பற… பற…


பாதிரியார் பிரான்சிஸ் சேவியர் கிராமப் பொறுப்பாளர்களை வரச்சொல்லி இன்னக்கி காலையில கூட்டம் போட்டார். ஒவ்வொரு ஊர்லயும் திருவிழா நடத்துறது குறித்து பேசினார். வழக்கம் போலவே மே மாசம் கடைசி வாரத்தில தெக்கூர்லன்னு முடிவாச்சு. வழக்கமுன்னா என்ன, இந்த பத்து வருசமாத்தான். அதுக்கு முன்னாடி ஆவணி மாசந்தான் நடந்துச்சு. ஊர்காரவுங்களோட புள்ளைங்க நாலு எழுத்து படிச்சு அசலூருக்கு போயிட்டதால எல்லாரும் வந்து போக வசதியா இருக்குமேன்னு மே மாசத்துக்கு மாத்திட்டாங்க. நாளைக்கு ஊர்க் கூட்டம் போட்டு எவ்வளவு வரின்னு பேசி முடிவு பண்ணுவாங்க.

ஊருக்குள்ள பிள்ளமார், கோனார், உடையார், பண்டாரம், ஆசாரின்னு பல சாதி இருந்தாலும் கூட்டம் சொல்றதுக்கு ஒரு பறையனையோ, சக்கிலியனையோ கூப்பிட்டா போதும்ன்னு முன்னெல்லாம் என் தாத்தாவத்தான் கூப்பிட்டாங்க.

கிறிஸ்தவுகளும் இந்துக்களும் ஒன்னு கூடுற கூட்டமுன்னா வயித்துக்கு முன்ன கிடுக்கட்டி கட்டி ரெண்டு குச்சியால டட்.. டட்.. டட்.. டட்..னு தெருவெல்லாம் அடிச்சிட்டே போயி, “இதனால சகலருக்கும் தெரிவிக்கிறது என்னன்னா, நாளைக்கு சாயங்காலம் அருகுடி[1] கூட்டம் நடக்குது, வீட்டுக்கு ஒருத்தர் தவறாம வந்திடுங்க…”னு தண்டோரா போட்டுட்டே போவாரு தாத்தா.

ரெண்டு மதத்தவங்களும் தனித்தனியா கூட்டம் போடுறப்ப, “ஐயா, நாளைக்கி சாயங்காலம் ஊர்க் கூட்டம் இருக்கு, கரைகாரங்க[2] சொல்லச் சொன்னாங்க”னு வீடுவீடா போய் சொல்லுவாரு. ஒரு ரூபாயோ ரெண்டு ரூபாயோ கொடுப்பாங்க. அதுவே அவங்களுக்கு பெரிய தொகையா தெரியும். தாத்தாவுக்கும் தான். “இன்னக்கி ரெண்டு ரூபா கொடுத்தாங்கடா” னு பத்து தடவை எண்ணிப் பார்த்து சிரிப்பார். பல்லு கரைக்கு அடியில இந்த பறையோட உழைப்பு மறஞ்சிருக்கும்.

ஊருக்காரவுக வீட்டுல சாவு விழுந்தாலும், பொண்ணெடுத்து பொண்ணு கொடுத்த வகையில வெளியூர்ல சாவு நடந்தாலும் ஒவ்வொரு வீட்டுக்கும் போய் சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்றதும் எங்க ஆளுங்கதான்.

கேதஞ்சொல்ல[3] வந்தவனை சும்மா போகச் சொல்லக் கூடாது என்னமும் கொடுத்து போகச் சொல்லனும்பாகலாம் பெரியவுக. அதனால கேப்பையோ[4], வரகோ, நெல்லோ எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் கொடுக்கிற வழக்கம் இருந்துச்சு. தாத்தா கையில பொட்டியோடே போவாரு. அதுதான் அவருக்கு கூலி. தாத்தா செத்த பிறகு, அந்த வேலையை என் அப்பா செஞ்சாரு. அப்பாவோட காலத்துல தானியம் கொடுக்கிறது கொறஞ்சி, இதுக்கும் ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் கொடுக்கிற வழக்கம் வந்துச்சு.

சாவு விழுந்த வீட்டுக்கு பொறந்த வீட்டு கோடி கொண்டு போகையில நெல்லு பொட்டியத் தூக்குனதும், செத்தவுகளை கல்லறைக்குக் கொண்டு போகையில சாம்பிராணி போட தீச்சட்டி சொமந்ததும் எங்க சனங்கதான். கொடுக்குறத வாங்கிக்கிட்டு அமைதியா வந்திருங்க. ஊருல திருவிழான்னா எங்க எல்லாரோட வீட்டுலயும் ஒல[5] வைக்கிறத் தேவையே இருக்காது.

