25 April 2024

பாசிசம், மனிதம், அன்பு எனும் முப்பரிமாண கதையாடலை முன்வைக்கும்

அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி

 

பாசிசம் அதிகாரத்தின் அங்கமாகப் பரிணமித்துள்ள இன்றைய பின்காலனியச் சூழலில் அரசதிகாரத்தின் அதிகார மேலாண்மையை அடையாளப்படுத்தும் சிறுகதைகளைத் தாங்கிய தொகுப்பாக வெளிவந்துள்ளது அ. கரீமின் ‘அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி’. அன்பே எனத் தொடங்கி அன்பின் அழகியலில் முடிகிறது இத்தொகுப்பு. மனிதம் சுரண்டலுக்குள்ளாக்கப்படும் தேசத்தில் அதன் மீதான மிச்ச சொச்ச நம்பிக்கையை இக்கதைகளின் நெடுகிலும் காணமுடிகிறது. அரசு கருத்துருவம் தனது சொந்த குடிகளின்மீது பாரபட்சத்துடன் நடந்து கொள்ளும் பாசிசத்தின் வளர்ச்சிக் கட்டத்தையும் மனிதத்தின் மிஞ்சிய பாகங்களையும் அன்பெனும் அழகியலையும்  மிக நுட்பமாக அடையாளப்படுத்தும் இத்தொகுப்பை,

  1. பாசிசத்தின் வளர்ச்சிக் கட்டத்தை அடையாளப்படுத்தும் கதைகள்
  2. நிர்கதிகளாக்கப்படும் சுதேசி குடிகள்
  3. இந்திய ஒன்றியத்தின் பசி நிவாரணி
  4. மனிதத்தின் மிஞ்சிய பாகங்கள்
  5. படைப்பு மேதமையும் மரபார்ந்த அறிவும்
  6. பிம்ப அரசியலும் அன்பும்

என்ற பொருண்மைகளை முன்வைத்து இக்கட்டுரை உரையாடுகிறது.

பாசிசத்தின் வளர்ச்சிக் கட்டத்தை அடையாளப்படுத்தும் கதைகள்

மத அடிப்படைவாதம் சக மனிதனை உடற்கூறாய்வு செய்து அவனது அடையாளத்தைக் கண்டறிந்து அவன்மீது ஆளுகையைச் செலுத்துகிறது. தனக்கு ஒவ்வாத உடல்களைக் கண்காணிப்புகளுக்குள் ஆழ்த்துகிறது. வாழ்வுரிமையை நிராகரிக்கிறது. தேச விரோதி, சமூக விரோதி, மதவிரோதி என்ற கருத்தாயுதங்களைத் துளைத்து சுதேசிக் குடிகளின் இருப்பு மீதான அச்ச உணர்வை விதைத்து  இருப்பின் மீது அதிர்வை ஏற்படுத்தும் செயலைச் செய்கின்றது. இந்த இருப்பில் சுய தேர்வு × சுய ஏய்ப்பு என்ற இணைமுரண் உருவாகிறது. இதை சார்த்ரு,

சுய உணர்வும் சுய தேர்வும் விளைவனைத்தையும் தாங்கும் நேர்மையும் உள்ளவனே வாழ்க்கையை நல்ல விசுவாசத்துடன் (in good faith) சந்திக்கிறான். சுய ஏய்ப்பும்  பொறுப்பின்மையும் சாக்கு போக்கும் உள்ளவன் இருப்பைத் தீய விசுவாசத்தில் (‘in bad faith’) தவிர்க்க முயல்கிறான்” (2013, . 8)

இவ்வாறு எடுத்துரைப்பதாக நோயல் ஜோசப் இருதயராஜ் குறிப்பிடுகிறார். தனது சுய தேர்வின் வழி இயங்கிய மனிதனை மத அடிப்படைவாத சமூகம் நரகமாக கணித்து பலியிடுகிறது.

அவ்வடிப்படையில் மத அடிப்படைவாதிகள் சக மனிதர்களின் மதம் குறித்த மாற்றுக் கருத்துக்களைக் கூராயுதங்களால் குத்திக் கிழித்து தனது மத விசுவாதத்தைக் பரிசோதனை செய்துகொள்ளும் இழிச்செயலை ‘அன்பே ஆசிபா செல்லமே யாஸ்மின்’ கதை எடுத்துரைக்கிறது. மதவெறி தனது சகத் தோழனையும் எதிரியாகப் பாவிக்க வைத்து, குரூர எண்ணம் கொண்ட ஆட்டுமந்தைக் கூட்டத்தில் கலக்கச் செய்து, ஒற்றை நூலின் கருத்துவழி இயங்கச் செய்யும் பணியைச் செய்து வருகிறது. மாற்றுக் கருத்தாளர்களைக் கழுவேற்றும் மத மரபை அடையாளப்படுத்தும் போக்கில் இக்கதை அனைத்து மதங்களையும் விசாரணைக்குட்படுத்துகிறது.

தன் மதத்தைச் சார்ந்த ஒரு பெண் எப்படியாக நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்த விவாதத்தில் தொடங்கி, தீவிர மதவெறி, மாற்றுக் கருத்தாளனான ஃபாரூக்கை பலிகொள்ளும் செயல்பாட்டை இக்கதை தீவிர விசாரணைக்குட்படுத்துகிறது. மதம், மனிதனை மனிதனாக அறியத் தூண்டாது மத உடலாகத் துண்டாடி அவர்களை கண்காணிப்பிற்குள் ஆழ்த்தி கட்டுப்படுத்துகிறது. ஹராம்’ என்ற ஒற்றைச் சொல்லாடல் ஒரு மதத்தின் உயிர்ரோட்டத்தில் கலந்துள்ள மக்களை அச்சத்திற்குள்ளாக்கி மதஅற மீறலைக் கட்டுப்படுத்துகிறது மீறினால் சிதைப்பிற்குள்ளாக்குகிறது. கட்டுப்படுத்தலோ, சிதைப்போ கடவுளின் பெயரால் நிகழ்த்தப்பட்டு விதந்தோதப்படும் போக்கை இக்கதை புலப்படுத்துகிறது.

