
மரம் சொன்னது
இரத்த சிதறலோடு துண்டிக்கப்பட்ட விரல் ஒன்று என் மீது விழுந்த போது மீண்டுமொருமுறை மோனத்திலிருந்து விழித்தெழுந்தேன்.
என்னருகில் இருக்கும் மரணமடைந்த மனிதர்களுடன் தான் பேசுவேன். குறிப்பாக அவர்களின் இரத்தத் துளிகளோ சிதைந்த உடல் பாகத்தின் ஏதாவது ஒரு பகுதியோ என் மீது கண்டிப்பாக தெறித்திருக்க வேண்டும். வாசம் கூட நற்கடத்தியாக செயல்பட முடியும். ஒருவரின் வாசத்தில் அவரது வாழ்வு முழுவதும் பதியப்பட்டுள்ளது. காற்றில் கலந்துள்ள உயிர்ப்பின் விகாசிப்பை வாசத்தின் மூலம் அறிந்துகொள்வது ஒரு வழிமுறை. மூச்சை உள்ளிழுக்கும்போது பௌதிகத்தனமான விஷயம் மட்டும் உள்ளிழுக்கப்படுவதில்லை என்பதையறிந்து கொள்ள நீங்கள் மரமாகயிருந்தால் மட்டுமே சாத்தியம். அதனால் தான் இது ஒருமுனைத் தொடர்பு. நான் பேசுவதை மட்டுமே அதனால் கேட்க முடியும். இறந்து போன மனித ஆன்மா அந்த விபத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள என் பேச்சு உதவுகிறது என்பது எனது கற்பிதமாகக் கூட இருக்கலாம் என்று நீங்கள் கருதினால் அது உங்கள் கற்பனை.
அந்நியமில்லாத இருமுனைத் தொடர்பும் உண்டு. அது அத்தி பூத்தாற்போல் எப்போதாவது உதயமாகும் காற்றின் உயிர்ப்பு சூட்சமத்தை உணர்ந்த மனிதன் தவிர்த்து அருகிலிருக்கும் சகமரமாயிருந்தால் கிளைகளாலும் இலைகளாலும் உரசிக் கொள்வதன் மூலம் நுட்பமான முறையில் செய்திகளை பரஸ்பரம் கடத்திக் கொள்வோம். காற்றின் வழி பரிமாற்றத்தைத் தவிர பூமிக்கடியில் இறங்கி, பரவி படர்ந்திருக்கும் சல்லிவேர்கள் வழியேக் கூட நாங்கள் தொடர்பு கொள்கிறோம். இது எங்களுக்கே உரித்தான குறுக்கீடற்ற தனித்த முறை. ஒவ்வொரு மண்துகளும் பாறைகளும் கூட எங்கள் தகவல் பரிமாற்றத்திற்கான கடத்தியாக செயல் புரியும். காலத்தின் ரகசியங்களை நாங்கள் அவ்வழியில் தான் பறிமாறிக் கொள்வோம்.
இப்படி சாலைகளில் மனிதர்களின் பார்வையில் வளரும் மரங்களுக்கு ஆயுள் குறைவு. காடுகளில் விட்டேத்தியாக வாழும் மரங்கள் வரம் பெற்றவை. எங்கள் சந்ததிகளை நீட்டித்து செல்வதற்கு எந்த தடையும் அற்ற பிரதேசம் காடுகள். அங்கு ஒன்றுக்கூட தனது இனத்தை விதைக்காமல் வீழ்ந்து போகாது. இங்கு அதற்கு பல தடைகளை கடந்தாக வேண்டும். நானும் அப்படிப்பட்ட இடத்தில் தான் பூமியை துளைத்து வானம் எட்டும் ஆசையில் இருந்தேன். அங்கு வந்த மனிதர்களில் ஒருவன் என்னைக்கண்டு குதூகலமாகி கத்தி கூச்சலிட்டபடியே, குளுமையாக சூழ்ந்திருந்த சித்திரமூலக்கொடியை இலகுவாக அகற்றி மண்ணோடு பூமியிலிருந்து பெயர்த்தெடுத்து அவன் கொண்டு வந்திருந்த கருமைநிற உறையில் மாற்றி முதுகுப்பை திறப்பில் வைத்துக் கொண்டான். எப்பொழுதும் காற்றில் ஆடும் நான் இப்பொழுது அவன் நடையில் ஆடிக்கொண்டிருந்தேன். நான் நகர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை என்னால் துளியும் நம்ப முடியவில்லை. பழக்கத்தில் படியாத உணர்வின் தாக்கம் என்னை மேலும் கூர்மையாக்கி விட்டது. என்னை சுற்றி நிகழும் சூழலை உள்வாங்கத் துவங்கினேன்.
