
சாவின் தேஜா வூ
1.
இலையுதிர் காலம் முன்பே
இந்த இலைகளின் நிழல்கள்
சாவின் தேஜா வூ
2.
சாலையின் பள்ளம்
மழைக்குப் பின்
ஒரு நாய்க்கு பானம் பரிமாறுகிறது
3.
முனகும் காற்று
கவனமற்று வீழும்
மாமர இலைகள்
4.
தூக்கம் கலைந்த நிசி
நெடுந்தூர விடியல்
மின்விசிறியின் சப்தம் மட்டும்
5.
யாரும் செல்லாத பாதை
இப்போது அதில்
இந்த மழையும் நானும் மட்டும்
6.
சூர்யோதயத்தை மறைத்தபடி
இந்த மரக்கிளைகள்
அழகாகவே இருக்கின்றன
7.
தூரத்து வடக்கு நோக்கிச் செல்லும்
குறுகிய சாலை
நிம்பஸ் மேகங்கள் தரையிரங்குகின்றன
8.
சிலந்தி வலையில் சிக்கியிருக்கும்
உதிர்ந்த ஒற்றைப் பவழமல்லி
அதன் அருகில் செல்லும் தேனீ
9.
வாசல் தரையில் உதிர்ந்து கிடக்கும்
நீலப் புலி வண்ணத்துப்பூச்சியின் ஒற்றைச் சிறகு
இன்று கோலமிட மனமில்லை
10.
இன்னும் ஆடிக் கொண்டிருக்கிறது அத்திமரக்கிளை
விட்டுச் சென்றது
எந்தப் பறவையோ