தெக்கூர் மாதா கோவில்ல திங்கக்கிழமை சாயங்காலம் கொடியேத்தி ஞாயித்துக்கிழமை சாயங்காலம் கொடி இறக்குறவரை ஏழுநாளும் ஊர்க்காரவுங்க தெருக்களெல்லாம் புதுசா தெரியும். விடிஞ்சும் விடியாம, ஜிக்கி  குரலில் “தந்தானைத் துதிப்போமே திருச் சபையோரே கவி பாடிப்பாடி தந்தானைத் துதிப்போமே” பாட்டு குண்டிய நகட்டிட்டே கிடக்கிற குழந்தையையும் எழுப்பி விட்டுடும். சாயங்காலம் ஆச்சுன்னா, “கேளுங்கள் தரப்படும்… டிங் டிங் டிங்… தட்டுங்கள் திறக்கப்படும்… டிங் டிங் டிங்… தேடுங்கள் கிடைக்கும் என்றார் இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்” பாட்டு மண்டைக்குள்ள தாளம் போட வைக்கும்.

சாயங்காலம் ஆறு மணிக்கு இடைக்கம் தூக்குறதுக்கு, அஞ்சு மணிக்கே சின்னப் பசங்களும் பொண்ணுகளும் கோயிலுக்கு போயிருவாங்க. நானும் போயிருக்கேன். மாதா, இல்லன்னா ஏதாவது புனிதர் படம் வரஞ்ச கொடிகள கம்புகள்ல கட்டி உயர்த்திப் பிடிச்சிட்டுப் போறதுக்குப் பேருதான் இடைக்கம். அதைத் தூக்கிக்கிட்டு சின்னப்புள்ளைங்க வீதியைச் சுத்தி வருங்க. கைக் குழந்தைய அல்லது நடக்கச் செத்தப்[6] பிள்ளைய இடுப்பில சுமந்துக்கிட்டு, அதனோட கையில் சிறிய கொடி கொடுத்து பெரியவங்களுமே நடப்பாங்க. நடக்கிறவங்களுக்கு முன்னால, தோசக்கல்லு மாதிரியான வெங்கல மணி ரெண்ட ஒரு நீள கழியில ரெண்டு பக்கமும் கட்டி தோள்ல வச்சு மரக் கட்டையால “டொய்ங் டொய்ங்”னு ரெண்டுபேரு அடிச்சுட்டே போவாய்ங்க.

“டேய்… டேய்… நானு ரெண்டு தட்டு தட்டிக்கிறேன்டா.”

“டேய்… உனக்கு தோள் வலிச்சா சொல்லுடா.”

“டேய்.. பிளீஸ்டா… போன வருசம் நான் தந்தேன்ல.”

கெஞ்சிக்கிட்டே பக்கத்துலயே ரெண்டு மூனு பையனும் பொண்ணுகளும் போகுங்க. தோள் மாத்தறதும் நடக்கும். கோலிக்குண்டு விளையாடிய போதோ, தீப்பெட்டி படம், சோடா டப்பி அல்லது பம்பரம் விளையாடிய போதோ ஏற்பட்ட பகைக்கு பழி வாங்குறதும் நடக்கும்.

நான் நாலாவதோ அஞ்சாவதோ படிக்கையில கோயிலோட வடகிழக்கு மூலையில சாச்சு வச்சிருந்த இடைக்கத்த கையில எடுத்தேன்.

“டேய்.. டேய்… வையுடா.. அதை… கீழ வையுடா…” பெருங்குரல் ஒன்னு பொடனிலேயே சாத்தியது. திரும்பிப் பார்த்தேன். கைலி சட்டையோட தோள்ல துண்டு போட்டிருந்த பெரிய மீசைக்காரர் ஒருத்தர் அடிக்க பாஞ்சு வந்தாரு. அவரப் பார்த்தவொடனேயே எச்சில முழுங்கி பட்டுனு இடைக்கத்த வச்சுட்டேன்.

“நீ காலனிக்காரப்பயதானடா?”

“ஆமாங்கய்யா”

“ஒன்ன யார்டா உள்ள விட்டது. தொறந்த வீட்டுல நாய் நுழைஞ்சமாதிரி. ஓடுடா வெளியில.”

“ஏன் அந்தப் பையன திட்டுறீங்க. அவனும் கிறிஸ்தன் பையன்தானே! கிறிஸ்துமுத்து மகன்தாங்க அவன்,” யாருன்னு தெரியல ஒருவர் எனக்கு ஆதரவா பேசினார்.

“நீங்க சும்ம இருங்க தம்பி. இவனுங்கள எங்க வைக்கனும்மோ அங்க வைக்கனும். வீடுவீடா சோறு வாங்கற பய, நம்ம புள்ளையலோட ஒன்னா கொடி பிடிச்சு போவானாமா?”