நிர்கதிகளாக்கப்படும் சுதேசிக் குடிகள்

சுதந்திர தேசத்தில் குடிகள் அடக்குமுறைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ளுதல் ஓர் அறமாகச் சூளுரைக்கப்பட்டுள்ளது. அரசு அதிகார மேலாண்மை கொண்டதாக வடிவெடுத்துள்ளது. அது குடிகளைப் பாதுகாத்தல் என்பதை அரசியல் கோட்பாடாக உருவாகியுள்ளது. அரசின் இருப்பிற்கு மனித உடல்கள் தேவை. அரசு நிலைத்திருக்க வேண்டுமெனில் அதற்கான விசுவாசிகளை உருவாக்குவது அவசியம். விசுவாசத் தன்மையற்றவர்களை, தனக்கு ஒவ்வாதவர்களை  கண்காணித்தல், கட்டுப்படுத்துதல், வாழ்தலின் இருப்பை நிலைகுலையச் செய்து ஒறுக்கி சுத்தப்படுத்துவது அரசின் தலையாயக் கடமையாகிறது.

மனித சமூகம் ஒரு தேசத்தின் குடிமக்களாக மாறுதலில் அவர்களது சுதந்திரம் வரையறைக்கு உட்படுத்தப்படுகிறது. குடிமக்களாக இருத்தல் நாட்டின் இறையாண்மை விதிகளுக்கு கட்டுப்பட்டிருத்தலாகும். இதுகுறித்து ஜியார்ஜியோ அகம்பன்,

ஒவ்வொரு உடலிற்குள்ளும் உள்ள உயிர்த்தல் மற்றும் வாழ்தல் குறித்த இருமையின் விளைவாக வாழ்தலுக்காக ஒரு உயிர் தனது உயிராற்றலை அரசியலுக்கு அல்லது தனது குடியாண்மைச் சமூகத்திற்கு அல்லது தனது இனத்திற்குச் செலவழிப்பதற்கான ஒரு ஆளுகைத் தொழில்நுட்பமே குடிமக்களாதல் எனலாம். ஒரு உடல் குடிமகனாக மாறுவதன் மூலம் ஆளப்படும் தன்னிலையாக மாற்றம் பெறுகிறது. ஒரு அதிகார அமைப்பு ஒரு உடலை ஆள்வதற்காக அவ்வுடலின் உயிராற்றலைத் தனது ஆட்சியின் இறையாண்மைக்காக முதலீடு செய்யும் செயலாகவே இந்தக் குடிமகனாதல் என்கிற செயல் நடைபெறுகிறது. மனிதனுக்கு உரிமை கிடையாது அது குடிமகன்களுக்கு மட்டுமே உண்டு என்பது இறையாண்மை. உயிரிகள் என்ற அடிப்படையில் மனிதர்களுக்கு சுதந்திரம் உண்டு என்பது உயிரரசியல். மனித சுதந்திரத்தை தனது ஆளுகைத் தொழில்நுட்பத்தால் கட்டுப்படுத்துவதே இறையாண்மையின் அடிப்படை செயல்பாடாகும்.” (2010, பக்.52-53)

இவ்வாறு கருத்துரைப்பதாக ஜமாலன்  தனது நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும் நூலில் எடுத்துரைக்கிறார்.

‘அதிகாலை நிசப்தம்’ கதை சொந்த தேசத்து குடிமக்களின் மீது அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் வன்முறையை அம்பலப்படுத்தி அரசியல் சூழ்நிலைகளைப் பகடி செய்கிறது. ஆதவனுக்கு நிகழ்ந்தேறும் அழிச்சாட்டியங்கள் அரசின் அனைத்துவிதமான பிற்போக்குத் தன்மைகளையும் வெளிச்சப்படுத்திவிடுகிறது. ஆதவன், கல்யாணசுந்தரம் என்ற கதாபாத்திர புனைவின்வழி சுயசிந்தனையாளர்களின் தற்காலத்திய நிலைமையை வெளிப்படுத்தும் அரசியல் மிக முக்கியமானது. குந்திய தேசம், லிபரல் தேசம் என்ற கட்டமைப்பு, அரசின் முடியாட்சியை, மக்களின் மீது அக்கறை கொள்ளாத் தன்மையைக் காட்டுகிறது. சுதந்திர நாட்டில் அகதிகளாக்கப்படும் சுதேசி குடிகளின் இருப்பு  என்பது அரசின் பாசிச வடிவத்திற்குள் தகவமைத்துக் கொள்ளுதலாக மாறுகிறது. இறையாண்மை இறைவனடியாளாக மாற்றமுறும் செயல்பாட்டை அவதானிக்கமுடிகிறது. ஒற்றை மதமான ஒரு தேசத்தில் மாற்று இறைவடிவத்தைக் காணுதல் பார்வையிழந்தவருக்கு ஒப்பாகிவிடுகிறது. இங்கு பூக்கோ குறிப்பிடுவது போல ‘வாழ்தலின் மீதான அதிகாரம்’ கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வாழவென்றுமெனில் கொலையைத் தெய்வீகமானதென ஏற்றுக் கொள்ளுதல் அவசியமாக்கப்படுவதை இக்கதை கோடிட்டுக்காட்டுகிறது.

அரசு இறையாண்மையைச் சட்டரீதியாக கடைபிடித்தாலும் மதம் அடிப்படையில் அது தனது சுயஉருவத்தை வெளிப்படுத்தி விடுகிறது. அரசு சட்ட ரீதியாக கொலை செய்யும் தொழிலைக் கைவசம் வைத்திருப்பதால் தான் வகுத்த அறத்தை மீறுபவர்களைப் பாரபட்சமின்றி ஒறுக்கத் தலைபடுகிறது. இங்கு ஒட்டுமொத்த சுதேசிக் குடிகளின் இருப்பும் அரசை சார்ந்தே கட்டமைக்கப்படுகிறது. இதை மத அடிப்படைவாதம் முன்னின்று நிகழ்த்திக் காட்டுகிறது. சுதேசிக் குடிகள் இறையாண்மைக்குப் பதிலாக பாசிசத்தின் வாடையை நறுமணமாக நுகர்ந்து கொள்ள பணிக்கப்படுகின்றனர்.  அதில் அறிவு தீண்டத்தகாதது.

அவர் நெஞ்சின் மீது இரண்டு குண்டுகளையும், தலையில் ஒரு குண்டையும்  செலுத்தியவர்கள்அறிவு ஜீவிகளுக்கு எங்கள் தேசத்தில் என்ன வேலை, ஜெய் குந்தியா, ஜெய் மந்திரஎன்றவாறு முழக்கமிட்டுக் கொண்டே இருசக்கிர வாகனத்தில் புகையை கக்கியபடி வடக்கு நோக்கிப் போனார்கள். அவர்களின் உடலிலிருந்து வழிந்து வந்த அழுகிய உடல் வாசனையும், வாகனம் கக்கிய புகையும் சுவாசிக்க முடியாதளவு துர்நாற்றமாய் காற்றில் கலந்து குமட்டியது.” (அதிகாலை நிசப்தம், . 47 )

இவ்வாறு ‘அதிகாலை நிசப்தம்’ கதை, அரசு கருத்துருவம் சிந்தித்தலை சுதேசி குடிமக்களுக்கு ஒவ்வாததாகக் கட்டமைக்கும் பாசிச நுகர்வு அரசியலைச் சுட்டிக்காட்டுகிறது.

‘தேசவிரோதியின் எஞ்சிய குறிப்புகள்’ சமூக இயங்கியலின் மீது அக்கறை கொண்ட ஒரு படைப்பாளியை மையமிட்டதாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கவிஞன் அரசுக்கு எதிராக தனது கருத்தை முன்வைக்கும்போது தேசவிரோதி, சமூக விரோதி, அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவன் என்ற பெயரில் அடையாள அட்டையை வடிவமைத்து குடிமக்கள் ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் அவர்களின் அனுமதியுடன் ஒறுக்கப்படும் அரசதிகாரச் செயல்பாட்டை இக்கதை விளக்குகிறது. இதில் இடம்பெறும் கவிதைகள் அரசதிகாரத்தின் மேலாதிக்கத்தனத்தைக் குறியீட்டாக்கத்தின் வழியே வெளிப்படுத்துவதாய் படைப்பாளி கட்டமைத்திருக்கிறார்.

வானம் எப்போதும்

நீல நிறமாகவே இருப்பதில்லை

அது வண்ணங்களை

தந்துகொண்டே இருக்கும்

மகிழ்ச்சியின் போதது 

வானவில்லை ஈன்றும் 

தனக்கு பிடித்த வண்ணங்களை

வானமே முடிவுசெய்யும்.”

(தேசவிரோதியின் நாட்குறிப்பு, . 35 )

இவ்வாறு குருஸின் கவிதைகள் காற்றில் கலந்துவிடப்பட்டுள்ளன. அது நாசியின் வழியே நுழைந்து பக்குவப்பட்ட இதயத்தைத் தாயார்செய்து புரட்சிக்கு வித்திடும் என்ற கனவு இக்கதையின் வழியே பரிணமிப்பதைக் காணமுடிகிறது.

இறையாண்மைச் சமூகத்தில் அந்நாட்டு மக்களின் உயிர்த்திருத்தல் மீது அச்சத்தை உருவாக்கி குடிகளை ஒழுங்குபடுத்தி அறவியல் குடிகளாகக் கட்டமைத்து வைத்திருத்தல் அரசின் ஆளுகைக்கு அவசியமானது. அரசின் அறவியலுக்கு எதிராகக் கலகக் குரலை எழுப்புவது தண்டனைக்குரியது. அவர்களை ஒறுக்குவது நாட்டின், குடிமக்களின் பாதுகாப்பிற்கானது என்று அதிகார மேலாண்மை கொண்ட அரசு கருத்துருவம் பகிரங்கப்படுத்தி தனக்குச் சாதகமான குடிகளை உயிர்ப்பித்துக்கொள்கிறது. இந்த அறங்கள் பெரும்பாண்மை மத அடிப்படைவாதத்திலிருந்து அரசு தெரிவு செய்து கொள்கிறது.

அதிகாரங்களுக்கும் ஒழுங்குகளுக்கும் பழக்கப்பட்ட பொது உளவியல்ஒழுங்கே பாதுகாப்புஎன்கிற உணர்வை ஏற்படுத்துகிறது. உலகிலுள்ள எல்லா மதங்களும் இத்தகையஒழுங்கின்மை பற்றிய  அச்சத்தைஊட்டுவது சிந்திக்கத்தக்கது” (2010, பக். 326-327)

என்ற அ. மார்க்ஸின் கருத்து எண்ணத்தக்கது. தனது ஒழுங்கு விதிகளுக்குள் கட்டுப்பாத உடல்களை தேசத்திற்கு ஒவ்வாத உடல்களாக அடையாளப்படுத்தி குடிமக்களாக நிலைத்திருக்க அனுமதிப்பதில்லை. எனவே குடிமக்களாக தகவமைத்திருத்தல் அவசியமாக்கப்படுகிறது.

