முன் அமர செய்தான்.” இதுல நீ உக்கார்த்தா கம்பீரமா, அழகா இருக்க புள்ள. அதை விட்டுட்டு கட்டில்ல நீ கிடக்கறத பாக்க முடியல. விடிஞ்சதும் நான் அர்சி மூட்டை வாங்க வராப்ல வாரேன். ஆஸ்பத்திரி போயிட்டு வந்துடலாம். டாக்டர்கிட்ட ஆபரேசனுக்கு நாள் இருக்கான்னு கேட்கணும்” என்றவன் மேல் மனஊஞ்சல் வேகமாக ஆட சாய்ந்து கொண்டாள்.

டாக்டரை பார்க்க எத்தனை மணிக்கு கிளம்புவது என யோசித்துக் கொண்டே காலையில் இட்லி சாப்பிட உட்கார்ந்தபோதுதான், அம்மாவுக்கு போன் வந்தது. அம்மாவின் அலறலில் தட்டை போட்டு விட்டு ஓடினான் செல்வம். தாய்மாமன் நெஞ்சு வலியில் பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்காங்களாம் என்ற ஒரு வார்த்தையை கேட்பதற்குள் அம்மாவின் ஓலம் அரைமணி நேரம் கடத்தி இருந்தது. ஊருக்கு அவசரமாக செல்வதை, மீனாவுக்கு எப்படி தகவல் சொல்ல என யோசித்துக் கொண்டே முருகேசனிடம் மட்டும் அவளை ஆஸ்பத்திரிக்கு கூட்டி செல்ல சொல்லி விட்டு பஸ் ஏறினான். ஒரு வாரம் கழித்து வந்தபோது செல்வம் முத்துலட்சுமியின் கணவனாகி இருந்தான். யாரையும் நிமிர்ந்து பார்க்க துணிவில்லை. கடையையும் திறக்கவில்லை. முருகேசன் கூட முகத்தை திருப்பிக் கொண்டு போனான். ஆனால் முத்துலட்சுமி தான் முருகேசனை தேடி வந்தாள். உற்ற சிநேகிதன் என்பதால் செல்வத்துக்கு அறிவுரை சொல்லுமாறும், தாலி கட்டின நாளில் இருந்து இதுவரை பேசவில்லை என்பதும் வீட்டில் ஒரு பொருள் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் கூற செல்வத்தை பார்க்க வந்தான்.

“என்னடே நடந்துச்சு?”.

“அம்மாவுக்கு ஏதோ சந்தேகம் வந்திருக்கு. மாமாகிட்ட சொல்லி கல்யாணத்தை ரெடி பண்ணிட்டு என்கிட்ட பொய் சொல்லி கூட்டிட்டு போச்சு. அங்க போன அடுத்த நாளே கல்யாணம்னு சொன்னப்போ நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். எங்க அம்மா செத்துடுவேன்னு ஒரு பக்கம் மிரட்ட, இந்த முத்துலட்சுமி புள்ள கிணத்துல குதிச்சிடுச்சு. எல்லாம் நாடகம் மாதிரி நடத்தி, என் நிலத்தை குத்தகைக்கு எழுதி வாங்கிட்டு பொண்ணையும் கட்டி வச்சிட்டாரு மாமா” என வார்த்தை தடுமாறி அழுதான் செல்வம்.

விவரம் தெரிந்த பின் மீனா அவனை பார்க்க அனுமதிக்கவே இல்லை. தான் துரோசும் செய்ததாக நினைத்து வேறு திருமணமாவது மீனா செய்து கொள்வாள் என முருகேசனையும் உண்மையை சொல்ல விடவில்லை. அதன்பின்னர் மீனா கடைக்கு வரும்போது டீக்கடைக்குள் மறைந்து நின்று பார்ப்பது செல்வத்தின் வழக்கமானது. பல நாட்கள் தன்னுடைய கோழைத்தனத்தை எண்ணி வெட்கப்பட்டு அழுதான். இதோ பத்து ஆண்டுகள் கடந்து விட்டது. இவன் மீதான கோபத்தில் யாரையும் திருமணம் செய்யாமல் இருந்து விட, அந்த குற்றவுணர்ச்சி செல்வத்தை வருத்திக் கொண்டே இருந்தது.

இதோ இன்று அவனது மானசீக மனைவி மரணமடைந்ததும், அதற்கான துக்கத்தை வெளிக்காட்ட கூட முடியாமல் கிணற்றடியில் கொட்ட வேண்டி இருக்கிறது. முருகேசன் எல்லாவற்றையும் சரியாக செய்வான் தான். இருந்தாலும் மனசு கேட்காமல் எழவு வீட்டில் போய் நின்றான் செல்வம். சில கண்கள் ஒன்றோடொன்று ரகசியம் பேசினாலும் யாரும் எதுவும் கேட்கவில்லை. அந்த லைட் போட்ட கண்ணாடி மட்டும் மாசின்றி துடைத்து வைக்கப்பட்டு இருந்தது. ஆயிற்று மீனாவை தூக்கி விட்டார்கள். இன்னும் சில நிமிடங்களில் அவள் சிதை எரியூட்டப்பட இருக்கிறது. யாரோ போல் தூரமாய் நின்று கண்ணீர் உகுத்துக் கொண்ட செல்வத்துக்கு, இனி அங்கு வேலை இல்லை. அடுத்த நாள், குழந்தை, மனைவியுடன் பஸ் ஸ்டாண்டில் செல்வத்தை பார்த்த முருகேசனுக்கு எதுவும் ஆச்சரியமாக இல்லை.

“பணம் கம்மியா கொடுத்துட்டாரு எங்கப்பாருன்னு, விவசாயம் பார்க்க ஊருக்கே போலாம்னு கூட்டிட்டு போறாரு அண்ணே. இந்த அநியாயம் எங்கயாச்சும் உண்டா?”  என அங்கலாயத்த முத்துலட்சுமியிடம் கலர் பாட்டில், பிஸ்கட் கொடுத்து விட்டு செல்வத்திடம் திரும்பினான் முருகேசன் ”அந்தக் கண்ணாடிய தூக்கிப் போட்டுடு” என்றபடியே பஸ் ஏறினான் செல்வம்.


  • பவானி பழனிராஜ்.

எழுதியவர்

பவானி பழனிராஜ்.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x