20 April 2024

தியாகிகள் விருட்சமாகட்டும், துரோகிகள் விழ்ச்சிக் காணட்டும். இவ்வாக்கியம் ஆகஸ்ட் மாதத்திற்கு மிகவும் பொருந்தும். இம்மாதம் இரு முக்கிய தினங்களை நினைவுகூர்கிறோம். ஒன்று நாட்டின் சுதந்திர தினம். மற்றொன்று, உலக மனிதநேய தினம்(ஆகஸ்ட் – 19). தியாகமே உண்மை விடுதலைக்கான மருந்து. உண்மை விடுதலையே உரிமைகள் காக்கும் மனிதநேயச் சான்று. பாதிரியார் ஸ்டான் போன்று உண்மை விடுதலைக்காய் போராடும் போராளிகள் மனிதநேயமற்ற விதத்தில் படுகொலை செய்யப்படும் பாசிச ஆட்சியின் பிடியில் நமத்துப்போன இதயத்தோடு இனியும் நாம் வாழக் கூடாது. குறிப்பாக, மொத்த மக்கள் தொகையில் 35 விழுக்காடு கொண்ட வலிமைமிகு இளமை வரலாறு அறிந்து வழிகள் தெளிந்து மனிதம் காக்க, இயற்கை வளங்கள் பேண போராட வேண்டியது அவசரம். கொடிக்கம்ப சுதந்திரத்தை விட்டெழுந்து வீதியில் மானுட நலன்களுக்காய் கரம் கோர்ப்பது அவசியம்;. மிட்டாய்களைக் கொடுத்து அழுகைகளை அடக்கும் அவலங்கள் இனியாவது மறைய வேண்டும். ஆண்டொன்றிற்கு நினைவுகூறும் சாத்திரச்சுதந்திரம் தொலைத்து அனுதினமும் சாமானியரும் சமஉரிமைகளோடு வாழும் சமத்துவச்சுதந்திரம் புலர வேண்டும். அதற்கு தியாகிகளுக்கும் துரோகிகளுக்குமான வித்தியாசம் இனம் காணப்பட வேண்டும் என்பது காலச்சக்கரத்தில் இளைய சமூகம் கவனிக்க வேண்டிய முக்கிய பாடம்.

விடுதலை சொல் அல்ல செயல்

வரலாற்றை திருப்பிப்பார்ப்பது உத்வேகம் தரும். விடுதலைத்துடுப்பினைக் கையில் ஏந்தி கம்பீரமாய் தூக்கு மேடை நோக்கி; நடந்து மரணத்திற்கு வெட்கம் வரச் செய்த கட்டபொம்மனின் தீர்க்கமான வீரம் இன்று எங்கே? விடுதலைப் போரை பாதியில் விட்டுச் செல்லும் சோகத்தில் தாய்மண் தேடித் தவித்த சின்ன மருதுவின் கால்கள் எங்கே? சரியாகத்தான் வாழ்ந்திருக்கிறோம் என்கிற மனசாட்சியின் தீர்ப்பால் மனதுக்கு அமைதி நேரினும், சாகும் தருணத்திலும் தனது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்திய திப்புவின் பொறுப்புணர்வு எங்கே? முற்றும் துறந்த முனிவராலும் துறக்க முடியாத தாயின் பாசத்தை அகவை பதினான்கில்; துறந்து, காக்கிச்சட்டைகள் லத்தியால் அடித்து பெயரை கேட்டபோதெல்லாம் ‘விடுதலை! விடுதலை!’ என்றே முழங்கிய ஆசாத்தின் விடுதலைப் பற்று எங்கே? நம் முன்னோரின் விடுதலை வேட்கை இன்று எங்கோ  அரசியல் பிழைத்தோரின் சிம்மாசன மொழியாகிப் போனதுதான் வெட்கக்கேடு? இதற்கு காரணம் யார்? நாம் எல்லோரும்தான்.

மண்ணின் மாணிக்கங்கள் என்று மார்புத்தட்டிக் கொள்ளும் இளவல்களின் போராட்டக் குணமும் விடுதலை உணர்வும் எதனால் இன்று குமிழ்நீராய், காற்றடைத்தப் பையாய் ஆகுது? விடுதலை என்ற சொல்லை உச்சரித்தாலே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற இலட்சிய இளவல்களின் பெயர்கள்தான் நம் நினைவிற்கு வரும். வன்முறைகளால் வதைக்கப்பட்டு ஆதிக்க அடக்குமுறைகளால் அழிக்கப்பட்ட தேசத்தின் ஆன்மாவை தங்களின் கழுத்திறுக்கிய தூக்கு கயிற்றால் பிழைக்க வைத்தவர்கள் இவர்கள். இலட்சியங்களுக்காய் இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளின் இரத்தம் இன்றைய இளவல்களின் உணர்வற்ற தன்மையைப் பார்த்து பரிகசிக்கிறது. தனது கல்வி – தனது வேலை…இவையிரண்டுமே ஆகச்சிறந்த குறிக்கோள் என்கிற குறுகிய வட்டத்திற்குள் தூங்கிக் கொண்டிருக்கிறது இளமை. எனவேதான் சிந்தனை மாற்றம் இல்லாத வலைத்தள அல்லது ஊடக எதிர்ப்பை பெரிய சாதனையாகப் பதிவு செய்வதோடு தன்னுடைய சமூகக்கடமையை நிறைவேற்றிவிட்ட பெருமூச்சு பலருக்கு இங்கு.

போராட்டக் குணமும், சமூகப் பொறுப்புணர்வும் மிகுந்திருந்த வரலாறு இன்று சுயநலத்தால், கார்ப்பரேட் தனத்தால், ஒற்றைமயத்தால் சுருங்கி விட்டது இன்னொரு அவலம். கார்ப்பரேட் பயங்கரவாதம், பா.ஜ.க – வின் மதவாதம், மண்ணையும் மக்களையும் இடம்பெயர வைக்கும் இனவாதம், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் போக்கு என தொடரும் பக்கவாதங்களை படுகுழிக்கு அனுப்பும் நாள் என்னாளோ? விடுதலைப் போராட்ட உணர்வை இலட்சக்கணக்கான இளைஞர்களின் இதயத்தில் விதைத்திட தனது மரணத்தையே செயல்திட்டமாக மாற்றிக்கொண்ட இளம் போராளி பகத்சிங் போன்று இன்றும் இளம்போராளிகள் நம் மண்ணில் தேவை.

இங்கு நடப்பது என்ன?

இளைஞர்கள் நாட்டைப்பற்றி, நாட்டை ஆளும் மூகமூடிகளைப் பற்றி, அதிகார வர்க்கங்களின் ஊழல்களைப்பற்றி, அனைத்தையும் வணிகமயமாக்கும் கார்ப்பரேட்டுகளைப்பற்றி சிந்திக்கக் கூடாது, எதிர்க்கக்கூடாது, விமர்சிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் ஆளும் வர்க்கங்கள். எனவே, வளரிளம் தலைமுறை சுயமாகச் சிந்திப்பதை நிறுத்திட ஊடக உறவுகளுக்குள் உறங்க வைப்பதும், உணர்வுகளை கிளுகிளுப்பூட்ட சதைப்பிண்டங்களை உலவ விடுவதும், டாஸ்மாக் கடைகளை திறந்து சீரழிவுக் கலாச்சாரத்தை புகுத்துவதும் தொடர் கதையே! எப்படி சீனாவை அடிமைப்படுத்துவதற்கு அபினை விற்று ஆங்கிலேய ஏகாதிபத்தியம் அடக்குமுறை செலுத்தியதோ, அவ்வாறே இங்கும் டாஸ்மாக் கடைகளைத் திறந்தும் இளவல்களை போதையில் தூங்க வைக்கிறது அரசுகள். உரிமைக்காக வெகுண்டெழும் இளவல்களை தங்களது ஆதிக்கக்கரங்களால் அடக்க முனைகிறது. அப்படியெனில் இன்னும் நாம் சுதந்திரம் அடையவில்லை என்பதுதானே உண்மை.

இளமை பருவமும் உண்மையை உணர்ந்து சிந்தனையில் தெளிவு பெற்று திருந்துவதற்குப்பதில் கார்ப்பரேட்டுகளின் சூழ்ச்சிகளை வாழ்வியல் நெறியாக கைகொள்கிறது. உன்னை மட்டும் குறித்து சிந்தித்து நட, போட்டி உலகில் உனக்கு அடுத்திருப்பவன் எதிரி. எனவே, அவனை அழிப்பது ஒன்றே உனது வெற்றிக்கான நியதி என்பவையே இலைமறைக்காயாக ஊட்டப்படுகின்றன. இன்றைய தனி அறை – தனிக் கணினி இதன் பிம்பங்களே! படிப்பு – வேலை இவை மட்டுமே வாழ்வின் ஒழுங்குமுறை என்பவை இதன் அவலங்களே! இத்தகு அடிமைத்தளைகளிலிருந்து விடுபட முயற்சிகள் மேற்கொள்வதே நம் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் செவ்வணக்கம்.

