20 April 2024

வெயில் பறவைகள்
கொத்திப் போன
கனவு தானியங்கள்
இரவில் மீண்டும் முளைத்து விடுகின்றன

இரவு முழுவதும் விழித்தே கிடக்கும்
நட்சத்திர பறவைகள்
கண்களை காவல் செய்கின்றன

மழைக்கு முன் விதைத்த
கனவுகள்
இப்போது
அறுவடைக்குத் தயாராகிவிட்டன

ஒரு நீண்ட பயணம்
பெயரறியாமல் போன
ஒரு கனவை
எனக்கு அறிமுகம் செய்கிறது

வேர்களை
அந்த நிலத்திலேயே
விட்டு வந்த கனவுகள்
தொட்டிச் செடியில்
ஒரே ஒரு பூவினை மலர்த்திவிட்டு
காத்திருக்கச் சொல்கிறது

பகலும் இரவுமாய் உழைத்து
தேகம் கருத்து
வீதியில் ஏங்கி நிற்கும்
வயோதிக கனவுகளை
கல்லெறிந்து கலைத்துவிடுகிறார்கள் சிறுவர்கள்

பகலும் அல்லாத இரவும் அல்லாத
ஒரு கனவைக் கண்டபடி
ஒரு இளைஞன் வேகமாக
சாலையைக் கடக்கிறான்

கனவுகளுடன் சாலைக்கு வருபவர்களை
அச்சுறுத்துகிறது காவல்துறை

கனவுகளை பலியிடும்
அரசன் ஒருவன்
தன் ஆணைகளை
புதிய புதிய வடிவில்
சட்டங்களாக அமுல் படுத்துகிறான்

கனவுகளைக் கொன்ற தேசத்தில்
ஒரு பறவை
தன் தானியங்களை தேடி அலைகிறது

தானியங்கள் இல்லாத நிலத்தில்
பறவைகளின் எலும்புகள் நிறைகின்றன

எலும்புகளும் சாம்பல்களும்
அரசனின்
அன்றாட கனவுகளை
பூமியில்
விதைக்கத் தொடங்குகின்றன

 


– மஞ்சுளா

எழுதியவர்

மஞ்சுளா
கவிஞர் மஞ்சுளா மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார். இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன. மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார். "மொழியின் கதவு " நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி) வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x