சாலையிலிருந்து சற்று உள்ளடங்கிய இடத்தில் நடப்பட்டேன். சுற்றிலும் வெயிலும் வெளிச்சமும் மட்டுமே நிறைந்திருந்தது. என்னை கொண்டு வந்தவன் உண்மையில் நன்றாகவே பார்த்து கொண்டான். கைக்கெட்டாத தூரம் வளர்ந்த சில நாட்களில் அவன் வருவது நின்று போனது. சரியாக பதினைந்து வருடங்கள் கழித்து இப்படி பேசும் பழக்கமும் எனக்கு உருவானது. என் மீதமர்ந்திருந்த காகத்திடம் தான் முதலில் ஆரம்பித்தேன். புரியாத விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தேன். தலையை சற்றே சாய்த்தவாறே நீட்டலாக வைத்து கொண்டிருந்தது எனது பேச்சை உள்வாங்கும் ஆர்வத்தின் அடையாளமாக நினைத்த போது காகம் அதன் பின்புறத்திலிருந்து கழிவை வெளித்தள்ளியபடி தலையை உயர்த்தியது. வெண்ணிற கழிவுடன் கலந்திருந்த விதையொன்று என் உடலில் பட்டு தெறித்த வேகத்தில் சற்று தூரத்தில் போய் விழுந்தது. அந்த இடம் தினசரி எனது கவனத்தில் இருந்துகொண்டிருந்தது. சிறிது நாட்களுக்கு பிறகு பூமியை துளைத்து முளைத்து வந்த தளிர் இலைகள் எனது பேச்சை கேட்பதற்கான நல்வரவின் குறியீடாக அமைந்தது.
இருந்த போதிலும் துரிதமாக தன்னை எனது உயரத்திற்கு இணையாக நீட்டித்து கொண்ட பின்னர் தான் அதன் தயக்கம் நீங்கியது. அதற்கு நேரடி பேச்சுகளில் அதிக லயிப்பு கிடையாதென்பதால் நான் மரணமடைந்தவர்களுடன் பேசுவது தவிர்க்க முடியாத இயல்பூக்கத்தில் தொடரும்படியானது. அதுவும் கூட கேட்பதில் மட்டுமே பெரும் சுவாரஸ்யமடைகிறது.
அந்த விபத்து நடந்த போது இரண்டு போக்குவரத்து காவலர்கள் எங்கள் நிழலில் நிகழ்த்திக்கொண்டிருந்த உரையாடலில் தான் எனக்கு மருதம் என்றும் அதற்கு மலைவேம்பு என்ற பெயரையும் தெரிந்து கொண்டேன். அதன் பின் நடந்த பெரும் விபத்தொன்றில் என் மீது சிறு சரக்கு வாகனம் புரண்ட நிலையில் வந்து விழுந்தது. அதனால் என் மீது சொல்லிக் கொள்ளும்படியான சில காயங்கள் ஏற்பட்டது. வலி உணர்வு மறைந்த பின்பு சிறுமுரட்டு வடுக்கள் எனது உறுதி தன்மையை உறுதிப்படுத்தியது. இதனால் தான் என்னவோ இல்லை விபத்துகள் அவ்வப்போது நிகழுமிடம் என்பதால் என்னவோ தங்கள் இதயம் காக்க எனது மேற்ப்பட்டையை முரட்டுத்தனமாக உரித்து செல்லும் மனிதர்கள் சில நாட்களாக வருவதில்லை.