“….”

“இது நம்ம கோயில். நமக்குத்தான் உரிமை,” என்று சொன்னவர் “டேய் நீ இன்னும் இங்கிருந்து போகல?” என என்னை நோக்கித் திரும்பினார். பதிலேதும் இல்லாமல்  நான் வெளியேறினேன்.

அப்பறமும் பல நாள்கள் கோயிலுக்கு போயிருக்கேன். சில நாள்கள்ல தூக்க ஆள் இல்லாம நிறைய இடைக்கம் மூலையில இருக்கும். அப்போதும் என்னைய தொட விடமாட்டாங்க.

“நாமளும் கிறிஸ்தவங்க தானப்பா. எனக்கு ஏன் தர மாட்டேங்கிறாங்க? காலனில ஒரே ஒரு கிறிஸ்தவ வீடுங்கிறதால தர மாட்டேங்கிறாங்களா?” னு அப்பாட்ட கேட்டேன்.

“கிறிஸ்தவ ஐயாக்கள் எல்லாரும் கோயிலுக்கு வரி கட்டுறாங்க! அதனால அவங்க புள்ளைங்க இடைக்கம் தூக்குறாங்க. நாம வரி கட்டுறதில்லையில…”

“நாமலும் வரி கட்டலாம்லப்பா….”

“அது.. சரி… குடிக்கவே தண்ணி இல்லயாம்… இதுல கொப்பளிக்க பன்னீருக்கு எங்க போறதாம்..”

“போப்பா.. நீ எப்பவும் இப்படித்தான் பழமொழியா சொல்லுவாய். சரி, கிறிஸ்தவங்க இருக்குற தெருவெல்லாம் சுத்தி வர்ற இடைக்கம் நம்ம தெருவுக்கும் வரலாம்லப்பா?”

இந்தக் கேள்வி என் அப்பா காதுக்குள்ள நுழையாமல் எப்போதும் காற்றோடே போய்விடும் மர்மம் அப்போது எனக்கு விளங்கவில்லை.

இடைக்கம் சுத்தி வந்த பிறகு பாதிரியார் பூசை வைப்பார். அது முடிச்சு எல்லாரும் வீடு போய் சேர எப்படியும் இராத்திரி எட்டு மணி ஆயிடும். எனக்கு பசியில வயிறு உள்ள போயிரும். பானையிலதான் ஒன்னும் இருக்காதே.

அந்நேரத்துல கௌம்பி சாப்பாடு வாங்க ஊர்க்காரவுக வீடுகளுக்கு எங்க சனங்க போவாங்க. இப்ப மாதிரியா வீட்டுக்கு ஒன்னு ரெண்டு, அப்பெல்லாம் வீட்டுக்கு நாலஞ்சு இருக்கும். நண்டு சிண்டு அத்தனையும் கையில ஒரு குண்டான எடுத்துக்கிட்டு ஒவ்வொரு வீடா போவாய்ங்க. கத்தரிக்காய் குழம்பு, கீரத்தண்டு, ஈத்திக்காய் கலனி, கருவாட்டுக் குழம்புன்னு ஏதாவது இத்தினி இத்தினி ஒவ்வொரு பாத்திரத்திலயும் வாங்கிட்டு வருவாய்ங்க. ஏழு நாளும் அப்டித்தான்.

எங்க அப்பா என்னை கூட்டிட்டே போக மாட்டாரு. அவரும் அம்மாவும் மட்டும் தான் கூட்டத்தோட கூட்டமா போவாங்க. எல்லா பசங்களோடயும் எனக்கும் போக ஆசையா இருக்கும். அது அவமானம்னு இப்ப இருக்கிற அறிவு அப்ப எங்கே இருந்துச்சு. நான் அடம்புடிக்கும் போதெல்லாம் என் அப்பா, “நீ படிச்சா போதும்டா. இப்படி சோத்துக்கு பிச்சை எடுக்கிற பொழப்பு எங்களோட ஒழியட்டும்”ன்னு சொல்லும்.

சில வீடுகள்ல, அரிசி இடியுற குறுணலை திருவிழாவுக்குன்னு வச்சிருந்து வடிச்சு போடுவாங்களாம். அந்தக் குறுணச் சோத்தையும்கூட, கூடஇம்புட்டு அள்ளிப்போடம.. இம்புட்டு இம்புட்டுதான் போடுவாங்களாம்.

சாப்டுட்டு தூங்க பத்து மணி ஆகிரும். மறுநாள் காலைலயும் மதியமும் அதே சாப்பாடுதான். சோறு வாங்கும் போது ஒவ்வொருத்தரையும் ஊர்க்காரவுக என்ன சொன்னாகன்னு சொல்லிச் சொல்லி எங்க வீட்டுல நல்லா சிரிப்போம்.

