26 April 2024

வீட்டருகாமையில் வசிக்கும் முதியவர்களிடம் பேச்சுக் கொடுத்தாலே தெரியும்; முதுமை வரமா? சாபமா? இன்பமா? துன்பமா? விருப்பா? வெறுப்பா? நீண்ட காலம் வாழ்வதைவிட சாகும்வரை ஆரோக்கியத்துடன் இருக்கணும்; படுக்கையில கிடத்தாம ஆண்டவன் மேலே எடுக்கணும். இதுதான்  பெரும்பாலான முதியோரின் இன்றைய ஏக்கம். ஆரோக்கியமான உணவு, எளிய உடற்பயிற்சி, போதிய தூக்கம், சூழ்ந்திருக்கும் உறவுகள் முதுமைக்காலத்தை மகிழ்ச்சியானதாக மாற்றும். மேலைநாட்டில் இது சாத்தியம், ஆனால் இங்கு பலருக்கு இது சாத்தியமாகவில்லை என்பதே சத்தியம்.

முதியோர்கள் பொக்கிஷம்

மேலைநாடுகளில் தனித்து, தத்தம் கடமைகள் ஆற்றி, சொந்தக்காலில் முதியோர்கள் நிற்பதை பெரிதும் காண முடிகிறது. நான் குடியிருக்கும் அடுக்குமாடியில் 7 வது தளத்தில் வசிக்கும் 98 வயது மூதாட்டி இன்றும் லிப்டில் கீழிறங்கி, சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்று பொருட்களை வாங்கி, தானே சமைத்து உண்பதை காண்கிறபோது ஆச்சரியம் மேலிடுகிறது. இங்கு பல முதியோர்கள் இங்ஙனமே. அவர்களது உடல் நலம், பொருளாதார பலம், மற்றும் உறவு நிலை சமநிலையில் இருப்பதே காரணம். இங்கு எல்லா முதியவர்களுக்கும் முதியோர் ஓய்வூதியம் உண்டு. சேமிப்பது அனைத்தையும் பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு கையறுநிலையில் நிற்கும் சூழலில்லை. பிள்ளைகளை குறிப்பிட்ட வயதிற்குப் பின் சுயமாக செயல்பட அனுமதிப்பதால் சொந்தக்காலில் நிற்கும் பக்குவம் முதுமையிலும் தொடர்கிறது.

நமது முதியோரின் சூழலில் பல ரகங்கள். பிள்ளைகள் அல்லது உறவினர்களின் தயவில் வசிப்பது, கணவன் மனைவி இருவர் மட்டும் தனியாக வசிப்பது அல்லது ஆணோ அல்லது பெண்ணோ தனியாக வசிப்பது என்கிற நிலை. இதுதவிர பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், பிள்ளைகள் அல்லது உறவினர் எவரும் இல்லாதவர்கள், ஏழ்மையில் உழல்பவர்கள், வீதிகளை வாழ்விடமாய் கொண்டவர்கள், முதியோர் இல்லங்களில் வாழ்வோர் எனவும் பலர் உள்ளனர். இங்குள்ள முதியோர்களில் 71 சதவீதம் பேர் முதுமையிலும் உழைக்கின்றனர். ஆனால் உழைப்பின் பணம் முதிர்வயதிலும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அல்லது மருத்துவ செலவீனத்திற்கு என்றே கரைந்து போகிறது. தற்போதைய இந்திய மக்கள் தொகையில் சுமார் 10 கோடி பேர் 60 வயதைக் கடந்தவர்கள். இவ்வெண்ணிக்கை 2050 ஆம் ஆண்டில் 30 கோடியாக அதிகரிக்கும் என்கிறது புள்ளிவிபரம். இங்கும் முதியோர் நலன் குறித்த தொலைநோக்குப் பார்வையும், தகுந்த திட்டமிடுதல்களும் அவசியம்.