இதில் அரசு யாரை எதிரியாக அடையாளப்படுத்துகிறதோ அவர்கள் குடிமக்களுக்கும் எதிரிகளாகின்றனர். அதேபோல் சுதேசி குடிகள் சாதி, மத, இனம் சார்ந்த பிரிவினைகளால் தனிமைப்படுத்தப்பட்டு ஆளுதலுக்குட்படுத்தப்படுகின்றனர். இதில் பெரும்பாண்மை சிறுவாரிகளை அடக்கி ஆளுகிறது. சுதந்திர தேசத்து அரசும் பொதுக்குடிகள் என்று அணுகாது சாதி, மத, இன அடிப்படையில் சார்புத் தன்மையுடன் வெளிப்படுத்திக் கொண்டு தனது அதிகாரத்தை விசாலப்படுத்திக் கொள்கிறது. இந்தச் சிக்கலில் குடிமக்களாக இருத்தல் என்பது,

குடிமக்களின் அடையாளம் என்பதும் மற்ற அடையாளங்களைப் போலவே வித்தியாசங்களின் மூலமாகத்தான் வரையறுக்கப்படுகிறது. அந்நியரை, எதிரிகளைக் கட்டமைக்காமல் நீங்கள் குடிமக்களை வரையறுக்க முடியாது. கட்டமைப்பிற்குரிய நெகிழ்ச்சியையும் இறுக்கமற்ற தன்மையின் சாத்தியத்தையும் ஏற்கும்போது அங்கே வன்முறை தவிர்க்கப்படுகிறது. இயற்கையான வரையறை எனச் சொல்லி அங்கே இறுக்கமான வரையறையைத் திணிக்கும்போது வன்முறைக்கு வித்திடப்படுகிறது.” (2010, . 273)

என்ற அ. மார்க்ஸின் விளக்கத்தின்படி சொந்த தேசத்திற்குள்ளும் வெளி தேசத்திற்குள்ளும் எதிரிகளை அரசு உற்பத்தி செய்து அடக்கி ஆளுதலைக் கையாள்கிறது. இதில் குடிமக்கள் அடக்கியாளும் அரசை விமர்சிப்பது தேசதூரோகமாக வரையறுத்து சுதேசிக் குடிகளின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுகிறது. அதுவும் நாட்டின் நலன், அமைதி என்பதாக கட்டமைக்கப்படுகிறது.

அரசு மக்களைத் தங்களது கட்டுபாட்டிற்குள் வைத்திருக்க பயன்படுத்தும் பல்வேறு கருத்துருவங்களில் மதம் இன்றியமையாதது. இந்திய ஒன்றியத்தில் பல வழிபாட்டு முறைமைகளின் திரட்சியாக, காலனியவாதிகளால் கட்டமைக்கப்பட்ட இந்து மத அடிப்படைவாதம் மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் குடிமக்களாக நிலைத்திருப்பதன் மீது கேள்வியை எழுப்புகின்றது. தேசியக் கட்டமைப்பில் அவர்களின் இருப்பு நிலைகுலைக்கப்படுகிறது. தனது எதிரியாகக் கட்டமைத்துக்கொண்டு குடிமக்களாக வாழ்தல் என்பதை நிராகரிக்கும் பணியைச் செய்கிறது. அவ்வாறான நிலையை என்.ஐ.ஏ. சட்டத்தின்வழி இஸ்லாமிய மக்களின் வாழ்வியலின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைத் தாக்குதல்களை ‘இன்று தஸ்தகீர் வீடு’ சிறுகதை எடுத்துரைக்கிறது. இஸ்லாமியரை ஓர் அச்சப்பாங்கில் வைத்திருப்பதையும் நினைத்தபோதெல்லாம் அவர்களின்மீது மனித உரிமை மீறல்கள் செலுத்துவதையும் இதற்கென காவல்துறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதையும் நேர்த்தியாக இக்கதை வெளிப்படுத்துகிறது. இதனடிப்படையில் குடிமக்களாக இருத்தல் மீது இன்றைய அரசியல் கொடுங்கோண்மை செயலாற்றும் விதத்தை நுட்பமாகக் கதைக்களமாக்கியுள்ளார் படைப்பாளி.

இந்திய ஒன்றியத்தின் பசி நிவாரணி

ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களான விளிம்புநிலை மக்கள் துயருக்குள்ளான அவல வாழ்க்கையின் சிறுதுளியை மஞ்சுநாத் – ரன்வீர் – அகல்யா என்ற கதாபாத்திரங்களின்வழி மூலப்படிமத்திற்குள் பயணிக்க வைக்கிறது ‘அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி’ சிறுகதை. கடவுள் பெயரால் வேண்டுதலுக்காக, இன்ப நாட்டத்திற்காகப் பாதையாத்திரை செல்லும் கடவுள் நம்பிக்கையாளர்களைப் போலல்லாமல் தன் வாழ்வின் இருப்பை உறுதிபடுத்திக் கொள்ள பிளந்த பாதங்களைச் சக்கரங்களாக்கி பலநூறு கிலோமீட்டர் தூரத்தை, தன் குடும்பத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற அவதானிப்பில் நடைபயணம் மேற்கொண்ட சாமானிய மனிதர்களைக் இக்கதை காட்சிப்படுத்துகிறது. கடவுள் கோஷங்களுக்குப் பதிலாக பசி, வலி குறித்த கோஷங்கள் ரொட்டித் துண்டின் வழியே ஊடுருவி பாரதத்தாயின் நாசிக்குள் நுழைந்து இதயத்தைத் தயார்படுத்தி ஆற்றுநீரில் கரைந்தோடச் செய்த அதிகாரத்தின் அரியபணியை இக்கதை ஆவணப்படுத்துகிறது.

தன் குழந்தையின் பசியை ஆற்றமுடியாது நிர்கதியற்றுபோன ஒருதாய் மரணத்தைத் தழுவிக்கொள்ளும் முடிவு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கத்துடன் முடங்கிவிடுகிறது. தன்னுடன் பயணித்த தேசக் குடிமகளின் இறப்பை அறிந்த  மஞ்சுநாத்,

பையிலிருந்த ரொட்டி ஒன்றை எடுத்து ஆற்றை பார்த்து  “வெகுதூரம் போக வேண்டியுள்ளது சாப்பிட்டு போ அகல்யாஎன்று வீசினான். அது நீரின் வேகத்தில் மிதந்து கொண்டே போனது. அந்த ரொட்டி எதிர்படும் பாறையின் மீதுசட்டெனமோதியது. ரொட்டியாக இருந்ததால் அது இரண்டு துண்டாய் சிதறாமல் போவதை நினைக்கும்போது சீத்தாவின் முகமும், அவளின் தங்கையின் முகமும் நினைவுக்கு வர, அதற்குமேல் அவனால் அங்கு நிற்க முடியவில்லை வேக வேகமாக நடந்தான். ரன்வீர் சொன்னது முன்னும் பின்னுமாக இப்போது காதில் விழுந்தது. ‘ராமன் காத்த அகல்யா’.” (அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி, . 67 )

இங்கு ரொட்டி தேசிய உணவாகிவிடுகிறது. அரசின் திடீர் உத்தரவுகள் விளிம்பு நிலை மக்களை நிர்கதியற்றவர்களாக மாற்றி அவர்களது இருப்பின்மீது அதிர்வை ஏற்படுத்துகிறது. ஏழைகளில்லா பாரதத்தின் எதிர்கால வரைபடத்தை அரசு வரைந்துகொண்டிருக்கும் சூழலை இக்கதை மையச்சரடாக்குகிறது. கரவொலி எழுப்பி, பூ தூவி, முழக்கமிட்டு அரசுக்கு ஆதரவளிக்க நேரமின்மையில் தனது பாராதூரத்தை கடந்து செல்ல முயற்சிக்கும் புலம்பெயர் விளிம்புநிலைச் சமூகத்தின் பசியின், வலியின் குரலை அதிகாரம் நுகர்ந்து பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொள்ளும் போக்கு இக்கதையின்வழி வெளிப்பட்டு அதிகாரத்தின் ஏகபோகத்தனத்தை திரைப்படுத்துகிறது.

‘கதைகள் அரசியலைப் பேசக்கூடாது’ என்ற அறிவு மேதமைகளின் வாதத்தின்மீது உடைப்பை ஏற்படுத்துவிதமாக சையத்தைன் மொழியாடலாக,

அதிகாரத்தை நோக்கி உண்மையைச் சொல்லுதல் என்னும் விஷயத்தில் அறிவுஜீவிகளைப்போல எழுத்தாளர்களும் சமீப காலங்களில் செயல்படத் தொடங்கிவிட்டனர் (2004, . 17)

என்று அ. மார்க்ஸ் குறிப்பிடுவதைப்போல், சமகால அரசியலினால் சமூக இயங்கியலில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை, உணர்ச்சிப் போக்கை நுட்பமாக வெளிப்படுத்துவது அடுத்த தலைமுறைக்கான ஆவணமாக மாறிவிடுகிறது. அவ்வகையில் இருள் சூழ்ந்த அறையின் சாவித்துவாரத்தின் வழி உள்நுழைந்திருந்த வெளிச்சத்தின் கூர்மையை இக்கதைகள் முகாமிடுகின்றன. மத அடிப்படை, மதவெறி, அதிகார ஆளுகை குடிகளின் மீது ஏற்படுத்தும் இருப்பு குறித்த அச்சத்தின் வெளிச்சத்தில் தங்களது முகத்தை புகைப்படம் எடுத்துக் கொள்கின்ற அதிகாரவர்க்கத்தின் போலிமை தனங்களை இக்கதைவழியே  அடையாளப்பட்டு நிற்கிறது.

ஊரடங்கு காலத்தில் சக மனிதர்களின் வாழ்வியலைப் பேசும் கதைகளில் ‘கானல் நீர் உருவங்கள்’ மிக முக்கியமானது. இரந்துண்டு வாழ்பவர்கள் ஊரடங்கு காலத்தில் நேர்ந்த இன்னல்பாடுகளையும் வளர்ப்பு விலங்குகள் கைவிடப்பட்ட நிலையையும் இக்கதை காட்சிப்படுத்துகிறது. அரசு தன்னைக் கைவிட்ட போதிலும் மனிதத்தன்மை உயிர்ப்புடன் உலாவுகிறது என்பதை ஜானகிராமன் கதாப்பாத்திரத்தின்வழி இக்கதை எடுத்துரைக்கிறது. முகம் அறியா மனிதர்களின் சிறு உதவி மரணித்தலிலிருந்து தள்ளிப்போடும் கருவியாகிவிடுகிறது. அவர்களின் முகம் கானல்நீராக தெரிந்தாலும் மனிதம் உயர்ந்த சிகரமாக காட்சியளிக்கிறது.  இக்கதையும் பசியின் தாக்கத்தை எடுத்துரைக்கிறது. இந்திய ஒன்றியத்தில் கொரோனா நோய்த் தொற்று காலத்தில் விளிம்புநிலையினரின் பசி நிவாரணியாக ரொட்டியும் பண்ணும் மாறியிருக்கும் அரசியலை படைப்பாளி வெளிச்சப்படுத்தியுள்ளார்.

சமூக இடைவெளி மனிதத்தைத் தின்று செறித்துக்கொண்டிருக்கும் ஊரடங்கு காலத்தில் விளிம்புநிலையினரின் வாழ்வியலையும் விலங்குகளின் கைவிடப்பட்ட அவலங்களையும் கதைகள் முன்வைக்கின்றன. கானல்நீரில் கைவிடப்பட்ட ஒரு நாயின் பசியைத் தனக்குக் கிடைத்த இரண்டு பண்ணில் ஒன்றை அந்த நாயிக்குக் கொடுக்கும் ஜானகிராமனின் மனிதத் தன்மைபோல் மனிதனுக்கும் வளர்ப்பு விலங்கிற்குள் இடையே பிணைந்திருக்கும் அன்பை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தும் கதையாக ‘பஷிரின் கடைசி கிடாய்’ அமைந்துள்ளது. தனது கிடாய் சூறையாடப்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் அதைத் தேடியலையும் பஷிரின் தவிப்பு, மனிதம் என்பது சக மனிதர்களுக்கிடையிலாக மட்டுமின்றி சக உயிரிகளுக்குள்ளும் இருக்கின்றது என்பதை வெட்டவெளிச்சமாக்குகிறது. பஷிரின் தவிப்பும் செங்கிடாயின் உறாசலும் உலகெங்கும் பரவிக்கிடக்கும் அன்பைப் பறைசாற்றுவதாய் இக்கதை மையம் கொள்கிறது.

மனிதம் இன்று அரசியல் சொல்லாடலாக்கப்பட்டுள்ளது. இயல்பாக தோன்றிய உணர்வை இன்று தட்டியெழுப்ப வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சாதி, மத, மொழி, பாலினம் பாராது பொதுநோயாகப் பரவிக்கொண்டிருக்கிறது. பாசிசவாத தொற்றும் கொரோனா நோய்த் தொற்றும் மனிதர்களை அலைக்கழிக்கச் செய்துவருகிறது. சாதி, மத, இன இடைவெளியுடன் தனிமனித இடைவெளி நாடு முழுவதும் பொதுக்குரலாக ஒலிக்கப்படுகிறது. இச்சூழலில் மனிதத்தின் இடம் பெரும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. மனிதத்தின் மீதான நம்பகத்தன்மையைக் கதைகள் உருவாக்கியிருப்பது முக்கியமானது.

 

மனிதத்தின் மிஞ்சிய பாகங்கள்

கண்ணுக்குப் புலப்படாத கிருமியை ‘கோ கொரோனா’ என்று துதிபாடி விரட்டியடித்ததிலும் வீட்டில் இருக்கிற சட்டி, பானை, ஈயம், பித்தாளை பொருட்களை அடித்து கிருமியை கதிகலங்கச் செய்ததிலும் பூரிப்பைக் கண்ட மத அடிப்படைவாதத்தின் முகத்திரையைக் கிழிக்கும் சிறுகதையாக ‘கிருமி நாசினி’ பரிணமித்திருக்கிறது. கிருமி நாசினி என்றவுடன் அது கிருமிகளைக் கொல்லும் மருந்து என்பது தெரிந்த ஒன்றாக மாறிவிட்டிருந்தாலும் சமூகக் கிருமிகளை அடையாளப்படுத்தும் நாசினியாக இக்கதை மையங்கொண்டுள்ளது. மனிதத்தை நேசிக்கும் சமூக உறவுகளைப் பிரித்தாளும் அரசியலானது நெருக்கடி காலங்களிலும்கூட உக்கிரமாக செயலாற்றிக் கொண்டிருப்பதையும் அதன் அரசியலின் கோரமுகத்தையும் விமர்சனப்படுத்துகிறது. பர்க்கத், குமார் என்ற கதாபாத்திரத்தின் வழியாக இந்திய ஒன்றியத்தின் அடிப்படையைச் சிதைக்கத் துடிக்கும் மத அடிப்படைவாதத்தின் செயலை உடைக்கிறது.  நோய்பரவலின் ஆணிவேரை உலகமே ஆராய்ந்து கொண்டிருக்கும் சூழலில் இங்கு இஸ்லாமியர்கள்தான் நோயைப் பரப்பினார்கள் என்று பிரச்சாரம் செய்து அவர்களை முடக்கும் செயலில் ஈடுபட்ட பெரும்பாண்மை மத அடிப்படைவாதிகளின் செயல்பாட்டால்,

மொஹல்லா வாசிகள் யாராவது அவசரத்துக்கு காவல்துறை அனுமதி வாங்கி வெளியே வந்தால் அவர்களை பார்த்து பல அடி தள்ளி நின்றார்கள். குல்லாவும் பர்தாவும் அபாயத்தின் குறியீடானது. “கொஞ்சம் அடங்கி ஒடுங்கி ஓர் இடத்துல இவங்களுக்கு உட்கார முடியாது, அப்படியே மேஞ்சு ஊருக்கே பரப்பி விடனும், ‘ச்சைஇவுங்க புத்தியே இப்படித்தான்என்று காதுபடவே பேசுவதால் மொஹல்லாவாசிகள் யாருமே வெளிய போக விரும்பவில்லை.” (கிருமி நாசினிகள், . 77)

இவ்வாறு சமூக நெருக்கடிக்கு ஆளாக்கி, அவர்களின் இருப்பை நிராயுதமானதாக்கி அவர்கள் மீது விசமத்தனமான பரப்புரகளை விதைக்க முயற்சித்ததை இக்கதை எடுத்துரைக்கிறது. சமூகத்தின் இருப்பியலுக்கு நஞ்சாக விளங்கும் கிருமிகளை அகற்றிவிட்டு சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்ற மனித அடிப்படை உரிமைகளை மையமிட்டு இயக்கம் கொள்ள வேண்டிய அவசியத்தைப் படைப்பாளி நுட்பமாக வெளிப்படுத்துகிறார்.

 

படைப்பு மேதமையும் மரபார்ந்த அறிவும்

கதையையோ, கவிதையையோ உற்பத்தி செய்யும் படைப்பாளி சமூகம் குறித்த ஒரு அளவுகோலுடன் தன்னை சார்புபடுத்தி ஒப்புவித்துக் கொள்கிறான். படைப்பாளி கதைக்குள் வீசி எறிப்பட்ட மாந்தர்களே கதாபாத்திரங்கள். அவர்களை உற்பத்தி செய்ய படைப்பாளிக்கு மூலதனச் செலவு தேவையில்லை. மூளைச் செலவும் அவசியமில்லை. ஏற்கனவே மூலப்படிமத்திற்குள் பொதுபுத்திகளாக பெருகதையாடல்களாக படிந்து கிடக்கும் சமூக உயிரிகளைத்தான் அவர் புனைகிறார். இந்த படைப்பு பேராளுமைகளுக்கு,

இன்றும் நம்முடைய தினசரிகளிலும் வாரப் பத்திரிகைகளிலும் வார இருமுறை பத்திரிகைகளிலும் கொள்ளை, கொலை, பாலியல் வன்முறை, சமூகம் அங்கீகரிக்காத உறவு முறைகள் என்று செய்திகளால் நிரம்பியிருக்கிறது. ஆனாலும் நம்முடைய தமிழ்ப் படைப்பாளிகள் தூய்மையைப் போற்றுபவர்களாகவும் உன்னதங்களை நோக்கியே பயணிப்பவர்களாகவும் இருப்பதில் சௌகரியம் காண்கிறார்கள். இவர்களுடைய பார்வையில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் செய்கிறவர்கள் எல்லாம் மிகவும் கீழ்த்தரமான மனிதர்கள்” (2009, . 69)

என்று ராமானநுஜம் குறிப்பிடுவதுபோல, இந்த புத்தகப்புழு மேதமைகள் தங்களை அதிகாரத்திற்கு விசுவாசிகளாகத் தகவமைத்துக் கொள்வதில் நடுநிலையாளர்களாகி விடுகின்றனர்.

எதார்த்த வாழ்வியலில் நடக்கும் நிகழ்வுகளைக் காட்சிப் படிமங்களாக வரைந்துகாட்டும் படைப்பாளி அதனுள் இயங்கும் கதை, கதாபாத்திரங்கள், இயல்பு வாழ்க்கையிலிருந்து அசலாக்கப்பட்டிருந்தாலும் அது எண்ண பேசவேண்டும், அது உயிர்த்திருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதையெல்லாம் தீர்மானிக்கும் வல்லமை அவரிடமே உள்ளது. இந்த படைப்பு அரசியலை பகிர்ந்தளிப்பதே ‘சாம்பல் பறவை’ சிறுகதை. இதில் ஆனந்த்ஸ்வரன்  என்ற படைப்பாளி எழுதிய அச்சிற்குத் தயாராக இருக்கும் புத்தகம் சாதியம் குறித்த அவனது நிலைப்பாட்டையும் அவனது பக்கச் சார்பையும் முன்வைத்து விசாரணை செய்வதாகப் புனையப்பட்டுள்ளது. தன்னை ஒரு நடுநிலமைவாதியாக அறிவித்துக் கொள்ளும் ஆனந்த்ஸ்வரன், ஒரு படைப்புக் கடவுளாக தன்னைத்தானே கருதிக் கொள்வதை,

நான் ஒரு எழுத்து பிரம்மன், என்னிலிருந்துதான் நீ பிறக்கிறாய், பல ஆயிரம் ரசிக்கிறார்கள் என் எழுத்துக்கு விசிறி, இந்த சமூகத்தை என்னைப்போல எந்த எழுத்தாளனும் சரியாக உள்வாங்கவில்லை என்று சொல்லாத ஆளே இல்லை, என்னைப்பார்த்து எழுதுவதை நிறுத்தி கொள்ளச் சொல்கிறாய்.. என்ன ஆணவம் உனக்கு…” (சாம்பல் பறவை, . 86 )

என்ற வரிகளில் கதை உணர்த்துகிறது. சாதியத்தின் ஆணிவேர் அகமணமுறையில்தான் உள்ளது எனவே அதை ஒழித்து புறமணமுறையை அதிகரிக்கச் செய்யவேண்டும் என்று அம்பேத்கர் குறிப்பிடுவார். கதையில் வரும் படைப்பாளி அகமணமுறையை நிலைத்திருக்கச் செய்யவும் புறமண முறையை நாடிச் சென்றால் கருமவினை ஆட்கொள்ளும் என்றும் தனது பொதுபுத்தியிலிருந்து  புனைந்திருக்கும் செயலை எதிர்த்து அவனது புத்தகம் கலகக் குரல் எழுப்புகிறது. தனது போதாமையை உணர்ந்த படைப்பாளி புத்தகத்தை தீயிட்டுக் கொளுத்துவது தங்களை படைப்பு பேராளுமைகளாக கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட மேதாவிகளாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் படைப்பாளர்களின் முகத்திரையைக் கிழித்து சமூகம் குறித்த தங்களது அறிவு போதாமையை உணர்ந்து அசல்முகத்தைக் காட்ட முனையும் கதைக்களமாக இது அமைந்துள்ளது.

பிம்ப அரசியலும் அன்பும்

சக மனிதனின் மீது அன்பு காட்டாத, அவனது வாழ்வியலைப் புரிந்து கொள்ள அக்கறை கொள்ளாத மனிதர்கள் இச்சமூகத்தில் உலா வருவது இயல்பாகி உள்ளது. அவ்வகையில் இத்தொகுப்பில் ‘எம்ஜியாருக்கு வயசாகிடுச்சு’ கதை பொன்மனச் செம்மலாக மேடைதோறும் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு கலைஞனின் வாழ்வியலை அரசியல் இலாபத்திற்காகச் சுரண்டி வாழும் மனிதனையும்  ‘வறண்ட நிலத்தில் பூ’ தன் வாழ்நாள் முழுக்க உடன் பயணித்த மனைவியின் அன்பைப் புரிந்து கொண்ட கணவனின் அரவணைப்பும் இரு துருவங்களை முன்வைக்கிறது. அன்பின்மை × அன்பு  என்ற இணைமுரண் இவ்விரு கதைகளுக்குள் மையப்பொருளாகிறது.

எம்ஜியார் என்ற ஆளுமை மக்கள் மனதில் இன்றும் உயிர்த்திருக்கும் நிலையை அரசியலாக்கி அனுகூலம் பெறத் துடிக்கும் அரசியல் தலைவர்கள், எம்ஜியாரின் தாக்கத்தில் தங்களை அவ்வாறே உருவகித்துக் கொண்டு மேடை தோறும் வேடமிட்டு வாழும் கலைஞர்களைப் பயன்படுத்திக் கொண்டு தங்களை மக்கள் சேவகர்களாக முன்னிறுத்த முயலும் அரசியல்வாதிகளின் சுரண்டல்புத்தியை இக்கதை பேசுபொருளாக்குகிறது. எம்ஜியார் என்ற பிம்ப அரசியலானது அன்பின் வடிவமாக அனைத்து மக்களாளும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். பிம்ப அரசியலைக் கொண்டு மக்களையும் அவர் பிம்பம் தரித்த மேடை கலைஞர்களையும் அவரது கட்சி சார்ந்தவர்களே சுரண்டும் அரசியல் செயல்பாடு அன்பின் வலிமை நீர்த்துப்போனதற்கான குறியீடாகிறது. எங்கும் எளிமையானவராகக் காட்டிக்கொள்ளும் பொன்மனச்செம்மல், எளிமையான வாழ்வியலில் உழுன்று கொண்டிருக்கும் வேடமிடும் பொன்மனச்செம்மல் என்ற முரண் தோற்றத்தை இக்கதை சிறப்பாகக் கையாண்டுள்ளது.

‘வறண்ட நிலத்தில் பூ’ சிறுகதை, தான் இளைஞனாக இருக்கும் போது திரையில் இரசித்த நடிகையின் பிம்பத்தை அளவீடாகக் கொண்டு தனக்கு இணையான மனைவியுடன் ஒப்பிட்டு வாழும் கணவனின் ஆணாதிக்க செயலைப் பேசுகிறது. தனக்கு வயது முதிர்ந்த பருவத்தில் தனது உளவியல் சிக்கலை அறிந்து இணையின் அன்பை நாடிச் செல்லும் கணவன் வாழ்வின் இறுதிகாலத்தில் தான் செய்த தவறை உணர்ந்து இணையாளிடம் மன்னிப்பு கோருவது அன்பின் இருப்பை உறுதிபடுத்துகிறது. வறண்ட நிலம் என்பது முதுமையையும் பூ அம்முதுமையில் மொட்டவிழ்க்கும் அன்பையும் வெளிப்படுத்துவதாய் இக்கதை பொருண்மை அமைந்துள்ளது.

இவ்வாறு ‘அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி’ சிறுகதைத் தொகுப்பு நடப்பியலை நுட்பமாக எடுத்துரைக்கும் கதையாடல்களைக் கொண்டிருக்கிறது. சமகால அரசியல், அதனால் ஏற்பட்ட விளைவுகள், மனிதத்தின் வடிவங்கள், அன்பின் இருப்பு குறித்து உரையாடுகிறது.

யதார்த்தவாதமே மொழிக்கான புனைவுத் தன்மையை மறுத்து, ஒருவகை நிஜத்தன்மை இருப்பதான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. அதாவது மொழி புற உலகை பிரதிபலிக்கும் என்பதுவே, மொழி குறித்த யதார்த்தவாதத்தின் அடிப்படைத் தர்க்கமாகும். எந்த அளவிற்கு ஒரு படைப்பு துல்லியமாக உலகைப் பிரதிபலிக்கிறதோ அந்த அளவிற்கு அது சிருஷ்டிகரமானது‘, சிறந்தது. அதனை உருவாக்கிய ஆசிரியன் யதார்த்தத்துடன் நெருக்கமான உறவு கொண்டு விட்டவனாக கருதப்படுகிறான். (2017, .76)

என்ற ஜமாலனின் கூற்றுபடி படைப்பாளி எதார்த்த்துடன் நெருக்கமான உறவு கொண்டு சமூகத்தின் பரிமாணங்களை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார்.   பாசிசத்தைக் கழுவேற்றி மனிதத்தை விரவச் செய்து அன்பில் உறவாட இச்சமூகத்தைத் தூண்டும் கதைகளாக இக்கதைகள் அடுத்த தலைமுறைக்கான ஆவணமாக மாறிவிட்டிருக்கிறது.


. சின்னச்சாமி

 

ஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள்
  1. கரீம், அ., (2021), அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி, (முதற்பதிப்பு), கோயம்புத்தூர், எதிர் வெளியீடு.
  2. நோயல் ஜோசப் இருதயராஜ், (2013), கோட்பாட்டு விமர்சன யுகம் விமர்சனக் கோட்பாட்டு யுகம் கலை, தத்துவம் பற்றிய பின்நவீனத்துவச் சொல்லாடல்கள், (முதற்பதிப்பு), திருச்சி-621310, அடையாளம் வெளியீடு.
  3. ஜமாலன், (2017), மொழியும் நிலமும், (இரண்டாம் பதிப்பு), மதுரை, கருத்து = பட்டறை வெளியீடு.
  4. ஜமாலன், (2010), நவீனத் தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும், சென்னை-5, புலம் வெளியீடு.
  5. மார்க்ஸ்.அ., (2004), அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம், (முதற்பதிப்பு), சென்னை-5, கருப்புப் பிரதிகள் வெளியீடு.
  6. மார்க்ஸ், அ., (2010), பின் நவீனநிலை இலக்கியம் அரசியல் தேசியம், (முதற்பதிப்பு), சென்னை-5, புலம் வெளியீடு.
  7. ராமாநுஜம், (2009), தற்கொலைகளைக் கொண்டாடுவோம், (முதற்பதிப்பு), சென்னை-5, புலம் வெளியீடு.

 

நூல் விபரம்

அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி

வகை : சிறுகதைகள்

ஆசிரியர் : அ.கரீம்

பதிப்பகம் :  எதிர் வெளியீடு

பதிப்பு ஆண்டு : 2021

விலை : ₹140


 

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x