“நாங்களே இன்னும் சாப்பிடல, போய்ட்டு அப்பறம் வாங்க.”

“அம்மா, கடைக்குப் போயிட்டாங்க… அப்பறம் வாங்க” (வீட்டுக்குள்ள அம்மா இருப்பாங்க).

“ஒரு செவைக்கு[7] நில்லுங்கள்ல, வந்துட்டிய ஊரோட…”

“என்ன, அம்புட்டு பேரும் வாறீக!”

“ஏன்… இன்னும் நாலஞ்சு பெத்து கூட்டிட்டு வர வேண்டியது தானே!”

இதையெல்லாம் கேட்டுட்டு அடக்க முடியாம சிரிக்கிற நிலமையிலதான் நாங்க அன்னக்கி இருந்தோம். அம்மா சொன்னுச்சு, “ஏதோ வருசம் முழுசும் போடப்போறது மாதிரி வள்ளு வள்ளுன்னு சிலர் சத்தம் போடுவாங்க… ஒரு மகராசி மட்டும், எப்பவுமே நல்ல அரிசில வடிச்சு தாளம்[8] வச்சு அள்ளிப் பேடும்டா. அவங்க மாதிரி சோறு போட்டா வாங்க நம்மள்ட்ட சட்டி இல்ல.”

எங்க சனத்துக்கு ஆடு மாடெல்லாம் இல்லை. குத்தவைக்கவே குச்சு இல்ல, இதுல எங்கே இருந்து ஆடு மாடு வளக்கிறது. அதனால ஊர்க்காரவுக வீட்டு ஆடு மாடுகளத்தான் மேய்ச்சாங்க. “கூட ரெண்டு புள்ள இருந்தா ஆடுமாடு மேச்சே கஞ்சி குடிக்கலாம்டா”னு பெருமையாவேற பேசுவாங்க.

அதிகாலையில போயி, கசாலையை[9] கூட்டிப் பெருக்கி, குப்பையச் சுமந்து ஊருக்கு வெளியே இருக்கிற அவங்க குப்பைத் தாவுல கொட்டிட்டு, மாடுகளுக்கு தண்ணீர் காட்டிட்டு, கொடுக்கிற பழைய சோத்த தண்ணியோடு தானும் குடிச்சிட்டு, மேய்க்க கூட்டிட்டு போவாங்க. தேவையான புல்லு, பயித்தங்கொடி அறுக்கிறது, கருவேல முத்து பொறுக்குறது, வாக மரத்து இலைகள கொப்போட வெட்டி வந்து, கம்புப் பகுதிய கட்டையால அடிச்சு நச்சு தொளியோட உரிச்சு இரைபோடுறது, மாட்ட குளிப்பாட்டுறது, உண்ணி பிடுங்குறது, கொசு விரட்ட இருட்டினதும் கசாலையில மூட்டம்[10] போடுறதுனு எல்லா வேலையும் செய்வாங்க. அப்பா, அம்மா புள்ளைனு குடும்பமா வேலை செய்வாங்க.

வீட்டாளுங்க எப்பவோ பயன்படுத்திய தட்டும் டம்ளரும் எங்க மக்களுக்குன்னு தனியா இருக்கும். சில வீடுகள்ல பனை ஓலைய வாகா வளைச்சு அதுக்குள்ள ஊத்தி குடிக்கச் சொல்லுவாங்க. அங்கேயே இராச் சாப்பாடும் சாப்டுட்டு பொறகுதான் வீட்டுக்கு வருவாங்க. எங்க அப்பா பல நாள் அங்கேயே மாட்டுத் தொழுவத்தில் தூங்கி ரெண்டு நாளு வீட்டுக்கே வராமல்கூட இருந்திருக்காரு.

ஒருநாள் மதியம் எங்க அப்பா அசந்து தூங்கையில, சுரீர்னு ஒரு அடி விழுந்து வாரிச்சுருட்டி எந்திருச்சிருக்காரு. முன்னாடி தார்க்குச்சியோட நின்னது முதுகுளத்தாரு. முதுகுளத்தூர்ல இருந்து வீட்டுக்கு மாப்பிள்ளையா எங்க ஊருக்கு வந்தவரு. அதுவே அவர் பேரா மாறிடுச்சு. பயங்கர கோவக்காரர்.

கட்டுத்தொறையில மாடுகளை முளக்குச்சியில கட்டி, நீளவாக்குல குறுக்க ஒரு கட்டை போட்டு அதுக்கு அந்தப்பக்கம்தான் இரை போடுவாங்க. புல்லையோ வைக்கோலையோ எடுத்து மென்னு சாப்பிடையில கட்டைக்கு இந்தப் பக்கமும் கொஞ்சத்த மாடுகள் கொண்டு வந்துடும். முதுகுளத்தாருக்கு இது பொறுக்காது. “பறப்பய மேய்க்கிற மாடு பறப்பய மாதிரிதானே திங்கும்”னு கையில கட்டையோ தொவரை மிளாரோ எது கிடைக்கிதோ அத எடுத்து விளாசு விளாசுன்னு விளாசிருவாரு. மாடுகள் இங்குட்டும் அங்குட்டும் அலைபாயும்… கத்தும் ஆனாலும், நாலு பொல்லாவார்த்தையை கத்திக்கிட்டே அடி தீத்துருவாரு. அதுல ஒரு அடி எங்க அப்பா மேல விழுந்தது.

“நல்லா சாப்டுட்டு ஒனக்கையா தூங்குரிகளோ! இன்னும் வெளக்கு வைக்கிற வரைக்கும் தூங்குங்க! புருசனும் பொண்டாட்டியும் திங்கிற சோத்துக்காவது ஒழுங்கா வேலை பாருங்கடா.”

அரண்டு எழுந்த அப்பா வேகமா மாட்ட அவுத்திருக்காரு. அப்பவும் கோவம் அடங்காம, “மாடுகள மேய விட்டுட்டு ரெண்டு கட்டு புல்லு அறுத்துட்டு வந்துடனும்… சொல்லிப்புட்டேன்,” சொல்லிக்கிட்டே திரும்ப அப்பாவ அடிக்க போயிருக்காரு. பாசக்கார மாடு தன் ஒடம்பால அப்பாவ தள்ளிக்கிட்டே, வீட்டுக்கார அய்யாவ குத்தப் போச்சாம். “ஓ.. ஆக்கித் திங்க  வக்கில்லாதவனுக்காக என்ன குத்த வாறீகளோ”னு மாடுகளுக்கு திரும்ப அடி விழுந்துச்சாம்.

உண்மைதானே! சோத்துக்கு வழியில்லாததாலதானே வீடுவீடா போறோம். சாமி பொறக்கிற திருவிழா[11] அன்னக்கி பலகாரம் வாங்க ஆணும் பொண்ணுமா எம்மக்க வீடு வீடா போவாங்க. ஊர்க்காரவுக சிலர் உப்பு முக்குழி[12] செஞ்சு போடுவாங்க. அதிரசம், கேக்கு கொடுத்தவங்களும் இருந்தாங்க.

“வீட்டுல வடை, எண்ணெய் பலகாரம், இட்லி எல்லாம் செஞ்சு எல்லாருக்கும் கொடுக்கிறதுக்கு அவங்க யாருமே கோடீஸ்வரங்க இல்லையே. அவங்களும் வறுமையோட போராடுறவுகதானே!  கட்டுபடியாகுமா? என்ன, சாதிலதான் அவங்க ஒசந்தவுங்க நாம தாழ்ந்தவுங்க…” ஊர்க்காரவுகளோட யதார்த்தத்தையும் அம்மா புரிஞ்சு பேசும்.”

எட்டாந் திருவிழாவின்[13] போது, ஊரவச்ச பச்சரியோட தேங்காய் சில்லு, வெல்லம் கலந்து கோயிலுக்கு எடுத்துட்டு வருவாங்க. அதுக்குப் பேரு காப்பரிசி. எல்லாருட்டு அரிசியையும் ஒன்னா கொட்டி கலந்து… சாமி கும்பிட்டு தீர்த்தம் தெளிச்சு.. வந்தவங்களுக்கு கொடுப்பாங்க. அந்த அரிசியை வாங்குறதுக்காக எல்லா வீடுகளுக்கும் எம்மக்க காலையிலேயே போவாங்க. வெல்லம் போடாம வெறும் அரிசிதான் பல வீடுகளில் கிடைக்கும்.

எங்களுக்குன்னு சொந்தமா கொல்லைங்களும்[14] இல்லை. தான் வேலை பாக்கிற ஐயாவோட கொல்லையில ஒழவு ஓட்டுறது, களையெடுக்கிறது தொடங்கி, கதிரு அறுத்து களமடித்து வீடு வந்து சேர்க்கிற வரையில எல்லா வேலையிலும் மொத ஆளா நின்று வேலை பார்க்கிறது எங்க சனந்தான். நல்ல விசுவாசிக. சாப்பிடுற சாப்பாட்டுக்கு வஞ்சகமில்லாம வேலை செய்யுங்க. கூடகொறைய இருந்தாலும் கொடுக்கிற கூலிய வாங்கிக்கிட்டு வருங்க. உரிமைங்கிற வார்த்தையெல்லாம் தெரியுமோ தெரியாதோ எனக்குத் தெரியல.

தை ஒன்னாந் தேதி, மண் பானையில பொங்கல் வச்சு, கோவில்ல ஜெபம் சொல்லுவாங்க. அந்தப் பொங்கப் பானைய வாங்க எங்களுக்குள்ள பயங்கர போட்டியே நடக்கும். இனிப்பு பொங்கல்ன்னா, ரெண்டு பானையில மட்டுந்தான் பெரும்பாலும் இருக்கும். ரெண்டு குடும்பமும் பர்மாவுல இருந்துட்டு ஊருக்கு திரும்பியவங்க. பர்மா பழக்கத்துல வெல்லம் போட்டு பொங்குவாங்க. அந்தப் பானையில உள்ள பொங்கச் சோத்த ஊரு ஆளுங்களே சிலர் பங்குபோட்டுக்குவாங்க. எங்களுக்குக் கிடைக்காது.

நவம்பர் ரெண்டாந் தேதி உத்தரிக்கிற ஆத்துமாக்க திருவிழாவின் போது கல்லறைக்கு வெளியில சின்ன கொட்டானோட[15] எஞ்சனங்க நிக்கிங்க. கொட்டான்ல கொஞ்சம் நெல்ல கல்லறை பிச்சைனு அள்ளி வழங்குறது வழக்கம்.

ஒருவருசம் எங்கம்மா ஒரு கதை சொன்னுச்சு. கோயில் தெருவுல இருந்த சூசையம்மா பாட்டி மாதிரி ஒருத்தவங்க எங்க குடும்பம் வேலை செய்யுற வீட்டம்மாவோட கனவுல வந்து, “அம்மா பிச்சை போடும்மா”னு மடியேந்திருக்காக. என்னாடி இப்டி இருக்கேன்னு.. காலையில விடிஞ்சதும் சூசையம்மா பாட்டியப் போய் பாத்து,

“என்னங்கத்த ஒங்களாட்டந்தான் இருக்கு பாக்கையில.. மடியேந்திக்கிட்டு பிச்சை போடுனு சொல்றாங்கத்த…”

“ஏம்மா கல்லற பிச்சை போட்டியா.”

“அத்த நான் கொண்டுட்டு போக மறந்துட்டேன் இந்த வருசம்.”

“யாராச்சும் ஐய்யக்கார தர்மக்கார வந்தா ஒரு பத்து ரூபா கொடுமா”ன்னு சொல்லிருக்காக.

சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது அந்தப் பத்து ரூபாய்க்கு எங்கம்மா கெண்ட மீன் வாங்கி வந்து சமைச்சு கொடுத்துச்சு.

என்னாதான் விசேச நாட்கள்ல எம்மக்க கையேந்தி போனாலும் தங்களோட வீட்டுல, காட்டுல, பொதுவா ஊருக்குனு வேலை செய்றவங்களுக்கு சிறப்பு கவனிப்பும் இருக்கத்தான் செஞ்சது. கூட்டத்தோட வராம அவங்கள மட்டும் தனியா வரச்சொல்லுவாங்க. ஆட்டுக் கறியோ கோழிக் கறியோ சமைச்சா அதில ரெண்டு துண்டு போட்டு அவங்களுக்கு குழம்பு ஊத்துவாங்க. எங்க அப்பு சொல்றமாதிரி, “அந்தக் காலத்துல அதததுக்கும் கஷ்டமான நேரந்தானே. அரக்கிலோவோ ஒரு கிலோவோதான் கறியெடுப்பாங்க. இப்போ மாதிரி பிராய்லர் கறியெல்லம் ஊருக்குள்ள எங்கே கிடச்சது.”

பத்து இருபது வருசமாத்தான் எல்லாம் மாறிருக்கு. தலைமுறை தலைமுறையா வரகுக்கும் சோத்துக்கும் பிச்சை எடுத்தாலும் என் அப்பன் ஆத்தா மாதிரியே பலரும் தம் புள்ளைங்கள பள்ளிக்கூடம் அனுப்புனதால் ஏற்பட்ட மாற்றம் இது. பிரான்சு நாட்டுல இருந்து இந்த ஊருக்கு வந்த கிறிஸ்தவ பாதிரியார் லூயி 22 வருசம் இங்கேயே இருந்தாரு. மாணவியர் விடுதியும் தொடக்கப்பள்ளியும் அவர்தான் தொடங்கினாரு. அது இன்னக்கி நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளியின்னு வளந்திடுச்சு. நானும் அங்கதான் படிச்சேன். பிறகு, மஞ்சூர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில மெரிட்ல சேந்து படிச்சு, அரசு பள்ளிக்கூடத்துல வாத்தியாராவும் ஆகிட்டேன்.

பாடம் நடத்தத் தொடங்கி பத்து வருசத்துக்கு மேல ஆச்சு. அந்நேரம், உள்ளாட்சி தேர்தல் வந்துச்சு. தெக்கூரு வடக்கூரு, சாத்த மங்கலம், வெயில்குடினு நாலு கிராமங்கள் சேந்ததுதான் எங்க தெக்கூர் பஞ்சாயத்து. தெக்கூரும் வடக்கூரும் ஒரே ஆளுங்கங்கரதால ஒரு தேர்தல்ல தெக்கூரு வேட்பாளர் அடுத்த தேர்தல்ல வடக்கூரு வேட்பாளர்ன்னு பேசிவச்சு எப்பவும் ஊருக்காரவுங்கதான் ஜெயிப்பாங்க. இந்த தேர்தல்ல தெக்கூர் பஞ்சாயத்து தனித் தொகுதின்னு தேர்தல் ஆணையம் அறிவிச்சிருச்சு.

ஒவ்வொரு ஊர்லருந்தும் ஒருத்தர் வேட்புமனு தாக்கல் செஞ்சாங்க. எங்க காலனிலருந்து நானும் போட்டி போட்டேன். சோறு வாங்கப் போகாத ஊருக்குள்ள ஓட்டு கேட்டுப் போனேன். கூச்சமாக இருந்துச்சு. ஆனாலும், எஞ்சனங்க கூனிக்குறுகிய வீதிக்குள்ள நான் நிமிந்து நடந்ததே வெற்றியா தெரிஞ்சுச்சு. அதுமட்டும் போதாதே! எனக்கு ஓட்டுப் போடனுமே! போடுவாங்களான்னு கொழப்பமாவே இருந்துச்சு.

“வாத்தியாரு நல்ல குணமான பையன்க” என் காதுபடவே சிலபேரு பேசினாங்க. கடைப் பக்கம் போனப்ப சிலர் நிதானமா பாத்தாங்க. உள்ளுக்குள்ள யோசிச்ச கதை அவங்க விழியிலயும் புடிபடல.

மளிகைக் கடைக்கு நான் போனத பார்த்த தர்மராசு டீக்கடையில உக்காந்திருந்த சிலர் என்னையவே பார்த்து பார்த்து பேசினாங்க.

“நம்மட்ட சோறு வாங்கி தின்னவய்ங்கல்லாம் பிரசிடெண்டாகப் போறாய்ங்களாம்.”

“நாகரீகம் பெருத்துப் போச்சுப்பா. அந்தக்காலம் மாதிரியா இருக்குது இந்தக்காலம். அம்புட்டும் படிக்கிறாய்ங்க. படிச்சு போலீசு, வக்கீலு, எட்டுமன், தாசில்தாரு, பஞ்சாயத்து பிரசிடெண்டுனு அடிக்கட்டுல உக்காந்திருக்காய்ங்க. அவய்ங்க சொல்லுறதல்ல நாம கேக்குற மாதிரி இருக்கு.”

“ஆட்டக் கடிச்சு மாட்டக் கடிச்சு மனுசனக் கடிச்ச கதையா, கடைசில இங்கேயுமில்ல வந்துட்டாய்ங்க.”

“ஏன் இப்புடி அலுத்துக்குறீங்க. அவய்ங்க என்ன ஊர அடிச்சு உலையில போட்டா முன்னுக்கு வந்தாய்ங்க. அவய்ங்க தன் கை ஊன்றி கர்ணம் பாஞ்சு முன்னேறும் போது, அதை மதிக்கிறது தானே நமக்கும் அழகு. சொந்தமா பைக்கு காருன்னு மதிப்பா ஊருக்குள்ள பழகுறாய்ங்க. பள்ளிக்கூடம் காலேஜெல்லாம் பாடம் நடத்துறாய்ங்க. கை கட்டி சேவகம் செஞ்சவய்ங்களோட பிள்ளைங்க இன்னய கிழமைக்கி நல்லாருக்காய்ங்கன்னா பெருமைப்படுறதுதானே மனுசத்தனம். நாகரீகம் வளரும்போது நாமளும் மனசளவுல வளரணுமா இல்லையா! என்ன நான் சொல்றது?”

“…..”

கடைக்குள்ள இருந்து வந்த இந்தக் குரல் யாருட்டுனு பாக்க ஆசை. ஆனாலும் முடியல. கொண்டாட்டம் எதுவுமே இல்லாமத்தான் தேர்தல் நடந்து முடிஞ்சது. நானும் ஜெயிச்சுட்டேன்.

இன்னக்கி காலையில கோவில்ல நடந்த கூட்டத்துல, “தெக்கூர் மாதா கோவில் திருவிழாவுக்கு பஞ்சாயத்து தலைவரான நீங்க தான் கொடியேத்தறீங்க சார்,” னு பாதிரியார் சொன்னப்ப ஒரு முத்து விழியில் கிளம்பியதை விழாமல் பார்த்துக்கொண்டேன்.


