29 March 2024

ன்றும் காற்று பலமாக அடித்துக் கொண்டிருந்தது, மதி பட்டத்தை மேலே தூக்கிப் பறக்க விட முயற்சித்துக் கொண்டிருந்தான். அருகில் துரை நின்று கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் இருவரும் அதைப் பறக்க வைக்கும் முயற்சியில் மாறி மாறி ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் பட்டத்தை அவர்களால் காற்றில் ஏற்ற முடியவில்லை. இதுமுதல் முறை அல்ல. இருவரும் ஒருநாள் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் ஹீரோஸ்டைலாக பட்டம் விட்டுக் கொண்டே ஹீரோயின் முன் பல்லிளித்துக் கொண்டிருந்தகாட்சியில் ஆரம்பித்தது இது. பட்டம் தயார் செய்து மூன்று நாட்கள் ஆகி விட்டது. இந்த மூன்று நாட்களும் இருவரும் முயன்றும் எதுவும் எடுபடுவதாக தெரியவில்லை. பட்டம் காத்தால் அவர்களின் தோள் பட்டைக்கு மேல் ஏறவில்லை. எதிரும் நேருமாக வைத்துப்பார்த்து விட்டனர். அதே அளவில் தான் இருந்தது பட்டம். பின் வைத்திருக்கும் எதிர்த்திசையில் சாய்ந்து விடும்.மெல்ல சூரியன் மறைய ஆரம்பித்தது. இருவரும் பட்டத்தைஅருகில் வைத்து விட்டு அவர்கள் இருக்கும் அந்த பகுதியில் உயரமாக குவிக்கப்பட்டிருந்த மணல் மீது அமர்ந்தனர். காற்று எதிர்த்திசையில் அவர்களைச் சீண்டிக் கொண்டிருந்தது..

“மதி நாளைக்கு நான் வரமாட்டேன்”

“ஏன்? ”

“போர் அடிக்குது… ”

மெளனத்துடன் மதி துரையை பார்த்தான்.

 

“ஆமா… இது பறக்கவே மாட்டுதே… நம்ம டீ மாஸ்டர் போன வாரம் எப்படிப் பறக்க விட்டாரு.. நமக்குத் தான் தெர்ல… ”

“அப்பனா.. நாம்ம அங்க போவோமா நாளைக்கு… ”

“அவரு நேத்தே.. என்ன விரட்டி விட்டாரு… ”

“நீ போனயா … ”
தன்னை விட்டுப் போனதுக்கு துரையிடம் கோவித்து கொண்ட மதி.. அங்கு நடந்ததை எண்ணித் தனக்குள் சிரித்து கொண்டான்.

“என்னாச்சு… ”

“மாஞ்சா நூல் போடுவோம்.. ஒன்ன சேத்துக்க முடியாதுனு சிரிச்சாரு …”

“அப்படினா.? “.

“தெர்ல…”

அங்கிருந்து இருவரும் கீழிறங்கினர்.. துரை கையில் வைத்திருந்த பட்டத்தை மதி இடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்..அந்த இரண்டே அறைகள் கொண்ட வீட்டில்
மதியின் அம்மா ஒரு சின்ன கசங்கிய சாமி படத்தின் முன் நின்று எதையோ வேண்டி கொண்டிருந்த ஓசை மட்டும் துரைக்கு கேட்டது.

பள்ளியில் இருவரும் ஒரே டெஸ்கில் உட்கார்வது தான் வழக்கம்.. ஸ்கூலிலும் இருவரும் பட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டனர். ஒவ்வொரு வகுப்பாக முடிந்து ஏழாவது பீரியட்
பிஇடி அனைவரையும் வரிசைப்படுத்தி லீடர் கிரெளண்டுக்குக் கூட்டிக் கொண்டு சென்றான். ஒவ்வொருவரும் குழுவாக அல்லது தனியாக விளையாடத் தொடங்கி இருந்தனர்.அவர்களின் பள்ளி கிரெளண்ட் தன்னிடம் இடம் இல்லை என்பதை அடிக்கடிச் சொல்லி கொண்டே இருந்தது.அதன் இடைஞ்சலில் விளையாட மதி, துரைக்கு விருப்பம் இல்லை. இருவரும் ஒரு சின்ன மர நிழலில் நின்று கொண்டிருந்தனர்.