நேற்று அதிகாலையில் கூட ஒரு விபத்து நடந்து விட்டது. ஒலியெழுப்பியபடியே வந்த இரண்டு சக்கர வாகனமொன்று முந்திவிட நினைத்தது. வழிவிடாமல் முன்னால் தாறுமாறாக பொதியேற்றத்துடன் வந்து கொண்டிருந்த பெரிய சரக்கு வாகனம் தனது முகப்பொளியை அதிகப்படுத்தியது. நடக்கப்போவதை எதிர்பார்த்து நானும் மலைவேம்பும் காத்திருந்தோம். கிளைகளில் அமர்ந்திறந்த பறவைகள் தாங்கள் இரவில் முடக்கி வைத்திருந்த சிறகுகளையும் குரலெயொலிகளையும் நீட்டித்து கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு எங்களுடன் இணைந்துகொண்டன. சரக்கு வாகனத்தின் வலது முன்முனை இருசக்கர வாகனத்தில் மோதியதும் பறவைகள் வழக்கம் போல் நொடியில் பறந்து விட்டன. அந்த சமயத்தில் தெறித்து விழுந்த மோதிரம் அணிந்த கட்டை விரல் மட்டும் பிற்பாடு எவருக்கும் கிடைக்கவில்லை. அது யாரும் அணுக முடியாத மேல்கிளை இடுக்கின் இருளில் மறைந்திருப்பதை இறந்து போன அந்த மோதிரத்தின் உரிமையாளன் மட்டுமே அறிவான்.
கட்டை விரல் மோதிரம் விதிவசமான ஈர்ப்பு. அவனோ அவனை சார்ந்தவர்களோ எதேச்சையாக கட்டைவிரலில் மோதிரத்தை அணிவித்திருக்கக் கூடும். அது எதிர்மறை ஈர்ப்பாக அமையப் போவதென்பதை நூறாக பிளந்த மண்துகளின் ஒரு சதவீதத்தில் கூட அவர்கள் அனுமானித்திருக்க முடியாது. மனிதர்கள் தங்களுக்கேற்படும் விபத்தை முன்னறிதல் என்பது அரிது. அவன் வாழ்வின் முக்கிய நிகழ்வை நோக்கிய பயணம் இப்படியாகி விட்டது. விதவிதமான மரணங்களை பல ஆண்டுகளாக நானும் பார்த்து வருகிறேன்.
விதிவசமாக என்கீழே வந்து தற்கொலை செய்து கொள்பவர்களை சமீபகாலமாக அதிகம் சந்தித்து வருகிறேன் என்றாலும் அவர்களிடம் நான் பேச மறுக்கிறேன். எது எப்படியாகினும் அவர்களின் மரணத்தின் இறுதி வெளிசுவாசம் என் உள் சுவாசமாகிவிடுவதை என்னால் தடை செய்யமுடியவில்லை.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் எங்களை பயன்படுத்திக் கொண்டாலும் பயன்படுத்திக் கொள்கிறோம் என்ற உணர்வே அவர்களுக்கு இருப்பதில்லை. கோடைகாலத்தில் நுங்கு விற்கும் முதியவர் ஒருவர் மரத்தை ஒட்டாமல் சாலையின் மீதிருக்கும் எனது நிழலை மையம் வைத்து கடை போட்டிருந்தார். என்னைப் போலவே யாருமற்ற தனிமையில் அவர் பேசிக் கொண்டிருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. பெரும்பாலும் மனிதர்களை பொறுத்தவரை வீணான சுயதம்பட்டம் தான் இயல்பாக இருக்கிறதே தவிர வேறு சிறப்புகள் எதுவுமில்லை. அவனது பேச்சு ஒரு நாய் தன்னையே நக்கிக்கொள்வது போன்றது. அதற்கு தேவையான வசதிகளும் வளர்ச்சிகளும் பிணக்குகளும் குழப்பங்களும் சண்டைகளும் என தன் இனத்தின் அதிகாரபூர்வ வெள்ளை அறிக்கையாகவே அந்த முதியவர் பேசிக் கொண்டிருந்தார். மனித இனத்தின் மீது மனிதனுக்கே வெறுப்பு வரும் என்பது வியப்பானதாக இருந்தது. மனிதனின் அந்திமகாலத்தில் அவனது உள்ளீடற்ற தன்மையை வெளிச்சமாகிறது. ஆனாலும் சிலபேருக்கு தான் அது தரிசனமாகிறது. விதிவிலக்காக அந்த முதியவரை கவனித்துக்கொண்டிருந்த சில நாட்களுக்கு பிறகு விபத்து அடிக்கடி நடக்கும் பகுதி என்பதை காரணம் காட்டி காவலர்கள் அவரது கடையை அகற்றினார்கள். ஆனால் அவர் இருந்த காலங்களில் ஒரு விபத்து கூட நிகழவில்லை என்பது தான் உண்மை.