சட்டம் மட்டும் தீர்வல்ல

இத்தாலியின் மிலான்நகரில் CASA VERDI என்கிற ஓய்வு இல்லம் உள்ளது. 16 டிசம்பர் 1899 – யில் ஜோசேப் வெர்தி எனும் இசைக்கலைஞன் தன் சொந்த செலவில் கட்டிய இவ்வில்லத்தில் 65 வயதை எட்டிய பாடகர்கள், இசைக்கலைஞர்கள் தங்கள் முதுமைக் காலத்தை மகிழ்வோடு களிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று உலகெங்கும் முதியோர் பராமரிப்பு என்பது சமூகத்துக்கும் அரசுக்கும் ஏற்படும் பெரும் பொருளாதார சுமையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் ஜப்பான் முதியவர்களை நாட்டின் பொக்கிஷம் என்றழைத்து, அவர்களை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தி, அவர்களால் ஏற்படக்கூடிய பொருளாதார சுமையைக் குறைக்கிறது. நம் நாட்டில் சட்டம் இயற்றி பெற்றோரை பராமரிக்கும் நிலைக்கு சமூகங்கள்  தள்ளப்பட்டிருப்பது வேதனை தரும் விசயமே.

14 டிசம்பர் 1990 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அக்டோபர் 1 ஆம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக அறிவித்தது. 1999 – யில் இந்தியா மூத்த குடிமக்களின் தேசிய கொள்கையை வெளியிட்டது. அதன்படி மத்திய மாநில அரசுசார் துறைகள், மருத்துவமனைகள், போக்குவரத்துத்துறைகள் போன்றவற்றில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டது. அவை இன்றளவும் நடைமுறையில் உள்ளன. தொடர்ந்து இந்தியளவில் 2007 – யில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. தமிழ்நாட்டில் 2009 – யில் அதற்கான விதிகள் இயற்றப்பட்டன. இன்றளவும் மூத்த குடிமக்களின் நிலைமை நம் நாட்டில் சரிவர இல்லை என்கிற உண்மையையே மாறிமாறி இயற்றப்படும் சட்டங்கள் புலப்படுத்துகின்றன.

பிரச்சனைகளும் தீர்வுகளும்

முதியோர்சார் பிரச்சனைகள் ஏராளம் இருப்பினும் அவற்றை இருவகைப்படுத்தலாம். ஓன்று, உடல் மற்றும் மனம்சார் பிரச்சனைகள். மற்றொன்று, பொருளாதாரம் மற்றும் குடும்ப உறவுசார் பிரச்சனைகள். மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்படுவது இயற்கை. வெளியில் எங்கும் செல்ல முடியா வீட்டுச்சிறைவாசம், சிறுசிறு வேலைகூட செய்ய இயலா உடல் பலவீனம், அனைத்திற்கும் பிறரைச் சார்ந்திருக்கும் சூழல், எழுதப் படிக்க இயலாமை, எப்பொழுதும் மருந்து மாத்திரையோடு அலைதல் உள்ளிட்ட பல பிரச்சனைகள். இதனால் வாழ்வில் வெறுப்பு, பயம், தனிமை உணர்வு, தான் ஒன்றுக்கும் பயனில்லாதவன் என்கிற மனப்பாங்கு மற்றும் பிறரால் உதாசீனப்படுத்தும் சூழல் இயல்பாகவே முதியோரிடம் தொற்றிக்கொள்கிறது.  கூடவே மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஏற்பட்டு வாழ்வில் மகிழ்ச்சியின்றி நிம்மதியின்றி பல முதியவர்கள் இருக்கிறார்கள். இத்தகு உடல் மனம்சார் பிரச்சனைகளை எளிதாக குணப்படுத்த முடியும். இத்தருணங்களில் முதியோர்கள் எதிர்பார்ப்பது கொஞ்சம் அன்பு, கரிசனை, இன்சொல், கவனிப்பு, உடனிருப்பு அவ்வளவுதான். குடும்பத்தவர் அல்லது அவர்களைச் சுற்றி இருப்பவர்கள், அக்கறையோடு சிறுசிறு உதவிகள் செய்து, உடனிருந்து ஆற்றுப்படுத்தி உதவ முன்வர வேண்டும்.

முதுமையில் எழும் பொருளாதாரப் பிரச்சனைக்கு அளவேயில்லை. முதிர்வயதில் எல்லாம் பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்;கள் என்கிற ஆதித நம்பிக்கையில் உழைப்பின் இறுதி இரத்தத்தைக்கூட பிள்ளைகளுக்காக தாரைவார்த்த பெற்றோர்களே இங்கு அதிகம். பிள்ளைகளின் நிலையோ வேறு. வேலையின் காரணமாக நகரத்துக்கு தன் குடும்பத்தோடு குடியேறியதால் முதிர்பெற்றோரை கவனிக்க வீடுகளில் இடவசதியில்லை அல்லது கிராமங்களிலிருந்து நகரத்துக்கு பெற்றோர் வர விரும்பவில்லை என்று ஏதாவது ஒரு காரணம் சொல்கிறார்கள். ஊர்களில் இருப்பவர்கள் தங்களது வறுமையைக் காரணம் காட்டுகிறார்கள். முதிர்வயது பெற்றோரின் பொருளாதார கையறுநிலையே இதற்குக் காரணம். முதியோராகும் போது தங்கள் பிள்ளைகள் உட்பட ஏனையோருக்கு பாரமாக இல்லாமல் இருக்கத்தக்கதாக பொருளாதார பலம் கொண்டிருப்பதும், தங்களது சேமிப்பின் ஒரு பகுதியை முதுமை காலத்திற்கு என்று ஒதுக்கி வைத்தலும் அவசியமானது. இதனை உடலில் வலுவுள்ளபோதே செய்தாக வேண்டும். அத்தோடு நடுத்தர வயதிலிருந்தே தகுந்த வாழ்க்கை முறைமையைக் கடைப்பிடித்து உணவுப்பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்தி, உடற்பயிற்சி, நற்சிந்தனைகள் தரும் புத்தக வாசிப்பு, சமூக சேவைகள் போன்றவற்றில் கவனத்தை செலுத்தி நோய் தவிர்த்து வாழுதலும் அவசியம். அரசும் முதியோர் உதவித்தொகை வழங்குவதை சரிவர கடைபிடிக்க வேண்டும். இங்கு சுமாராக 10-15 சதவீதம் முதியோர்தான் ஓய்வூதியம் பெறுகின்றனர். 84 சதவீதம் பேருக்கு ஓய்வூதியம் ஏதும் கிடையாது. எனவே வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் முதியோருக்கு குறைந்தது மாதம் ஒன்றிற்கு ரூ. 3000 முதியோர் உதவித்தொகை வழங்குவதன் வழியாக முதியோரின் தியாகத்திற்கு அங்கீகாரம் வழங்க முடியும்.

இறுதியாக, இந்திய அரசியல் சட்டத்தின் 41, 47 ஷரத்துக்கள் மூத்த குடிமக்களின் நலன் பேணுவதும், அவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிட்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதும் அரசின் கடமை என்கிறது. முதுமையின் பெரும் செலவீனம் மருத்துவ செலவீனமே. மேலை நாடுகளில் முதியோர் மருத்துவம் (GERIATRICS) தனியொரு துறையாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இம்முறை இங்கும் செயல்படுத்துதல் அவசியம். கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நலத்துறை துவங்கி கிராமப்புறங்களின் நாள்பட்ட  நோய்களினால் முதுமையில் வாடுவோரைத் தேடிச்சென்று மருத்துவ சேவையாற்றும் பணிகளை அரசு விரைந்து ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று இன்று முதியவர்களிடம் பயத்தையும் மன அழுத்தத்தையும் அதிகரித்து உள்ள நிலையில் இச்சேவை மிகமிக முக்கியம். ஒரு ஆறுதலான வார்த்தைக்கோ, ஒற்றை பாரசிட்டமால் மாத்திரைக்கோ, ஒரு கட்டிலுக்கோ, ஒருவேளை உணவிற்கோ காத்திருக்கும் முதியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நல்ல சமாரியர்கள் ஆவோம். முதுமைக்கும் மரணத்திற்கும்  இடைப்பட்ட காலத்தில் ஆதரவு மிகச்சிலரே.


  • ம. டைட்டஸ் மோகன்

எழுத்தாளர், ஆய்வு மாணவர், இத்தாலி

 

 

எழுதியவர்

ம.டைட்டஸ் மோகன்
ஆய்வு மாணவர், மிலான்நகர்.

குமரி மாவட்ட எழுத்தாளர். இதுவரை தன்னம்பிக்கை, இளையோர் முன்னேற்றம், அரசியல், ஆன்மீகம் சார்ந்த 42 நூல்களைப் படைத்துள்ளார். சில நூல்களை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார்.  தற்பொழுது இத்தாலியின் மிலான் நகரில் தனது முனைவர்பட்ட ஆய்வினை அறநெறி கோட்பாடுகளில் மேற்கொண்டுள்ளார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x