”மேத்ஸ் …ஹோம் ஒர்க் போட்டுட்டியா..” என மதி துரையிடம் கேட்டான்.

‘இல்லை..’ என்று தலையாட்டி விட்டு.. ‘நாளைக்குத் தான குடுத்தாரு’ எனச் சொல்லி கிரெளண்டில் விளையாடிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தான்.

“இன்டெர்வல ஏதோ எழுதிட்டு இருந்த..”.

“அதுவா? சும்மா… போர் அடுச்சதா.. கிளாஸ் நோட்ஸ்ல அண்டர்லைன் பண்ணிட்டு இருந்தேன். ” எனத் திக்கினான்…

மதி அவனை பார்த்தும் துரை மதியைப் பார்க்கவில்லை.

“துரை… சார். . கிட்ட கேப்பமா? .. பட்டம் விட்றத பத்தி! ” என முன்னாடிப் பேசிக் கொண்டிருந்ததை மறந்து ஒரு புது வேகத்தோடு கேட்க.
பீரியட் முடியப் போகுது… எனச் சொல்லி முடிப்பதற்குள் பீஇடி சத்தமாக விசில் அடித்தார்.

ராஜா சயின்ஸ் சார் வரையச் சொன்ன படத்தை வரைந்து கொண்டிருந்தான். போர்டில் அது அவர் நாளைக்கு எடுக்க வேண்டிய பாடம். அவன் உயரம் கம்மி என்பதால் கொஞ்சம் சிரமப்பட்டு கொண்டிருந்தான்.

லாஸ்ட் பீரியட் மேத்ஸ் சார் வர லேட் ஆகிக்கொண்டிருந்தது. அவரது பீரியட் என்றால் பயம் தான். துரை இருப்பதால் தப்பித்துக்கொண்டிருக்கிறான் மதி. துரை நன்றாகப் படிப்பதால் கொஞ்சம் அடிக்கடி திமிராகவும்நடந்து கொள்வான். அதனாலேயே தனக்கிருக்கிற நட்பு வட்டத்தை விட அவனுக்குச் சிறிது.

பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் வரை எதை எதையோ இருவரும் பேசி வந்தனர். அந்த அடுக்கு மாடிக் குடி இருப்பின் சாலை ஓரத்தில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.அந்த பெரிய கட்டடங்கள் மீது மதிக்கு என்றும் விருப்பம் இருந்தது கிடையாது. ஆனால் அந்தக் கட்டடத்தின் மேல் மாடியில் ஒரு குழுவாகப் பட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். அதை வேடிக்கை பார்க்கவே இருவரும் நின்று இருந்தனர். அவர்கள் இருவரையும் பார்த்த செக்யூரிட்டி அருகில் வந்து தட்டியை கம்பியில் தட்டி இவர்களை நகரச் சொல்வது போல மிரட்ட செக்யூரிட்டியை பார்த்த இருவரும் சிரித்தனர். அது அவர்களின் சேரியில் இருக்கும் வாலு அண்ணன் தான். பதிலுக்கு அவரும் நக்கலாக சிரித்துகொண்டார்.. மூவரும் அந்த பட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள இரண்டுமாடி அடுக்கு கொண்ட அரசுப் பள்ளி அது . மதியும், துரையும் மூன்றாம் வகுப்புப் பிள்ளைகள். இருவரும் நடந்தே
பள்ளிக்கு வந்து விடுவார்கள். மதியின் வீட்டைத் தாண்டிச் செல்லும் பிள்ளையார் கோவில் தெருவின் கடைசி வீடு துரை உடையது. இருவரும் மதி வீட்டின் பக்கத்தில்
விளையாடுவது தான் வழக்கம். அன்று மாலை மதி மட்டுமே பட்டம் விட முயற்சித்துக் கொண்டிருந்தான்.  துரையை அவன்எதிர்பார்க்கவில்லை. இன்று காற்று கம்மியெனக் கூறிக்கொண்டே மதியின் அம்மா வந்தார். பட்டத்தை மதியின் கையிலிருந்து வாங்கி அதை பார்த்தவர் “யார்டா.. பண்ணது… ”

” நானும்.. துரையும்…. ”

“அவன… காணம்… ”

“போர்.. அடிக்குதா அவனுக்கு… ”

” பட்டம் விடவா..” . என்று சொல்லி கொண்டே அதை பறக்க விட முயற்சித்தாள்

” ஆமாம்… ”

சுமதி சிரித்து கொண்டே, அந்தப் பட்டத்தை விட முயன்று கொண்டே இருந்தாள். கீழே விழும் ஒவ்வொரு முறையும் மதி அந்தப் பட்டத்தை எடுத்து அம்மாவிடம் கொடுத்தான்.
அம்மாவின் நெற்றியில் வைத்திருக்கும் பெரிய வட்டப் பொட்டு எப்போதும் அம்மா முகத்திற்குப் பொருந்தவில்லை என்பது போல யோசித்து கொள்வான். இது நாள் வரையில் அம்மாவிடம் சொன்னது கிடையாது.

வழக்கம் போல் காலையில் துரையின் நோட்டைப் பார்த்து எழுதிக் கொண்டிருந்தான் மதி. இந்த வகுப்பு அவனுக்குப் புதிதாக இருந்தது.. அவர்களுடைய வகுப்பில் பெயிண்ட் அடிப்பதால் வேறு வகுப்பில் உட்கார்ந்திருந்தனர். எழுதி கொண்டே அடிக்கப்பட்ட பெயிண்ட்டின் நிறத்தைச் சொல்லி இதில் நான் இன்னொரு கலரைச் சேர்த்துப் பட்டத்திற்கு அடிக்கப் போவதாக மதி துரையிடம் சொன்னான். துரை எப்படி இருந்தாலும் அது பறக்காதே என்றான். மதி கொஞ்ச நேரம் யோசித்து விட்டு அந்த அபார்ட்மெண்ட் அளவு மேல போனாதான் பறக்குமா என்றான். நம்ம தெருல வீடே இம்புட்டுண்டு என்று சொல்லிவிட்டுத் திரும்பி புது கிளாசைப் பார்த்தான் அது பழைய கெமிஸ்ட்ரி லேப் ஆக இருந்தது. ஹோம் ஒரக்கை எழுதி துரை நோட்டுடன் முன் பெஞ்சில் வைத்து விட்டு வந்தான். அதில் ஏற்கனவே சில நோட்டுக்கள் இருந்தன .

வகுப்பிற்குள் நுழைந்த தமிழ் சார். தன் கையில் வைத்திருந்த லிஸ்ட்டை ஒரு முறை பார்த்து விட்டு…,  பேசிக் கொண்டிருந்த வகுப்பை அதட்டி விட்டுப் படிக்கத் தொடங்கினார். அது விளையாட்டுப் போட்டிகளைக் கொண்ட லிஸ்ட். அதில் இருக்கும் ஒவ்வொரு போட்டியையும் பற்றி விளக்கி யார்? யார்? சேரப்போவதாக கேட்டுக் கொண்டிருந்தார். தனக்குப் பிடித்த போட்டியில் அவரவர் பெயரைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அதில் எதுவும் மதிக்குப் புடிக்க வில்லை. அருகில் இருந்த துரை எழுந்து பேச்சுப் போட்டிக்குக் கொடுப்பதாகச் சொன்னான். ராஜா எழுந்து ஓவியப் போட்டியில் பெயரைப் பதிவு செய்தான். இன்னும் சிலர் தங்கள் பெயர்களைக் கொடுத்தனர். மதி அமைதியாக அனைவரையும் பார்த்து கொண்டிருந்தான். தனித் தாளில் குறித்துக் கொண்ட தமிழ் சார் அங்கிருந்து கிளம்ப கிளாஸில் சத்தம் அதிகமாக ஆனது. எந்தத் தலைப்பு எடுக்க என துரை மதியிடம் கேட்டான்.  ‘தெர்லயே’ என்ற மதியின் பதில் ஆர்வம் இல்லாதது போல இருந்தது.

”நீ.. எதுலயும் கலந்துக்கலயா.” என அம்மா சாப்பிடும் போது மதியிடம் கேட்க.

”இல்லை” எனத் கூறிவிட்டு தலையைக் கீழே தொங்கபோட்டுக் கொண்டான். அருகிலிருந்த அம்மா அடுப்பை அணைத்துவிட்டு பக்கத்து அறைக்குள் சென்றார். சாப்பிட்டு தட்டைக்கழுவி வைத்து விட்டுத் திரும்பும் போது உள் அறையில் உட்கார்ந்திருந்த அம்மா அவனை இங்கு வருமாறு கையசைத்தார். தண்ணியைச் சட்டையில் துடைத்துக் கொண்டு அம்மா அருகில் அமர்ந்தான் மதி. அம்மா கையில் பழைய ஆல்பம் இருந்தது. அப்பா இறந்து இரண்டு வருடங்கள் கழித்து இப்போது தான் மதி அந்த ஆல்பத்தில் இருந்த அப்பா போட்டோவைப் பார்த்தான். அது எப்போது வேணுமானாலும் கிழிந்து போகலாம் என்பதுபோல இருந்தது. அம்மா அவனுக்கு அவரை ஞாபகப்படுத்தவே இல்லை. ஒவ்வொன்றாகக் திருப்பி இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். பைக்கில் சின்ன டவுசர் போட்டுக் கொண்டு சுருட்டை முடி உடன் அப்பாவின் நண்பர் கொண்டு வந்த பழைய சுசுகி மார்க்ஸ் 100 இல் உட்கார்ந்து கொண்டிருந்த மதியைப் பார்த்துச் சிரித்தார் அம்மா.

” இப்ப.. எனக்குச் சுருட்ட முடியே இல்லையேமா.”.என்றான். அம்மாவின் சிரிப்புக்குப் பதிலாக.

மராமத்து வேலை முடிந்து பாதிப் பள்ளிப் புதிதாகவும். மீதிப் பள்ளி பழைய தோற்றத்துடனும் நின்று கொண்டிருந்தது. நகரின் சத்தம் சுவர்களை அழுக்காக்குவது இயல்பே.. கிளாஸுக்குள் நுழைந்த மேத்ஸ் சார். திருத்தி வைத்திருந்த நோட்டுகளை எடுத்துக் கொடுத்து கொண்டே ..” யார்லாம் போட்டிக்கு கலந்துக்க போறிங்க “என்றதும், பாதி கிளாஸ் கையைத் தூக்க அதைப் பார்த்து விட்டு மேத்ஸ் சார்.. மத்தவங்களாம் என்றார். அனைவரும் அமைதியாக இருந்தனர் நோட்டுக்களை எடுத்துக் கொடுத்து விட்டு சேரில் உட்கார்ந்தவர் எல்லாரையும் பார்த்து  “பதில காணமே?” என்பது போல கேட்க…
ஒவ்வொருவரும் தலையை ஒருவர் பின் ஒருவர் மறைப்பதை கவனித்துவிட்டு. . சத்தமான குரலில் எல்லாருக்கும் கேட்கும் விதத்தில். “எல்லாரும்.. கலந்துக்கணும்.! . இல்லனா ஒன்னும் பண்றதுக்கு இல்ல.. ! கண்டிப்பா ஏதோ ஒரு போட்டிலயாவது கலந்துக்கணும்.. தமிழ் சார் வருவாரு எல்லாரும் நேம் கொடுக்கணும் !” என்றதும்.. பேச்சுச் சத்தம் அதிகமானது.. பெஞ்சை வேகமாகத் தட்டி.. ”அமைதியா இருக்க முடியாதா ” என்று கத்தினார்.. கிளாஸ் அமைதியானதும்.., கிளாஸ் லீடரை கூப்பிட்டு தன் பையில் வைத்திருந்த காகிதத்தை எடுத்துப் படிக்கச் சொன்னார். அதில் ஒவ்வொருவரோட பேரும் அவர்கள் கலந்துக்க வேண்டிய விளையாட்டும் எழுதி
இருந்தது.. ஏற்கனவே பேர் கொடுத்திருந்தவர்களின் பெயர்கள் அதில் இல்லை.. சத்தியா கேரம் , வேணு செஸ், கண்ணன் ரன்னிங், மதிக்குப் பேரை வாசிக்க வாசிக்க மனதிற்குள்
திக் திக் என்றது. கொஞ்ச நேரத்தில் மதி ட்ராயிங் ! என்றதும் அவனுக்கு எதுவும் புரியவில்லை. போன வகுப்பில் மேத்ஸ் டீச்சர் ஞாபகம் வந்தது. ஒரு நாள் கிளாசில் வைத்து உனக்கு ஸ்கேல வச்சு கூட ஒரு கோடு நேரா போட முடியாதா எனக் காதைத் திருவியது ஞாபகம் வந்தது.

வீட்டில் அம்மா கல்யாணத்துக்குப் பாட்டி கொடுத்துவிட்ட சீர் வரிசைகளில் ஒன்றான கண்ணாடியில் பார்க்கையில் இன்னும் அந்தத் தழும்பு காதில் இருந்தது. அந்த கிளாஸ்
முடிந்ததும் அவன் சார் இடம் சென்று வேற போட்டி மாற்றி கொள்வதாகச் சொல்ல எண்ணி ஸ்டாப் ரூம்க்கு அருகில் போவதும் பின் தயங்கி வருவதுமாக இருந்தான். இதற்கு நாம்ம முன்னாடியே பேரக் கொடுத்திருக்கலாம் எனத் தனக்குள் திட்டிக் கொண்டான். தமிழ் சார் சொல்லும் போதே ரன்னிங்கில் பேர் கொடுக்கலாம் என்று யோசித்தான். இப்போது ஒன்றும் முடியாது, முன் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் கண்ணன் அழுது கொண்டே வந்தான். நல்ல கொலு கொலுவென இருப்பான். அழுகையோடு அவனுடைய வயறும் குலுங்குவது தெரிந்தது. ஸ்டாப் ரூமில் சார் அடித்து விட்டதாகச் சொன்னான் ஏன் என்றதும் என்னால ரன்னிங்ல கலந்துக்க முடியாது எனச் சொல்லி ஓவென அழுதான். மதிக்குப் புரிந்து விட்டது தனக்கும் விழுக வேண்டிய அடி அது என்று.. பின் அதை மாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வீட்டில் ஏதேதோ வரைந்து பார்த்தான் அது ஏதும் அவனுக்குப் புடிக்கவில்லை!. அவன் எதையோ வரைய அது எதில் வந்தோ முடியும்.. ஒரு கட்டத்தில் வரைந்த எல்லாத்தையும் கிழித்து விட்டான்.. பின்னர் அழுதான்.. பின்னர் வரைந்தான்… கிழித்தான்.. அழுதான்.. வரைந்தான்… அம்மாவிடம் சொன்னான்… அம்மா தன் பங்கிற்கு நாலைந்து தடவை எதையோ வரைந்து காட்டினார்.. தனக்கு ட்ராயிங் எதனால் வரவில்லை என்பது அப்போது தான் புரிந்தது அவனுக்கு. நேற்றுப் பட்டம் விடும் பொழுது அந்தப் பட்டத்தின் அடி பகுதி காத்துக்கு ஆடியதில் கொஞ்சம் பிய்ந்தது போல இருந்தது அதை சரி செய்து கொண்டிருந்த போது அதற்கு எந்தக் கலரை அடிக்க என யோசித்து
கொண்டிருந்தான்.

போட்டி நாள் வர வர பயம் அவனைத் தொற்றி கொண்டது.. கண்ணன் கிளாஸ்சுக்கு வராததால் போர்டு தெளிவாகத் தெரிந்தது.. அவனுக்கு டைபாய்டு காய்ச்சல் என லெட்டர் கொடுத்திருந்தான். ட்ராயிங் இன்சார்ஜ் ஆனா பிஇடி சாரைப் போய் பார்த்து வரைவதற்கு தலைப்பு இருக்கிறதா எனக் கேட்டான். இல்லை என்ற பதிலே கிடைத்தது. தன்னுடைய கிளாசில் ட்ராயிங் போட்டியில் இருந்த மற்றவர்களை பார்த்தான்.

