அதகளத்தி

வாசிப்பதற்கு தேவை2 நிமிடங்கள், 20 நொடிகள்

1

உபரிகளைத் தந்துக்கொண்டேயிருக்கும்
வளமான நிலம் அது
அங்கு அவர்கள் நின்றுக்கொண்டிருந்தார்கள்
பன்னாட்களுக்கு முன்னேயே
தம் முன்னோர்கள் விளைச்சலுக்காக
முன்கூட்டியே மெய் நிகர் பணத்தை
பரிவர்த்தனையாகப் பெற்றதை அறியாமல்
அந்நியக்குரலோடு வேர்ப்பிடித்திருந்தார்கள்
அந்நியக்குரல் நட்பழைப்பு விடுத்தது
அதனின் நட்பழைப்பில் அவர்களுக்கு உவப்பில்லை
அந்த அழைப்பின் ஒலி பெரும் விலங்கின் ஒலி ஒத்தது
அவர்களோ தலைவனோடு கை கோர்த்த தன் மகளின் அடிச்சுவட்டைத் தேடிய செவிலியின் குரல் இளைப்பு போலிருந்தார்கள்
ஆனாலும் அந்நியக்குரல் இரக்கமில்லாமல்
திரும்ப திரும்ப அழைத்தது
சில நேரங்களில் அவியற்கறி போல
குத்தி குத்தி ரசித்துச் சுவைத்ததில்
வாழிடம் நீர்கொட்டுதலானது
அது போதவில்லையென
பல போர்முகம் காட்டி
உரையாட. வா என்றார்கள்
இது நித்தக் குரூரம் ஆனது.
முடிவாக,அவர்கள்
அன்றொரு நாள்
எம் முதியோள் கைப்பெற்ற பாத்திரம் போல
செவிப்பசி களைந்த காலம் தான்
எம் உரையாடலுக்குத் தேவையென்றதில்
அந்நியக்குரல் தம் வாள்கண் உருட்டி
விடப்புகை பரவச்செய்து ழூச்சழுத்தி சுவைத்தது கண்டு
எந்த அறிகருவியுமில்லாத
மலைகளுக்கப்பாலிருந்து
நறும்புகை எரித்துக்கொண்டு அவர்களருகே
அதகளத்தி வந்து கொண்டிருந்தாள்.

2

கால வண்டியின் மேடு குழிகளில்
அவர்களின் உழைப்பு நெடு நாட்களாய் பூசப்பட்டுக்கிடந்தது
அவர்களின் சிவப்பு நிறத்தை நிறமற்ற ஒரு காரணி
துடைத்து சோர்ந்தது
அச்சிவப்பை செந்தழல் எனச் சொல்ல
காரணமில்லை
அவர்கள் எந்நேரமும் சோதனைக் கூடாரத்தில் வெப்பமாகவே சோதிக்கப்பட்டதில் கூட்டு ரத்தம் தலைமாறிக் கிடந்தது
அவர்களின் சதைகளில் அடர்த்தியான பூச்சிக்கொல்லியின் நெடி
சுவாசம் பிடிக்காத எலும்புகள் உடலை விட்டு வெளி மீறல் அறிவிப்புச் செய்தன
எம் உடலுக்கு நாங்களே உரிமையாளிகள் எனச்சொல்லி தவ்வி நடக்க
ஆரம்பித்தன
இப்பொழுது
குழைந்த சதைகள் உலக்கைக் குத்தின் செங்குத்தாக நிற்க முடியாமல் குனிந்து கொண்டது
அதில் மூர்க்கர்களின் சீழ்ப்பிடித்த கூலியெனும் நச்சுப்பால் ஊறிக்கிடந்ததில்
குடிப்படையினனொருவன்
அகாலக் குரல் கொடுத்தான்
அந்த ஒலியில் சதைகள் தீர்ந்துக் கொண்டிருக்கும் வெட்டவெளி காட்சிப்பிழையினைக் கண்ட அதகளத்தி
அசுர உழைப்பின் பக்கங்களை வேகமாக புரட்டத் தொடங்கினாள்
சேர்ந்தார்க்கொல்லியின் சப்பைக்கதைகளைக் கண்டு
அனலிட்ட ஒளியில் தன் தீர்மானத்தை போர்ப்பறையாக அறிவித்தாள்
எம் முன்னோன் கேட்டது போல்
எம்மனோர்க்கெல்லாம் காணி நிலம் வேண்டுமென்றதில்
சதைகள் ஊறலிலிருந்து வெளி வரத் தொடங்கின.


 

எழுதியவர்

ம.கண்ணம்மாள்

மருத நிலம் தஞ்சையை சொந்தமாகக் கொண்டவர். பொதுவெளியில் கவிதை,சிறுகதை என இயங்கி வருகிறார். சன்னத்தூறல் இவரின் முதல் கவிதைத்தொகுப்பு.

2 thoughts on “அதகளத்தி

  1. அதகளத்தி அமர்க்களம் மேடம்! வாழ்த்துக்கள்!

  2. Adhakalathi…
    Kannammal Mam…
    Happy… very happy… to see a poem in traditional…classical TAMIL…
    ARUMAI…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *