வாசிப்பதற்கு தேவை18 நிமிடங்கள், 51 நொடிகள்

டெல்லி பயணம் அத்தனை சிறப்பாக இருக்கவில்லை சாய் கிருஷ்ணாவுக்கு.
சைவ பிள்ளையாய் போனதால்  போகிற  இடத்தில் எல்லாம் சைவ உணவு  தேடுவதே அலுவலக வேலையை விட கடிசாக இருந்தது. அரைவயிறு  கால் வயிறாய் இன்னும் ஐந்து நாளை ஓட்ட வேண்டும்.

வீட்டுல செய்யும் ஒவ்வொரு சாப்பாட்டையும் குறை சொல்லி பழகும் குணம் எல்லாம் இனி குறைத்து  கொள்ள  வேண்டும் என்ற எண்ணத்தை இந்த பயணம் தீர்க்கமாய் சொல்லி கொண்டு இருந்தது. “உண்மையில் உணவை குறை சொல்வது அல்ல, அந்த நிமிடத்தில் உள்ள வேலை பளுவை அவளிடம் இறக்கி வைப்பதாகவோ இல்லை ஆணாதிக்கத்தை நிரூபிக்க பெண்ணை தன் கட்டுப்பாட்டில்  வைத்து கொள்ள திட்டுவதாகவே உள்ளுக்குள் தன்னையே  நொந்து  கொண்டார்.

பெண் ஜென்மம் ஆணை போல அல்லாமல் சுகந்திரம் இழந்தவள்தான். அவர்கள் கழிப்பறையை தவிரமற்ற அனைத்திற்கும் அனுமதி கேட்க வேண்டும். இருந்தாலும் நாமும் அவற்றை பயன்படுத்திக்க தானே நினைக்கிறோம்” என்ற ரீதியில் தனக்குள் இருந்த நீதி தேவதையிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார்.

அடுக்குமாடி குடியிருப்பில் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த வீட்டில் இருப்பதை கூட சிரமமாக உணர்ந்தார். நமக்கான வீடு  அத்தனை வசதி, சவுகரியம் இல்லாவிட்டாலும் ஒரு இடம் பழக்கப்பட்டு விட்ட பின்பு அது தான் சொர்க்கம் என்ற எண்ணத்தையும் இந்த அடுக்குமாடி குடியிருப்பு தந்து கொண்டிருந்தது. நினைத்தால் வண்டி எடுத்து கொண்டு வெளியில்   செல்லலாம். முகவரி சொல்வதும் எளிது.  எதற்கெடுத்தாலும் விதிமுறைகளுக்கு உட்பட்ட வாழ்க்கை முறையை சாய் கிருஷ்ணா விரும்பவில்லை. எது எப்படியோ இன்னும் அஞ்சு நாளில் போய் விட வேண்டியதுதான்.

வேலையின் தாக்கம் அதிகமாகவே  தெரிந்தது. இன்னும் இழுக்கும் போல. “அறைக்கு போய் என்ன செய்ய போகிறேன், முடிந்த வரை வேலையை வேகமாக முடித்து விட்டு செல்ல வேண்டியது தான், அடுத்த  நாளிலிருந்து இரண்டு மணி நேரம் கூடுதலாக இருந்து வேலையை முடிக்க வேண்டியது தான், வேற வழியே இல்லை” என்று முடிவு எடுத்தார்.

இன்னும் சில காரணங்கள் உண்டு. மாசுள்ள காற்று அவருக்கு அத்தனை சுகமாக இல்லை. அதிக தும்மலும், இருமலும் அதிகமாக வரத் துவங்கியது. இன்னும் சிரமமாக இருந்தது. ஒரு மூன்று கிலோமீட்டர் தூரத்தை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பயணம் செய்வது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. போக்குவரத்து நெருக்கடி அவருக்கு எரிச்சலைத் தந்தது. அதோடு இன்னொரு சிக்கலும் உள்ளது. சக்கரை வேறு எக்கச்சக்கமாக உடம்பில் உள்ளது. சில நேரத்தில் காரில் இருக்கும் ஏசிக்கும், சீட் பெல்ட்டுக்கும் அணையை உடைத்து கொண்டு வருவது போல சிறுநீரின் குரல் இன்னும் தர்மசங்கடமாக இருந்தது சாய் கிருஷ்ணாவுக்கு.

அன்று எப்படியோ வீடு வந்து சேர்ந்தார். வாங்கி வந்திருந்த இட்லியை பிரித்து சாப்பிட்டார். தொலைக்காட்சி பெட்டியில் எல்லா சேனல்களும் ஹிந்தியாக இருக்க, சி.என்.என் தொலைக்காட்சியைப் பார்த்தார். உலக அரசியல் பற்றிய தொகுப்பு அத்தனை பிடித்தமாய் இல்லை. அதன் கீழே ஒரு குறுஞ்செய்தி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் இறந்த பிறகு இறுதி சடங்கிற்கு இன்சூரன்ஸ் போட்டு கொள்ளுங்கள் என்பது தான் அந்த செய்தி.  வயது அடிப்படையில் இன்சூரன்ஸ் எத்தனை கட்டுவது. இன்றையஇறுதி சடங்கு செய்வதற்கு ஆகும் செலவு. இன்று இன்சூரன்ஸ் செய்யாவிட்டால் இன்னும் பத்து வருடம் கழித்தோ,  இருபது வருடம் கழித்தோ அத்தனை பெரிய தொகையை ஏற்பாடு செய்வது கடினம் போன்றதொரு செய்தியை பார்த்து விட்டு சிரிப்பு வந்தது சாய் கிருஷ்ணாவுக்கு.

ஆச்சரியம் தாங்க முடியல.  இதுக்கெல்லாமா இன்சூரன்ஸ். ஏதோ கிறுக்கு புடிச்சு போச்சு போல. இது எப்படி சாத்தியம். நம்ம ஊர்ல இது சாத்தியமே இல்லை. ஆயிரம், இரண்டாயிரம் செலவு பண்ணினா கொண்டு போக ஆள் இருக்கு. குறைஞ்ச பட்சம் எந்த ஏற்பாடு செய்யாவிட்டாலும்

நாலு பேரை வச்சாவது சுடுகாட்டுல எரிச்சுட முடியுமே.  சாவு, எப்போ வரும்முனு தெரியாது என்றாலும், உயிரோடு இருக்கும் போதே அதுக்கு பணம் கட்டுவது அபத்தமாக தெரிந்தது” அவருக்கு.

“ரொம்ப வசதி படிச்சவங்க, தத்துவ ரீதியா பேசுறவங்க உயிரோடு இருக்கும் போது கல்லறை கட்டிக்க ஆசை படுவாங்க. கண்ணாலயாவது பாக்க முடியும். இந்த இன்சூரன்ஸ் பற்றி வீட்டுல பேச முடியுமா? என் இறுதி சடங்குக்கு நான் இன்சூரன்ஸ் போட்டுக்கிட்டு வரேன். இது தான் பாலிசி  நம்பர்.
பத்திரமா வச்சுக்கோ. நான் செத்த பிறகு ஏஜென்சிக்கு அழைச்சு சொல்லணும் என்று எப்படிசொல்வது. இது இருந்தா தான் அவங்க வந்து சப்போர்ட் பண்ணுவாங்கன்னு சொல்ல முடியுமா?”  இது இவரை இத்தனை யோசிக்க வைக்கும் என்று அவரே யோசித்து இருக்க வில்லை. கண்டிப்பாக இதை நான் செய்தால் மனநிலை பாதிக்கப் பட்டதாக தான் நினைப்பார்கள் என்னை. ஆனால் அமெரிக்காவில் மட்டும் தான் இது சாத்தியம். அப்படியே தூங்கியும் போனார்.

ஐந்து நாள் எப்படி போனது என்றே தெரியவில்லை. அதுக்கு இன்னொரு காரணம் இது பற்றிய  சிந்தனை அவரை ஏதோ செய்து கொண்டிருந்தது. வீடு வந்து சேர்ந்தது நிம்மதியாக இருந்தது.

மனைவியிடம் நொய் நொய்ன்னு பேச்சு கொடுத்தார். இது தான் முதல் முறை இப்படி பேசுவது. இதற்கு முன்னாள் இப்படி பிரிந்து இருந்தது. இல்லை. அதனால் தான் என்னவோ ஒரு இறுக்கத்தில் இருந்து வெளி வந்த திருப்தி. தொலைந்து போய் திரும்பி வந்த குழந்தை போல சுற்றி சுற்றி வந்தது மனைவி  லட்சுமிக்கு ஆச்சரியம்  தாளவில்லை. இலைமறையாய் அங்க இருந்த சூழலை சொல்லி கொண்டிருந்தார்.

“இப்பவாவது தெரியுதா எங்க அருமைன்னு” லட்சுமி சொல்ல அத்தனை மோசம் இல்லை என்னா வசதி தெரியுமா? என்றார். ஆனாலும் அவர் மனம் “எத்தனை சுகம் இங்கு. வீட்டில் இருக்கும் போது சுகம் தெரிவதில்லை” என்றது.

மீசையில் மண்ணு ஒட்டாத மாதிரியே பேசுங்க என்றதும் முகம் சுருங்கி போனது. ஏன் குட்டி போட்ட பூனை மாதிரி சுத்துறீங்க. போய் படுங்க.  வயசு ஆகுதுல என்று சொல்லி விட்டு லட்சுமி நகர்ந்தாள்.  சாய் கிருஷ்ணாவிடம்  இன்று நடந்து கொண்டது லட்சுமிக்கு ஏதோ போலிருந்தது. படுக்கை அறையில் சென்று பார்த்தாள். கண்கள் அசதியில் சொருகி உறக்கத்தில் ஆழ்ந்து இருந்தார். பிள்ளை உறங்குவது போல உறங்கிக் கொண்டிருந்தார். ஐந்து நாளின் பிரிவு அவர் முகத்தில் தாண்டவமாடி கொண்டிருந்தது. அற்புதமான தூக்கம் கண்களை தழுவியது சாய் கிருஷ்ணாவிற்கு.

திடீரென ஒரு அழைப்பு. அலுவலகம் கிளம்பி கொண்டிருக்கிறார். பார்த்த வேலைக்கான ரிப்போர்ட் எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருந்தார். அலுவலகம் கிளம்பி இரண்டு தெரு தாண்டியதும் கொட்டு சத்தம் காதில் விழுந்தது. சிறிது தூரம் போக சத்தத்தின் அளவு அதிகமாக துவங்கியது. மலர்கள் தூவி கொண்டு செல்வதை

பார்த்ததும் சி.என்.என் டிவி செய்தி கண் முன்னே வந்து நின்றது. அதன் பிறகு தெருவில் எங்கு பிணம் போவதை பார்த்தாலும் இந்த நினைப்பு வந்து செல்லும். இவர்கள் பிணத்தை  தூக்க கஷ்டப்பட்டு இருப்பார்களா? பணம் தட்டுப்பாடு வந்து இருக்குமா? இவங்க கடன் வாங்கி தான் இந்த பிணத்தை எடுத்து இருப்பார்களோ?  யாரிடமாவது கேட்டு விட மனம் துடிக்கும். கேட்டா என்ன நடக்கும் என்பது அவருக்கு தெரியும்.

சொத்து பிரித்து தரசொல்லி பொணத்தை தூக்க விடாம தகராறு செய்வதை கேள்வி பட்டு இருக்கிறார். ஒரு சில நாளுக்கு இதே சிந்தனையில் இருப்பார். அடுத்த சாவு பார்க்கும் வரையில் மீண்டும் இந்த நன்றி கெட்ட உலகத்தில் வாழ பழகி விடுவார். அடிக்கடி பக்கத்து இருக்கை ராமநாதனிடம் “நன்றி கெட்ட உலகம் சார் இது” சாய் கிருஷ்ணா சொல்லும் வார்த்தை இது.

பேச்சுவாக்கில் ராமநாதன் ஒரு செய்தி சொன்னார். தன் நண்பனுக்கு திடீரென நெஞ்சு வலி. பட்டுன்னு உயிர் போய்விட்டது  “நண்பனின் மகன் அமெரிக்காவில் வேலை  செய்யுறானாம். ராமநாதன் தான் பேசினானாம். ஏதோதோ சொல்லிட காரியத்தை முடிக்க சொல்லி விட்டதாகவும், வீடியோல அப்பாவ பார்த்து அழுததாகவும்” சொன்னதை கேட்டு அதிர்ந்தார்.

“இப்படி தான் சாய் உயிர் போகணும் , யாருக்கும் பாரமா இருக்க கூடாது” என்று அடிக்கடி ராமநாதன் சொல்வான். “ராமா கடைசியா முகத்தை கூட பார்க்க முடியாத அளவுக்கு  என்னடா வாழ்க்கை” சாய் கிருஷ்ணாவால் சமாதானம் அடைய முடியவில்லை.

