20 April 2024

னசு முழுதும் வலியோடு ICU-விற்கு முன் இருந்த வராண்டாவில் படுத்திருந்தேன். என் கூட துணைக்கு படுத்திருந்தான் பால்ய ஸ்நேகிதன் வரதராஜன்.

இன்றோடு அப்பா அந்த ஆஸ்பத்திரியில் சேர்ந்து இரண்டு நாட்களாகிவிட்டது. காலையில எட்டு மணிக்கு லேசாக நெஞ்சில் ஏதோ ஒரு சுகவீனம் இருப்பதாக சொன்னவர் சற்று நேரத்திற்கெல்லாம் தடுமாறுவது போலத் தெரிந்தது. எதேச்சையாய் அன்று வரதராஜன் காலை ஏழு மணிக்கே வீட்டுக்கு வந்ததால் பெரிய உதவியாகப் போயிற்று.

அப்பா ஒரு பரோபகாரி. யாருக்காவது கஷ்டம் என்றால் போதும் உதவி செய்து விடுவார். ஒரு காலத்தில் காதர் பாய் தன் கடையிலிருந்து ஆள் அனுப்பி அப்பாவைக் கேட்ட போது தான் தெரியும் அம்மாவிற்கு. அப்பா சில ஏழை நண்பர்களுக்கு அவர் கணக்கில் வாங்கித் தந்த மளிகை விபரங்கள்.

‘டேய் விச்சு, மனுஷன் வாழ்க்கை இன்னிக்கோ நாளைக்கோ ? இருக்கற வரைக்கும் யாராவது இரண்டு பேருக்காவது உதவி செஞ்சோம்னு திருப்தியா இருக்கனும்டா’

அப்பாவிடம் கற்றுக் கொண்ட சில பாடங்களில் இதுவும் ஒன்று.

ICU விற்கு டாக்டர் விசிட் வந்து போயிருந்தார். கண்ணாடி வழியே மெல்ல எட்டிப் பார்த்தேன். அப்பாவின் முதுகு மட்டும் தெரிந்தது. நல்ல தூக்கத்தில் இருப்பார் எனத் தெரிகிறது.

என்னைப் பொறுத்தவரைக்கும் அப்பாவிற்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை.

“அப்பா இந்த இஸ்ரேல் பிரச்சனை என்னதாம்பா ?”

“விச்சு, அதைப் பற்றி எதாவது படிச்சிருக்கயா?” என்று ஆரம்பித்து காஸாவில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு வரை விவரிப்பார்.

அப்பா ப்ளாக் ஹோல்னா என்ன என்று கேட்டுவிட்டால் போதும். பிரபஞ்சத்தில் ஆரம்பித்து சொல்லி முடிக்க ஒரு மணி நேரமாவது ஆகும். அப்பா என்பவர் ஞானம். அப்பா என்பவர் சிவம் அவரைச் சுற்றி வந்தாலே போதும்.

அப்பா என்பவர் வாழ்வியல் கணக்குகளுக்கான சூத்திரம். சூத்திரம் என்கிற வித்தையைக் கற்றால் போதும். வாழ்க்கை வசப்பட்டு விடுகிறது.

அவருக்கென்று ஒரு ரசனை இருந்தது. MKT-யில் ஆரம்பித்து, சின்னப்பா, கிட்டப்பா, ஏ.எம்.ராஜா என எல்லோரின் பாடல்களையும் பாடுவார். அதுவும் வாசலில் ஒரு திண்ணை இருந்தது. இரவு உணவிற்கு பின் அதில் துண்டை விரித்து எதாவது ஒரு பாட்டை பாடிக் கொண்டோ அல்லது அந்தப் பாடலை விசிலடித்துக் கொண்டோ இருப்பார்.

காலை விடிந்ததும் வீட்டிற்குப் போய் முதலில் குளிக்க வேண்டும். இந்த மருத்துவமனை வாசனை உடம்பு பூராவும் அடிக்கிறது. அம்மாவிடம் சூடாக ரசமும் சுட்ட அப்பளமும் செய்து தர வேண்டும். அப்புறம் மறக்காமல் வரதராஜனுக்கு மதிய உணவு. அத்தைக்கு அப்பாவின் உடல்நிலை பற்றி ஃபோன் செய்து சொல்ல வேண்டும். அந்த டூட்டி டாக்டரிடம் இன்னுமொரு பேசி அப்பாவின் உடல் நிலை முன்னேற்றத்தை அறிந்து கொள்ள வேண்டும்

இதோ குளித்தாகி விட்டது. ஸ்வாமி படங்களுக்கு முன் நின்று அப்பாவை நல்ல விதமாக குணமாக்கித் தர வேண்டியபின் ஒரு மணி நேரமாவது தூங்கிவிட வேண்டும். இரவின் கொசுக்களின் உபத்ரவத்தில் சரியான உறக்கமில்லை.