அவர்கள் வரைந்து கொண்டிருந்தனர்.. அதிலும் ராஜா நன்றாக வரைந்திருந்தான்.. அவன் வரைவதைப் பார்த்து நின்று கொண்டிருந்த மதியைப் பார்த்துவிட்டு வரையச் சொல்லி கொடுத்தான்.. இப்போதுதான் ராஜாவிடம் இவ்வளவு நெருக்கமாக பழகுகிறான். ராஜா சொல்லிக் கொடுத்ததை வீட்டில் வரைந்து பார்ப்பான் ஏதோ முன்னாடி இருந்ததற்குப் பரவாயில்லை என்பது போல தோன்றும்.

போட்டி நாளன்று பயம் தொற்றிக்கொள்ள. அம்மா ”பரவா இல்லை போய்ட்டு வா” என்று சொன்னதால் பள்ளிக்கு வந்தான் மதி மனதிற்குள் பயமாக தான் இருந்தது. ஒவ்வொரு போட்டியாக நடந்தது ட்ராயிங் மதியம் தான் ..முதல் போட்டியாக பேச்சு போட்டி தான். அதிலும் முதல் ஆளாக துரை தான் பேசினான். தைரியமாக அனைவரும் முன்னும் பேசினான். கண்டிப்பாக அவனுக்கு தான் முதல் பரிசு என அனைவரும் பேசி கொண்டனர்..

கண்ணன் இல்லாமலே ஓட்டப் பந்தயம் நடந்தது. மதிக்கு இன்றைக்கு என்ன வரைவது என்று இன்னும் தெரியவில்லை அவனுடைய வகுப்பில் தான் ட்ராயிங் போட்டி நடந்தது சிறியவர்கள், பெரிய வகுப்பினர் அனைவரும் இருந்தனர்.  குடுக்கப் பட்ட முதல் பத்து நிமிடங்கள் ஒன்றும் வரையாமல் உட்கார்ந்திருந்தான் மதி. போட்டியின் நடுவில் முன்னால் உட்கார்ந்திருந்த ராஜா திரும்பி மதியை பார்த்துச் சிரித்தான்.  பதிலுக்குச் சிரித்து விட்டு நிமிர்ந்த மதிக்கு வரைய ஒரு யோசனை தோன்ற அதை வரைந்து முடித்தான். அது அவனுக்குத் திருப்தியைக் கொடுத்தது. பேச்சுப் போட்டியில் துரை தான் முதல் பரிசு. இப்படி ஒவ்வொரு போட்டியாக அறிவிப்பு வந்தது. மதி எதிர் பார்த்தது போல ஓவியப் போட்டியில் ராஜாவே முதல் பரிசு மற்ற ஒன்றை வேறு ஒரு வகுப்பினர் வாங்கி இருந்தனர். துரைக்கு கைதட்டின அளவை விட ராஜாவிற்கு சத்தம் அதிகமாக இருந்தது.

மதி தான் வரைந்த பேப்பரை பத்திரமாக நோட்டிற்குள் வைத்திருந்தான். அதை வீட்டிற்கு வந்ததும் எடுத்துப் பார்த்துக் கொண்டான், ஒரு சிரிப்பை பரிசாகத் தான் வரைந்த ஓவியத்திற்கு கொடுத்து விட்டு. தான் வரைந்த அந்த படத்தை தன் வீட்டின் மூலையில் ஒட்டினான் அதை தூரத்தில் நின்றுப் பார்த்து சிரித்துக் கொண்டான். அருகில் இருந்த பையில் வைத்திருந்த இன்னொரு பேப்பரை எடுத்து அவனுக்குப் பிடித்ததை வரைய ஆரம்பித்தான். சூரியன் பொன்னிறத்தில் சிவந்துக் கிடந்தது. அந்த இரண்டு அறைகளை கொண்ட சேரி வீட்டின் ஒரு மூலையில் காற்றில் மிதந்து உயரத்தில் பறந்து கொண்டிருந்த மதி வரைந்த பட்டம் எதையும் பொருட்படுத்தாமல் உயர உயர பறந்து கொண்டிருந்தது.


லட்சுமிஹர்.

எழுதியவர்

லட்சுமிஹர்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர். திரைப்படத் துறையில் visual editor -ஆக உள்ள இவரின் சிறுகதைகள் யாவரும், குறி போன்ற இதழ்களில் பிரசுரம் ஆகியிருக்கிறது.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x