சாய் கிருஷ்ணா தனது அப்பா இறந்த போது மும்பையில் தான் இருந்தார். “பெரிய கமிஷனிங் ப்ராஜெக்ட். அங்கிருந்து மும்பை ஏர்போர்ட்க்கு செல்ல பத்து மணிநேரம் ஆனது. கேள்வி பட்டதும் அழுது புரண்டு கிளம்பினார். ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பவே ஒரு நாள் ஆகி விட்டது. ஐஸ் பெட்டியில் வைக்க சொல்லி காத்திருக்க வைத்து அவரின் முகத்தை கடைசியாகப் பார்க்க முயற்சி எடுத்தோமே. அமெரிக்காவில் இருந்து வந்து அப்பாவின் முகத்தை பார்க்க முடியாத படி என்ன வாழ்க்கை வாழுறான்” என்று தனக்குள்ளேயே கடிந்து கொண்டார்.

“சின்ன வயசுல தாத்தா படுத்த படுக்கையா இருந்தப்ப ஒவ்வொருவரின் விசாரிப்பும், சாமிகிட்ட வேண்டிக்கிறதும் நடக்கும். ஒருத்தரின் வாழ்நாளை நீட்டிக்க அத்தனை மெனக்கெடல்கள் இருக்கும். குடும்பம் மொத்தமும் இன்ச் இன்ச்சா  படுக்கையில கிடப்பவரை பார்த்துக்கிட்டதும் இன்னும் நினைவுல இருக்கு. அவருக்கு ஆறுதல் சொல்லுறது மட்டுமில்லாது மலம், ஜலம் எல்லாமும் செய்யும் மனசு அன்று இருந்ததே. அத்தனை எளிதில் உசுரை விட்டுட்ட விட மாட்டாங்க. எப்படியாவது காபந்து செய்ய செய்யும் போராட்டமும் மனசுல கடமையை செஞ்ச திருப்தி இருந்துச்சு” என்று அந்த நாட்களை அசை போட்டார்.

“இறந்த செய்தி கேட்டதுமே பாடை கட்டுவதற்கும், கொட்டுக்கு ஆள் பிடிக்க ஒருத்தரும், பூ மாலை வாங்கி வர ஒருத்தரும் செல்ல, ஒரு நாள் முழுக்க வச்சுருந்து அழுது தீர்த்து, தகவல்  சொல்லுறதுக்கு ஊருக்கு எல்லாம் ஆள் அனுப்பி, வராத ஆள் பத்தி ஆளாளுக்கு பேசிட, பந்தல் போட, வெட்டியானுக்கு தகவல் தந்திட, பிணத்தை தூக்கும் நேரத்தை எல்லாரும் விசாரிக்க, குளிக்க வைக்கும் போதும், தூக்கி நிமிர்த்தி வைக்கும் போதும் இறந்தவரின் உடல் நோகாத படி தூக்குவதும் அந்த உயிர்க்கு அன்று தந்த மதிப்பு இன்னமும் வியக்க வைப்பதாக தனக்குள்ளேயே பேசி கொண்டார். இறந்தவர் மிக நேசித்த பொருளை யாராவது ஓடி வந்து அவர் கையிலே செருகி வைக்க,   இறந்தவரின் துணிச்சலையும், திறமையையும், உழைப்பால் உயர்ந்ததையும் பேசி பேசி அவரின் ஆன்மாவை குளிர வைத்து அனுப்புவார்களே. இன்று இறப்பு துச்சமாய் போயி விட்டதே” என்ற ஆதங்கம் அவரை வாட்டியது.

“வீட்டை விட்டு வெளியேறும் பிணத்தோடு, முச்சந்தி வரை செல்லும் பெண்களை தடுத்து நிறுத்திட சோகங்களிலும் ஆறுதல் எத்தனை சுகம்.  டீ, காபி ஒரு வீட்டுல போடுவார்கள். பொணம் விழுந்த வீட்டுல அடுப்பெரிக்க கூடாது என்று ஒரு வீட்டுல சோறு பொங்குவாங்க. கடைசி சொட்டு கரைந்திடும் வரை கண்ணீரில் இழப்பின் வலியை பகிர எத்தனை பேர் அன்று இருந்தார்கள். இன்று அது மாதிரி இருப்பார்களா?” என்ற கேள்வி அவரை படுத்தி எடுத்தது.