காலநிலைகளைக் கணிப்பது எனக்கு இயல்பானதாக இருப்பினும் மனிதர்களை கவனிப்பதில் தவறிவிடுகிறேன். அதனால் தான் எனது கவனம் அவ்வப்போது அவர்கள் மீது திரும்புகிறது போலும். மனிதர்கள் எப்போது எதற்காக என்னருகில் வருவார்கள் என்பதில் இதுவரை குழப்பமே நீடிக்கிறது. பலர் என் மீது சிறுநீர் விடுவதற்கும் ஒதுங்குகிறார்கள். அவசரமாக மலம் கழிப்பதற்கு என்னை மறைப்பாக்கிக்கொண்டு ஆடை அவிழ்ப்பதைப் போல் கோடை காலத்தின் சில இரவுகளில் ஒரு சிலர் தங்கள் அவசர காம கழிப்பிற்கும் ஆடை அவிழ்ப்பதுண்டு.
கோடை அந்தி வானத்தின் வர்ண ஜாலம் ரம்மியமானதாக இருக்கும். பறவைகள் வெகு நேரம் வரை தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும் அது போன்ற ஒரு நாளின் இரவு தொடக்கத்தில் இரண்டு மனிதர்கள் தங்கள் கையோடு எடுத்து வந்திருந்த மதுவை என் கீழமர்ந்து பரவசமாக பருகிவிட்டு, என்மீது அந்த காலி பாட்டிலை அடித்து உடைத்துச் சென்ற நடுசாமத்தில் ஒரு ஆணும் பெண்ணும் என்னிடம் நெருங்கி வந்தனர்.
வழக்கமாக இதுபோல் வரும் ஜோடிகளுக்கு இருக்கும் பதட்டம் அவர்களுக்கு இல்லை என்பதை அவர்களது அசைவுகள் காட்டின. கீழிருந்த உடைந்த கண்ணாடி புட்டிகளையும் குப்பைகளையும் அப்புறப்படுத்தி விட்டப்பின் கொண்டுவந்திருந்த முன்யோசனையோடன் கொண்டுவந்திருந்த விரிப்பை பரப்பினார்கள். அவனுக்கு இருபதும் அவளுக்கு முப்பதும் இருக்குமென்பதை எனது அனுமானத்தில் உறுதி செய்துகொண்டேன். அவர்களது மேலாடைகளை கழற்றி கீழே புதிதாதாக வளர்ந்து வரும் எனது சிறுகிளையில் போட்டார்கள். எதிர்பார்த்தது போலவே இருவரும் உள்ளாடைகள் அணிந்துவரவில்லை. எந்தவொரு சமயத்திலும் என் மீது உள்ளாடைகள் போடுவதை வெறுக்கவே செய்கிறேன்.
முதலில் ஆவேசமாக புணர்ந்து கொண்டார்கள். பின்பு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு ஒருமுறையும், இறுதியாக சோர்வும் களைப்புமாக மூன்றாவது முறையும் புணர்ந்தார்கள். இதற்கு முன்பு இதற்காக வருபவர்கள் ஒருமுறையோடு சென்று விடுவார்கள் என்பதால் இவர்களை கூர்ந்து கவனிக்கத் துவங்கினேன். இடைவெளிகளில் என் பரப்பில் முதுகு சாய்த்தபடி மெதுவாக பேசிக்கொண்டார்கள். சற்று நேரத்திற்கு முன்பு இங்கமர்ந்து மது அருந்தி விட்டு சென்ற இருவர்களில் ஒருவன் மனைவியே இவள்.
அரசு மது சாலைகள் வந்தப்பிறகு எனது கீழமர்ந்து பெரிய பானைகளுக்கு தீமூட்டி என்னை மூச்சு திணற வைப்பதிலிருந்து விடுதலை கிடைத்தது. மிதமிஞ்சி மது அருந்தும் அற்பாயுசு மனிதர்களின் இளம் மனைவிகளுள் சிலர் துணிச்சலோடு இரவு காதலை தழுவிக்கொள்கிறார்கள் அல்லது துணிச்சலோடு மரணத்தை தழுவிக்கொள்கிறார்கள். ஒன்று வெற்றிடம் நிரப்படுகிறது. இல்லையெனில் அது உருவாக்கப்படுகிறது. எதிர்பாராத நிகழ்வாக இங்கு மகிழ்ச்சியாக இருந்தவள் மறுதினம் அவள் கணவனால் கொல்லப்பட்டு நான் சலனமற்றிருக்கும் முழுமதி முன்னிரவு நேரத்தில் எனக்கு கீழே நிழல் துவங்கும் இடத்தில் புதைக்கப்பட்டாள். மறுநாள் மாலை தனது நாவின் உமிழ்நீர்த்துளிகளை புற்களில் வழியவிட்டபடி வாய்வழி சுவாசத்தால் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட தேடுதலுக்காக வந்த காவல்துறையின் செந்நிற மோப்பநாய் தனது காலை தூக்கி மகிழ்ச்சியாக என் மீது சிறுநீர் கழித்தது.
சூரியன் தனது கதிரொளி கரத்தால் என் மீது வளர்ந்திருந்த இலைகளை எண்ணிக் கொண்டிருந்த பிற்பகல் வேளையில் ஒரு பள்ளி சிறுமியை அழைத்து வந்தவன் ஆடைகளை களைந்தபோது அந்த சிறுமி வீறிட்டாள். என் கிளைகள் முறிந்து விழவில்லை. ஏனெனில் நான் மனித உணர்விற்கு அப்பாற்பட்ட தூய உணர்வை பிரதிபலிக்கும் மரம். எதிர்மறை நேர்மறைகளுக்கு ஆட்படாத தன்மை எனக்கானது. அந்த சிறுமியின் அழுகி கதறலாக மாறியபோது அழைத்து வந்தவனின் இடது கால் கட்டை விரலுக்கும் மோதிர விரலுக்குமிடையுள்ள பகுதியில் கருநாகத்தின் பற்கள் பதிந்தது. அவன் கதறுவதற்கு கூட நேரமில்லை. எனது கீழே வளர்ந்திருந்த புற்களை பற்றிய இழுத்தவாறு இறந்து போனான். கருநாகம் தனது இருநாவால் காற்றை சுவைத்தபடி அவன் மீதேறி அதன் வழக்கமான தங்குமிடமான எனது வேரின் பிளவில் புகுந்தது.
மழைக்காலத்திற்கு முன்பே காற்றில் கலந்து வந்த இடியோசையின் உண்மைத்தன்மையை நான் பகுத்தறிந்து கொண்டிருந்த ஷணத்தில் தூரத்தில் நிகழ்ந்த கலவரத்திலிருந்து பாய்ந்து வந்த துப்பாக்கி குண்டு ஒன்று மலைவேம்பின் மேற்பரப்பில் பாதி சொருகியபடி துளைத்து நின்றது. இதனால் மலைவேம்பு வருத்தமுற்று இலையுதிர் காலத்திற்கு முன்பாகவே தன் இலைகளை உதிர்த்து விட்டது. எப்பொழுதும் அதன் கிளைகளில் சுற்றித் திரியும் காகம் ஒன்று பாதி துளைத்து பாதி நீட்டியிருக்கும் வெடிமருந்தின் வாசம் மட்டுமே மிஞ்சிய அந்த தோட்டாக் குப்பியினால் மிகவும் கவரப்பட்டு அதை நாள் முழுக்க வெறிவந்தது போல் கொத்திக் கொண்டேயிருந்தது. சில நாட்களில் அதை அகற்றுவதில் வெற்றியடைந்தாலும் தனது அழகான கருநிற மயிற்போர்வை அவிழ்ந்துதிர்ந்த நிலையில் மலைவேம்பின் கீழே மடிந்து போனது. எறும்புகளும் வண்டுகளும் அதை மண்ணோடு மண்ணாக்கி மலைவேம்பிற்குள் காகத்தையும் ஒரு பகுதியாக கலக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நாளடைவில் மலைவேம்பும் கதை கேட்பதில் தனக்குள்ள வழக்கமான உற்சாகத்தைப் பெற்றது.
என்னருகில் இருக்கும் மரணமடைந்த மனிதர்களுடன் தான் பேசுவேன். குறிப்பாக அவர்களின் இரத்தத் துளிகளோ சிதைந்த உடல் பாகத்தின் ஏதாவது ஒரு பகுதியோ என் மீது கண்டிப்பாக தெறித்திருக்க வேண்டும். வாசம் கூட நற்கடத்தியாக செயல்பட முடியும். ஒருவரின் வாசத்தில் அவரது வாழ்வு முழுவதும் பதியப்பட்டுள்ளது. காற்றில் கலந்துள்ள உயிர்ப்பின் விகாசிப்பை வாசத்தின் மூலம் அறிந்துகொள்வது ஒரு வழிமுறை. மூச்சை உள்ளிழுக்கும்போது பௌதிகத்தனமான விஷயம் மட்டும் உள்ளிழுக்கப்படுவதில்லை என்பதையறிந்து கொள்ள நீங்கள் மரமாகயிருந்தால் மட்டுமே சாத்தியம். அதனால் தான் இது ஒருமுனைத் தொடர்பு. நான் பேசுவதை மட்டுமே கேட்க முடியும்.
காற்றில் மன்வாசம் நிரம்பியுள்ளது. மழைக்காலம் துவங்கிவிட்டது. மனிதர்கள் நடமாட்டம் குறைந்துவிட்டது. மெல்ல மெல்ல மோனத்தில் மூழ்கி கொண்டிருக்கிறேன். இடியோசையும் மின்னல் தெறிப்பும் எனது மோனத்தை ஆழப்படுத்திக்கிறது. என்னை விழித்தெழ செய்திட விருப்பமெனில் நியதியை பின்பற்றுங்கள் சந்திக்கலாம்.
ஆசிரியர்
- புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவத்துறையின் இயக்குனகரத்தில் சித்த மருத்துவ மருந்தாளுநராக பணிபுரியும் மஞ்சுநாத், பன்முகத்தன்மைக் கொண்ட தீவிர வாசிப்பாளர். மாறுபட்ட எழுத்தாக்கமும் விமர்சனத் திறனும் கொண்டவர். 2013 முதலே இவரது சிறுகதைகளும் கட்டுரைகளும் , புத்தகத் திறானாய்வுகள் மற்றும் விமர்சனங்களும் பல்வேறு அச்சு இதழ்களிலும் மின்னிதழ்களிலும் வெளியாகி வாசகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. க்ரியா யோக சாதகரான இவரது தற்சோதனை வடிவில் அமைந்த நலவாழ்வு , உணவு முறை மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் குறித்த கட்டுரைகள் பெருமளவு கவனத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை.
சிறுகதை2021.10.19மரம் சொன்னது
சிறுகதை2021.07.20ஊருக்கெல்லாம் ஒரே வானம்