இப்படிக்குத் தியாகிகள்

சமீபத்தில் பெங்களுர் இலக்கிய விழாவில் கௌரி நினைவாக கவிதா லங்கேஷ் வாசித்த கவிதையிலிருந்து ஒரு பகுதி : ‘கௌரி லங்கேஷ் மௌனமாகி விட்டாளா? ஹா! ஹா! என்ன வேடிக்கை!! சூரியகாந்தி விதையைப்போல அவள் திடீரென்று வெடித்துச் சிதறி அனைத்து இடங்களிலும்…இந்தியாவிலும், கடல்களையும் தாண்டியும்… தற்போது மௌனம் கோஷிக்கிறது…எதிரொலிக்கிறது…நாங்கள் எல்லோரும் கௌரி..’ தியாகிகளிடமிருந்து இனியாவது நாம் பாடம் கற்க வேண்டும். கற்போமா?

பாடம் – 1 தியாகிகளிடம் இலக்கு இருந்தது. தற்பொழுது அது தடைபட்டதா? சுதந்திரம் ஒன்றே இலக்கு. அடிமைப்பட்டிருக்கும் வெள்ளையரின் ஆதிக்கத்திலிருந்து சிந்தனையளவில் செயல்பாட்டளவில் சுதந்திரம் தேவை என்ற புரிதல் பெற்றிருந்தனர். ஏன்? அந்நிய பொருட்களைக்கூட பயன்படுத்தமாட்டோம் என்ற வைராக்கியம் வைத்திருந்தனர். வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடிப்பதைக்கண்ட வ.உ.சி தனது எதிர்ப்பை தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தை முதலில் எதிர்த்தார். சுதேசிப் பொருட்களை மக்கள் வாங்க முழங்கினார். இதுதான் உண்மையான விடுதலைக்கான இலக்கு.

இன்று இந்தியாவில் சுதேசி தொழிற்சாலைகள் பலவும் மூடப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பணத்தை அந்நிய நிறுவனங்கள் நம்மிடமிருந்து சுருட்டிச் செல்கின்றன. நாம் சார்ந்துள்ள மண், மனிதர்கள், சமூகம், கலாச்சாரம் முக்கியமானது. மனிதர்களை அவர்களது மண்ணிலிருந்து கலாச்சார பண்பாட்டிலிருந்து வேரறுக்க முயலும் எத்தகு சக்தியாயினும் கொடியதே, வாழ்வை அழிப்பவையே! இதனை உணர்ந்து செயல்பாடுகளை முன்னெடுக்க முடியுமா?

பாடம் – 2 தியாகிகளின் இயக்கம் தொடர்ந்தது.

இப்பொழுது அது உடைபட்டதா? இளையோர் இணைந்து இயக்கமாய்  செயல்படுவது குறைந்து கொண்டிருப்பதற்கு கார்ப்பரேட்டுகளின் சதியே காரணம். தனிநபர் துதிபாடல்கள் கொண்டாடப்படும் அளவிற்கு இயக்கச் சாதனைகள் இடம்பெறுவது இல்லை. விடுதலைப் போராட்டத்தில் தனிநபர் முயற்சிகள் அல்ல வென்றது. மாறாக, இயக்க உணர்வுகளும் கோரிக்கை முழக்கங்களுமே ஆதிக்க வர்க்கங்களை குலை நடுங்க வைத்தது. இன்றும் மக்கள் இயக்கங்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இலக்கணம் மெரினா போராட்டம் மற்றும் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள்.

இலட்சிய இயக்கங்களை வளர்த்தெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். ரசிகர் மன்றங்கள், மதவாத சக்திகளின் ஒருங்கிணைப்புகள் தனிநபர் துதிபாடலுக்கும் பிரியாணி கூட்டத்திற்கும்தான் வழிவகுக்கும். இவற்றிற்குப்பின்னால் இளைய தலைமுறை வழிநடப்பதைவிட வேறு அவமானம் எதுவுமில்லை. இலட்சிய இயக்கங்கள் வளர வேண்டும்; வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்கு, கருத்தியல் தெளிவுகள் பிறக்க வேண்டும். அடிமட்டத்திலே இளவல்கள் பொதுநலக் காரியங்களை முன்னிறுத்தி சாதி மதப்பாகுபாடுகளைக் களைந்து ஒன்றிணைய வேண்டும்.

பாடம் – 3 தியாகிகளிடம் போராட்ட உணர்வு வளர்ந்தது.

தற்பொழுது அது அடைபட்டதா? வீதிக்கு வருவது குற்றமென சூளுரைக்கும் தலைமுறைகள் தற்பொழுது வளர்த்தெடுக்கப்படுகிறது. துரித நேரத்தில் கோழிகள் மட்டுமல்ல, இன்றையப் பிள்ளைகளும் வளர்த்தெடுக்கப்படுகின்றனர். எனவேதான் பிராய்லர் கோழிகள் போன்று உடலளவில் கட்டுமீறிய வளர்ச்சி இருந்தாலும் தேவைக்கேற்ப உணர்வுகளில் வெப்பக் கொதிப்பு இல்லை. ஒருவேளை இருந்தாலும், அது காதல் சாதல் முடிவாகத்தான் இருக்கிறது. மனிதர்களுக்கே உரித்தான போராட்ட உணர்வு இன்றைய தலைமுறையிடம் குறைவே. வாடிவாசலுக்கான போராட்டத்தில் பங்கேற்க என்னுடைய பணித்தளத்திலிருந்தும் சில இளைஞர்கள் தொடர்ந்து சென்றார்கள். ஏனென்று வினவியபோது சொன்னார்கள்,  ‘காலேஜ் கட்டடிக்க ஒரு வாய்ப்பு. நேரத்திற்கு நேரம் டீ, காபி, சாப்பாடு ரொம்ப ஜாலியா இருக்கு’. இதுதான் எதார்த்தம். இன்றைய போராட்டங்களில் கலந்து கொள்ளும் பலருக்கு ஏன் அந்தப் போராட்டம் நடக்கிறது என்றோ, எதற்காக தான் பங்கேற்றிருக்கிறேன் என்பதோ தெரியாது. ஐயோ பாவம்! ஊடகச் செய்திகள் கேட்டு போராட்டங்களைத் தொடங்கும் இளையோரில் பெரும்பாலானோருக்கு போராட்ட உணர்வு இல்லை என்பதே உண்மை. எனவேதான் போராட்டங்கள் சென்றடைய வேண்டிய இலக்கை அடைவதில்லை. அரசு இயந்திரங்களின் நெருக்கடி என்றதும் பின்வாங்குதல்கள் தொடர்கிறது.

நம் போராட்டங்கள் புரட்சியாளர்களை உருவாக்கவில்லை. இன்னல்களையும் இடர்பாடுகளையும் வேதனையையும் துன்பங்களையும் பொறுத்துக் கொள்வதற்கு தயாராக இல்லாத சமூகத்திலிருந்து போராட்டவாதிகள், புரட்சியாளர்கள் தோன்ற வாய்ப்பில்லை. ‘ஒரு புரட்சியாளர் தன் உயிரை தியாகம் செய்ய முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தூக்கு மேடை ஏறுவதன் மூலம் நான் உலகிற்கு எடுத்துக்காட்டுவேன்’ என்ற பகத்சிங் வார்த்தைகள் நம் இளையோருக்கு தூண்டுதலாகட்டும். இந்திய சுதந்திரம் சாத்தியமல்ல என்ற அவநம்பிக்கையில் நாடே துவண்டு கிடந்த தருணத்தில், ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என்ற வரிகள் மூலம் பரவசம் ஏற்படுத்திய பாரதியின் சுதந்திர உணர்வுப் பாடல்கள் போன்று நம் இளவல்களிடம் சுதந்திர உணர்வு குறித்தக் கருத்தாக்கங்கள் பரவிடட்டும். கண்டதையும் ஊடகங்களில் உலவவிடும் தன்மைகள் மறைந்து அடிமைத்தனங்களை ஆதிக்கங்களை அடையாளம் காட்டும் விதமாய் பகிரும் கருத்துக்கள் செயல்பாடுகள் அமையட்டும். குறிப்பாக, பன்முகம் கொண்ட இந்தியாவை கூறுபோடும் ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களின் செயல்பாடுகளை, சாமானியர்களை வதைக்கும் விதமாய் கொள்கைகளைப் பிரகடனப்படுத்தும் கார்ப்பரேட்டுகளை, ஆதிக்க வர்க்கத்திற்கு தோரணம் எழுப்பும் ஊடகங்களை விமர்சிக்கவும் அவற்றிற்கு எதிராய் போராடுவதற்கான வீரத்தை பெறுவதே நம் உடனடி வேலை! அதுவே விடுதலைக்கான உண்மையான வழித்தடம்! சுதந்திரக் காற்றை எல்லோரும் சுவாசிப்பது எப்போது? வேட்கையுடன்…!


ம.டைட்டஸ் மோகன், இத்தாலி

எழுதியவர்

ம.டைட்டஸ் மோகன்
ஆய்வு மாணவர், மிலான்நகர்.

குமரி மாவட்ட எழுத்தாளர். இதுவரை தன்னம்பிக்கை, இளையோர் முன்னேற்றம், அரசியல், ஆன்மீகம் சார்ந்த 42 நூல்களைப் படைத்துள்ளார். சில நூல்களை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார்.  தற்பொழுது இத்தாலியின் மிலான் நகரில் தனது முனைவர்பட்ட ஆய்வினை அறநெறி கோட்பாடுகளில் மேற்கொண்டுள்ளார்.
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
சூ.ம.ஜெயசீலன்
சூ.ம.ஜெயசீலன்
2 years ago

அருமையான கட்டுரை! சுயவிழிப்புணர்வுக்கு நம்மை அழைப்பதுடன்… பிறருக்கு வழி காட்டவும் அழைக்கிறது!

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x