சாய் கிருஷ்ணா இப்போது எல்லாம் ஷேர் மார்க்கெட் பத்தியோ, காசு சேர்ப்பது  பற்றியோ யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்தார். அவரை சுற்றி இருப்பவர்களுக்கு இதுவே ஒரு  ஆச்சரியத்தை தந்தது. உழைக்கும் போதே அதை பத்திரப்படுத்தி பல்வேறு தளத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று சொல்வார். கடந்த ஓரிரு மாதத்தில் இறப்பை பற்றிய நினைவுகள் அதிகரிக்க ஏதோ வாழ்வே பூச்சியம் என நம்ப துவங்கினார்.

“ஏன்பா சாயி, கொஞ்ச நாளாவே ஏதோ சிந்தையிலேயே திரியுற. என்னாச்சு” அம்பாள் கபே முரளி அய்யர் விசாரித்தார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க அய்யரே. அது சரி உம்ம அப்பாவ இப்போ எல்லாம் பார்க்க முடியலையே” என்று நலம் விசாரித்தார் சாய் கிருஷ்ணா

“உடலு சுகம் இல்லை. வயசாகுதுல. என்னால பார்த்துக்க முடியல. என் தங்க ஆத்துல இருக்கார். அவளுக்கு ஏதும் பிரச்சனைனா என்ன பண்ணுறதுன்னு தெரியல. அடிக்கடி போன் செஞ்ச அனுப்பிடுவாளோன்னு பயத்துல, கொஞ்ச நாள் விட்டே விசாரிக்கிறேன். இன்ன வரை போன் ஏதும் வந்துடுரல.. என்ன செய்ய. ஜீவனமும் செய்யணும். இனி வரை காலத்துல இன்னும் சிரமமா போகும் போல” என்ற முரளி சொல்ல சாய் வருத்தம் மேலிட நின்றார்.

சாய்க்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல. ஏற்கனவே இந்த சிந்தனை பாடாய் படுத்த, அதே பிரச்சனையை என்கிட்ட போட்டுட்டு போயிட்டாரே. “சரி எல்லாம் சரியாகும். நான் வரேன்னு” கிளம்பிட்டார் சாய்.

இனி வரும் காலம் இன்னும் சிரமம் என்ற வார்த்தை சம்மட்டிஅடித்தது போல  காதில் அடித்து கொண்டே இருந்தது. இன்னைக்கு எல்லாரும் தனி தனி தீவாய் வீட்டுக்குள்ளையே இருக்கும் சூழல் வேறு. கூட்டு குடும்பமாய் இருந்த வரை இது மாதிரியான பிரச்சனைகள் வரவே இல்லை. இதுக்கு

எல்லாம் யார் காரணம்? எது காரணம்?  யோசித்தால் குழப்பம் அதிகம் தான் வருது. “தானே காசு காசு என்று தானே கூட்டு குடும்பத்தில் இருந்து விலகி வந்தேன்” என்ற நினைப்பு இப்போ அசிங்கமாக தெரிந்தது சாய்க்கு.

வீடு வந்ததும் லட்சுமி கொஞ்சம் காபி போடுமா? என்றார்.

ஏம்மா லட்சுமி ஆறு பேரோடு பிறந்து இன்று ஆளுக்கொரு திசையில் இருக்கிறோம்.

“யார சொல்லுறீங்க?”

”வேற யாரை? என்னத்தான்”

“அதுக்கு என்ன இப்போ? ”

“நமக்குன்னு யாரு இருக்கா. வயசு ஆக ஏதோ ஒரு ஆறுதலும், அனுசரணையும்  தேவைபடுது. இதை  எப்படி சரி செய்ய போறோம். ”

“நீங்க கவலைப்பட்டு என்ன செய்ய போறீங்க. இப்போ விக்கிற விலைவாசில நாம வாழுறதே கஷ்டமா இருக்கும் போது,  நீங்க சொல்லுறது எல்லாம் சாத்தியமா? நாமளா பிரியல. உங்க அக்கா, தங்க கட்டி கொடுத்ததால அவங்க வந்து போறது குறைஞ்சு போச்சு. கொஞ்ச காலத்துக்கு முன்னால பக்கத்து ஊரா பார்த்து கொடுப்பா. முன்னாடி மனுஷாள தான் பார்ப்பாங்க. இப்போ எஜுகேஷன் அதிகம் படிக்கிறாங்க. அதுக்கு ஏத்த மாதிரி தேடுறாங்க. அப்போ அந்நியமா போகுது.  மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு போக தானே விரும்புறாங்க. அப்புறம் பொசுக்கு பொசுக்குனு வர முடியாது என்பது உங்களுக்கு தெரியாதா?” என்றாள். லட்சுமியின் வார்த்தைகளை உள்வாங்கி கொண்டே மௌனமாய் கொடுத்த காப்பியை துளி துளியாய் பருகினார்.

“லட்சுமி சொல்லுறதுல உண்மை இருக்கு. ஆனா நம்மல யார் பார்த்துப்பா. நமக்கு யார் ஆறுதல். எனக்கு இருப்பது ஒரே பையன். கொல்கத்தால ஒரு காலேஜ்ல MBA பண்ணுறான். எதுக்கு பண்ணுறான். எதுக்கு பண்ண வச்சோம். நிறைய சம்பாரிக்க. இந்த பணம்? பையன் லண்டன்ல செட்டில் ஆக போறதா ஆசைப் படுறான். எப்படினாலும் எனக்கு வயசு ஆகும் தானே. நான் எதிர்ப்பார்க்கும் நிறைவான இறுதியை தருமா இந்த பணம்? அவன் கல்யாணம் செய்து கொண்டு அங்கேயே போய் இருந்திடுவானா? அப்போ பேர பிள்ளைகளை எல்லாம்  வருஷத்திற்கு ஒரு தடவை தானே பார்க்க முடியும். அவங்களுக்கு நாம பேசுறது புரியுமா? நம்ம அன்பு புரியுமா? நம்மோடு முதலில் ஒட்டுவாங்களா? தாத்தா, பாட்டிக்கு கிடைக்கும் பேர, பேத்தி தந்திடும் நிறைவு கிடைக்காமல் இருந்தால் இறுதிக்காலம் இனிக்குமா? இப்படி தள்ளி இருந்து வாழுறது தான் இன்றைய வாழ்க்கையா? என் பையனும் என்னை மத்தவங்கள போல பார்த்துக்க முடியாம முதியோர் இல்லத்தில விட்டுடுவானா?” மனசு சகதியில் விழுந்த உடம்பாய் நெளிந்து தள்ளியது.

“லட்சுமி நல்லாயிருந்து எனக்கு முடியாட்டா அத்தனை பிரச்சனை இருக்காது. ஆனா லட்சுமிக்கு ஏதும் வந்தா எப்படி நான் சமாளிப்பேன். எனக்கு சமைக்கவும் தெரியாது. பக்குவமா உணவு தர வேண்டி இருந்தால் என்ன செய்வேன். வேலைக்கு ஆள் வைக்கணுமா? இத்தனை வருடங்களா வேலை வேலை ன்னு இருந்துட்டேன” இதை எல்லாம் யோசித்து தலையில் சூடு ஏறி இருந்தது சாய் கிருஷ்ணாவுக்கு.

“இன்று வரை நாம சேர்த்தது வைச்சதுல ஐம்பது சதவீதம் மட்டுமே என் குடும்பத்திற்கு தெரியும் . மீதி பத்தி எல்லாம் அவங்களுக்கு தெரியாதே. ஒரு வேளை எனக்கு ஏதும் திடீரென ஆகிட்டா லட்சுமிக்கு என்ன தெரியும். ஷேர் மார்க்கெட் பற்றி ஒண்ணுமே தெரியாதே. தங்கப்பத்திரம் மற்றும் எந்ததெந்த வங்கியில் பணம் இருக்கு என்பது எல்லாம் சொல்லி வைக்க தான் வேண்டும் போலவே” என்று அடுத்த விசயத்திற்கு மனசு தாவி பிராண்டி கொண்டது.

“ஒரு யோசனை மின்னல் போல மனதை அரித்து கொண்டே இருந்தது. முதலில் நாம் உயில் எழுதி வைக்க வேண்டும். நல்லதோ, கெட்டதோ எப்போனாலும் யாருக்கு வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இன்னைக்கே இதை பத்தி பேசி விட வேண்டியது தான்”

ராமநாதனை தொடர்பு கொண்டார். “ராமநாதா நல்ல வக்கீலா பார்த்து சொல்லு. ஏனப்பா எதுக்கு?” என்றார் ராமநாதன்.