 • சூ.ம.ஜெயசீலன்

 

[1] ஊர் முழுவதும்

[2] ஊர் பொறுப்பாளர்கள்

[3] இறப்புச் செய்தி

[4] கேழ்வரகு

[5] சமைக்க

[6] நடக்கச் சோம்பேறித்தனம்

[7] ஒழுங்குக்கு

[8] தாம்பாளம்

[9] மாட்டுக்கூடம்

[10] கழிவான வைக்கோல், புல் போன்றவற்றின் மீது நெருப்பு வைத்து புகைய விடுவது.

[11] கிறிஸ்மஸ்

[12] இனிப்பு இல்லாதது

[13] ஜனவரி 1

[14] விவசாய நிலம்

[15] பனை ஓலையில் முடைந்த பெட்டி

ஆசிரியர்

சூ.ம.ஜெயசீலன்
‘உஷ்… குழந்தைங்க பேசுறாங்க’, ‘திருநங்கைகள் வாழ்வியல் - இறையியல்’, ‘ஈழ யுத்தத்தின் சாட்சிகள்’ உள்ளிட்ட 18 நூல்களின் ஆசிரியர். இவரின் மொழிபெயர்ப்பில் அண்மையில், ‘என் பெயர் நுஜுத், வயது 10, விவாகரத்து ஆகிவிட்டது’ நூல் வெளிவந்துள்ளது.
சென்னை புத்தகத் திருவிழா 2017-இல் சிறந்த கல்வி நூல் விருது பெற்ற இவரின் “இது நம் குழந்தைகளின் வகுப்பறை” நூல் கல்வியியல் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

9 thoughts on “பற… பற…

 1. இருபது வருடத்திற்கு முன்பு இருந்த கிராமச் சூழலுக்கு எதார்த்தமாய் அழைத்து சென்றது…
  கல்வி தந்த சமூக மாற்றத்தை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்… நன்றி 🙏🏻

 2. கதை வாசித்தேன் சார்.கணினி யுகத்தில் எல்லாம் மாறியும் மாறாதது சாதிதான்…சாதியால் தீண்டப்பட்டோர்,காயப்பட்டோர் காயமாகக் கதை இயல்பாக நகர்கின்றது.பூச்சுகளின்றி சாதியம் தாங்கிய மனிதமனங்களைப் படம்பிடித்துள்ளது.எனக்கு இதை வாசிக்கஆரம்பித்ததும் புதுமைப்பித்தனின் புதியநந்தன் கதையும் நினைவில் நிறைந்தது.
  நான் 21.12 க்கு ஆரம்பித்து 21.28 க்கு நிறைவுசெய்துவிட்டேன் சார்.தாங்கள் கொடுத்த காலஅளவை விட 5 நிமிடம் முன்னதாக…

 3. ஒவ்வொரு இனக்குழுவிற்கான போராட்டமும் வலிநிறைந்தது…வலி…வலிமைதரும்…எங்கோ வாசித்ததா? கேட்டதா?நினைவில் இல்லை…ஒப்பனையில்லாமல் மனிதவலியை அழுத்தமாகப் பதிவு செய்துள்ள கதை..

 4. அருமையாக இருந்தது வாசிப்பதற்கு எவ்வளவு சிரமம பட்டு இப்பொழுது மக்கள் முன்னேறி வந்துள்ளார்கள் . மனிதர்களை மனிதராக மதிக்க பழகிக் கொண்டார்கள் ஆனால் இன்னும் சில ஊர்களில் மாற்றங்கள் இல்லை. அதிக நேரம் எடுத்துக் கொண்டேன் வாசிப்பதற்கு. வாழ்த்துக்கள்.

 5. சிறப்பு. மிகவும் எதார்த்தமான கதை.20 ஆண்டுகள் பின்நோக்கிய இனிய நினைவுகள்

 6. அருமையான படைப்பு. நமது கிராமத்திற்கு 25 வருடங்களுக்கு முன்பு சென்று வந்த அனுபவத்தை அளித்தது உங்கள் படைப்பு. வாழ்த்துக்கள்.

 7. படிக்கும் போதே மனம் பறந்தது 1990க்கு…நச்சுனு இருக்கு…இது எங்க ஊர் சரிதையின் சாம்பில் சில..அருட்தந்தையின் லாவகமான எழுத்தில் சிக்கிக் கொண்ட எங்க ஊர் சரிதைய வாசிக்கும் போதே மனம் பழைய நினைவை அப்படியே படம் பிடித்தது அற்புதம்..படிக்க படிக்க இன்பமே…வாழ்த்தும் பாராட்டும்….

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page