பகல் நேரத் தூக்கத்தில் என்னென்னவோ கனவு. சின்ன வயது விஸ்வநாதனாய் அப்பாவின் கால்களில் நான், அப்பா ஜெமினி கணேசனாக மாறி சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ என்று பாடுகிறார். அதைப் பாடி முடிந்ததும் சின்னப் பயலே சின்னப் பயலே என்ற எம்ஜிஆராகி பாடுகிறார். அப்புறம் சைக்கிள் கேரியரில் என்னை உட்காரச் சொல்லி நான்கு ரோடு வரை காத்தான் கடைக்கு அழைத்துப் போகிறார். காத்தான் கடை வந்ததுமே சைக்கிளை நிறுத்தும் போது கனவு கலைந்து விடுகிறது.

அப்பா ஒரு படு ஜனரஞ்சகப் பேர்வழி. ஹோட்டல் சர்வராக இருந்தாலும் சரி பெரிய அலுவலராக இருந்தாலும் சரி. நண்பர்களாகிவிடுவார். சைக்கிள் கடை அல்லிமுத்துவைக் கூட ‘தலைவரே!’ என்று அழைப்பார்.

பொதுவாகவே தோழமையைக் காட்டி யாரையும் மடக்கி விடலாம் என்பது அவரிடம் கற்றுக் கொண்டது தான்.

ஒரு வாரத்திற்குப் பின் வீடு வந்த அப்பா நீண்ட நாட்கள் இருக்கவில்லை. ஒரு நாள் இரவு, ஒரு மணிக்கு மேல் அவருக்கு என்னவோ செய்திருக்க வேண்டும். அவரே ஆட்டோவிற்கு ஏற்பாடு செய்தார். அந்த நேரத்தில் மிகத் தாமதமாகத் தான் ஆட்டோவும் வந்தது.

நானும் மனைவியும் அவரோடு மருத்துவமனைக்குக் கிளம்பிய ஐந்து நிமிடத்தில் அப்பாவின் தலை, மனைவியின் தோளில் சரிந்தது. பக்கத்தில் இருக்கும் மருத்துவமனையில் அவரைப் பார்த்ததும் அனுமதிக்கவே இல்லை. Brought Dead என்கிற சந்தேகம் போலிருக்கிறது. கெஞ்சிக் கேட்டும் மறுத்து விட்டார்கள். ஆட்டோவின் வேகம் போதாது என வழியில் ஆம்புலன்ஸில் மாற்றி ஆம்புலன்ஸைக் கிளப்புகிற நேரத்தில் அதில் டீசல் போதுமானதாக இல்லை.

‘ஆண்டவா…என்ன இது. எதை உணர்த்த இதைச் செய்கிறாய் ?’

எனக்குள் உள்ளுறத் தோன்றியது இது தான். ‘ எல்லாம் முடிந்து விட்டது’. இருந்தாலும்., இரண்டாவது மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று எலக்டரிக் ஷாக் தந்து பார்க்க மன்றாடினேன். அங்கேயும் அது நடக்கவில்லை. பின்னர் அங்கிருந்து தொலைவிலிருந்த மருத்துவமனையில் ( எங்கே ட்ரீட்மென்ட் செய்யப்பட்டதோ அங்கேயே). எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தார்கள். அப்பாவின் உடல் மட்டும் அதிர்ந்தது.

எல்லாம் முடிந்து சில நாட்கள் கழித்து அப்பாவின் கைபேசியையும் எடுத்துக் கொண்டு (சில நேரங்களில் அவரின் நண்பர்கள் அழைப்பதுண்டு) மருத்துவரிடம் இறப்பு சான்று வாங்கச் சென்றேன். பொதுவாக நான் சென்ற நேரத்தில் மருத்துவர் வந்திருப்பார். ஆனால் அன்றைக்கு க்ளினிக் பூட்டியிருந்தது. எல்லாவற்றையும் அப்டேட் செய்கிற பழக்கத்தில் என் கை பேசியை எடுத்து மருத்துவர் இன்னும் வரவில்லை என்கிற தகவலைச் சொல்ல எண்களை அழுத்தி முடிக்கிறேன். மேல் சட்டையில் வைத்திருந்த அப்பாவின் கை பேசி சிணுங்கியது. யார் அழைத்திருப்பார்கள் என அவர் கைபேசியை எடுத்துப் பார்க்கிறேன். அதில் என் பெயர் வருகிறது.

‘அய்யோ.. !!.’.என உடைந்து அழுகிறேன். அது மட்டும் தான் என்னால் முடிந்தது.


  • மதுசூதன். எஸ்.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x