“உயில் எழுதி வச்சிட்டா நல்லது தானேப்பா. நான் அங்கங்கே இன்வெஸ்ட் செய்து வச்சு இருக்கேன். எதுனாலும் யாருக்கும் ஒன்னும் தெரியாம போய்ட கூடாதுல. இவ்ளோ சம்பாரிச்சு என்ன புண்ணியம். எது வாங்கினாலும் யாருக்கும் சொல்வதும், பகிர்வதும் இல்லை. அனாமத்தா போய்ட கூடாதுல”  என்றார் சாய்.

“இவ்ளோ பதட்டம் எதற்கு சாய்”

“இல்லை ராமா. யாருக்கும் எந்த கஷ்டமும் தந்திட கூடாது. இது ஒரு பாதுகாப்பு உணர்வு தான். இப்பவே எழுதி கொடுக்க போறதில்லையே. இப்பவே சொல்ல போறதில்லையே. எனக்கு பிறகு தானே” என்று தலை குனிந்து நின்றார் சாய்.

ஒரு சிறிய செய்தியை பார்த்து விட்டு, மனசு அதையே பிராண்டி பிராண்டி இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டு உள்ளது. மனநிலை பிறழ்ந்து நிலையில் சாய் உலவி கொண்டு இருந்தார்.

“சரிப்பா. எழுதிடலாம். எல்லாத்தையும் எப்படி எழுத வேண்டும் என்று தயார் செய்து வை. நம்ம வக்கீல் பாலா இருக்காப்பல. நீ கவலை படாத” என்று ராமநாதன் புறப்பட்டார்.

“வியாழக்கிழமை நாம வக்கீல் பார்க்க போறோம். காலையில 8.30 மணிக்கே வந்திடு” என்று ராமநாதன் சொல்லிட, சாய்  சொன்னபடியே சென்றார்.

“வீடு, நகை, டெபாசிட்  தன் மனைவிக்கும், ஷேர், மிட்சுவல் பண்ட் அனைத்தையும் தன்  பிள்ளைக்கும் தனக்கு பிறகு கொடுக்க வேண்டும் என்று எழுதியாச்சு. அடுத்த முறை மகன் ஊர் வரும் போது எந்த பங்கு எல்லாம் முக்கியமானது. அதன் விவரங்கள் அனைத்தையும் முறைப்படி காட்டி புரிய வைக்க வேண்டும்” என்று தீர்மானித்து கொண்டார். சாய் சிரித்த முகத்தோடு வெளியில் வந்தார்.

“அப்புறம் இன்னொன்றையும் சொல்லி வைக்க வேண்டும். இப்போ தனக்கு வயது 55. இதுக்கு பிறகு எந்த வியாதி வந்தாலும் என்னை ஆஸ்பத்திரி கொண்டு போக வேண்டாம். அப்படியே என்னை விட்டு விடுங்கள். நீண்ட நாளைக்கு வியாதியோடே வாழவும், இதை சாப்பிடாதே, அதை சாப்பிடாதே போன்ற கண்டிஷனோடு வாழ்ந்து என்ன செய்ய போகிறோம். என் கடமை எல்லாம் முடிந்த பின்னே என்ன சுவாரசியம் இருக்க போகிறது. பயணிப்பதில் சிரமம். நினைத்த நேரத்தில் தண்ணி குடிக்க முடியாது. பாத்ரூம் போக  முடியாது.  நம்மை நாமே சுத்தம் செய்து கொள்வது கூட சிரமமாக இருக்கும்” என்று தீர்ப்பு தந்திடும் நீதிபதி போல மனதில் நகல் எடுத்து கொண்டார்.

“மருந்து மாத்திரையால் துன்பமே அதிகம். ஆசை பட்டத்தை சாப்பிட்டு ஆசை பட்ட இடத்திற்கு சென்று அனுபவித்து இறக்க வேண்டும். தானும் துன்பப்பட்டு, மற்றவரையும் துன்பப்படுத்தும் கடைசி கட்ட வாழ்க்கையை வெறுக்கிறேன். நல்லா நடந்து, நல்லா சாப்பிட்டு உயிர் விட வேண்டும். வலி தாங்கும் கொஞ்சம் காலம்  பரவாயில்லை.  இன்னும் பத்து வருடங்கள் நீட்டித்து யாருக்கும் பயன்படாமல் வாழ விருப்பம் இல்லை. எல்லாம் அனுபவிச்சாச்சு. வீட்டுக்குள்ளேயே அடங்கி கிடக்கவும், பேச்சு துணைக்கு ஆள் தேடவும், வீட்டில் இருப்பவர்களுக்கு தொந்தரவு தராமல் இருக்கவும் எப்படி இருக்க முடியும். எப்படியும் கையில் வருமானம் இல்லை என்றால் கிடைக்கும் மதிப்பும் கிடைக்க போவதில்லை. நான் எடுத்த முடிவு சரியே. மரணத்தை கண்டு பயப்பட வில்லை. மரண வலியோடு வாழ விருப்பமில்லை”      என்றெல்லாம் தனக்குள் ஒரு மரண கொள்கையை வகுத்து கொண்டார்.

எப்போதும் செல்லும் நடைப்பயிற்சி இன்று இல்லை. ராமநாதனும் அழைக்க வில்லை. பக்கத்து  வீட்டில் டிவி சத்தம் அலறி கொண்டிருந்தது.

வந்து இறங்கிய களைப்பு குறையாமல் உறங்கி கொண்டிருந்தவரை அலாரம் அடித்து அடித்து ஓய்ந்து விட்டிருந்தது.

“நேத்து கொஞ்சம் கொஞ்சம் கடுசா பேசிட்டேன். கோவிச்சுகிட்டாரோ?” என்று பதறினாள் லட்சுமி.

“என்னாச்சி இவருக்கு. எப்போதும் ஊருக்கு முன்னாடி எழுந்து விடுவார். ஏதோ போயிட்டு வந்த அலுப்பா இருக்குமோ?” எழுப்ப முயன்றாள்

“என்னங்க என்னங்க, நேரம் ஆச்சு எழுந்திருக்கலையா? ”

எழுந்து பார்த்தார். எல்லாம் விசித்திரமாய் தெரிந்தது. ஏதோ சாதித்து விட்ட திருப்தி. சில நிமிடங்கள் அமைதியாய் பார்த்தார்.

“சூட்கேசை யார் இங்க வைத்தது. ஏன் இங்க இருக்கு” என்றார்.

“என்னாச்சு உங்களுக்கு? நேத்து ராத்திரி எல்லாம் தூக்கத்துல ஏதோ உயிலு உயிலு ன்னு புலம்பி கிட்டு இருந்தீங்க. அப்புறமா அமைதி ஆகிடீங்க. அப்பவே நினைச்சேன். அப்படி என்ன கனவோ? பையன் நேத்து ராத்திரி முதல் போன்ல பேச தவிச்சுக்கிட்டு இருக்கான். எழுந்து பேசுங்க” என்றாள் லட்சுமி.

பையனுக்கு போன் போட்டார்.  “அப்பா எப்படி இருக்கீங்க. எக்ஸாம் பீஸ் கட்டணும். அடுத்த வாரம் கடைசி அதுக்குள்ள கட்டணும். ஏன் குரல் டல்லா இருக்கு” என்று கேட்டான்.

“ஒண்ணுமில்லை ராஜேஷ். டெல்லி போயிட்டு வந்த அலுப்பு. கண்டிப்பா அனுப்புறேன் ராஜேஷ். ஹெல்த் பார்த்துக்கோ. நல்லா படி  கண்ணா” என்ற சாய்க்கு பிறகு தான் எல்லாம் புரிந்தது.

சரிங்கப்பா. தொடர்பு துண்டித்தது. லட்சுமி காப்பி போட்டு வைத்தாள். ஆவி பறந்தது. என் ஆவி இன்னும் இருக்கிறது என்ற எண்ணம் சாய்க்கு பிறந்தது. அப்போ எல்லாம் கனவா?

கனவில் எழுதிய உயிலும், மரண கொள்கைகளும் இன்னும் அகலாமல் கண்ணுக்குள்ளையே இருந்தது.

ஆனாலும் அந்த தொலைக்காட்சி செய்தி அவரை ஏதோ செய்து கொண்டிருந்தது. ராமநாதனின் தொலைபேசி ரிங் அடித்து கொண்டே இருந்தது. உயில் எழுத சொல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி  கொண்டிருந்தது.


சிவமணி, அபுதாபி

 

எழுதியவர்

சிவமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *